விவசாய நிலங்கள் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக குற்றச்சாட்டு; “தமிழகத்தின் வளர்ச்சியை முடக்குவது நியாயமல்ல” என விமர்சனம்
பரந்தூர் மற்றும் ஓசூர் விமான நிலையத் திட்டங்களில் தமிழக அரசு வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். பரந்தூருக்கு ஒரு நியாயம், ஓசூருக்கு ஒரு நியாயமா என்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி இன்று சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும்போது விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும், ஓசூரில் விமான நிலையம் அமைந்தால் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய திட்டங்களுக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும் தெரிவித்தார்.
இந்த விவாதத்தைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட நயினார் நாகேந்திரன், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி தமிழக அரசு கைவிட்டதாக சுட்டிக்காட்டினார். அதேநேரத்தில் ஓசூர் விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருக்கும் என்று அரசே சட்டப்பேரவையில் கூறுவது முரண்பாடாக இருப்பதாக அவர் விமர்சித்தார். பரந்தூரில் விமான நிலையத்திற்காக ஏற்கெனவே சுமார் 1,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுதான் பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவதற்கான காரணம் என்றால், அதே அணுகுமுறை ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கும் பொருந்த வேண்டுமல்லவா என்று கேள்வி எழுப்பினார்.
இருங்காட்டுக்கோட்டை சிப்காட், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட தொழில் பகுதிகளுக்கும் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கும் அருகில் பரந்தூர் அமைந்திருப்பதையும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார். தமிழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான திட்டங்களில் அரசு ஒரே மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்திய நயினார் நாகேந்திரன், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்குவது நியாயமல்ல என்றும் விமர்சித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்ட தமிழக அரசு, ஓசூரில் புதிய விமான நிலையத்தை முன்னெடுக்க உள்ள நிலையில், விவசாய நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விவகாரம் தற்போது புதிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.






