11 நாட்கள் நடைபெறும் 54-வது ஆண்டு விழா; முக்கிய நிகழ்ச்சிகளையொட்டி போக்குவரத்து மாற்றம்
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 54-வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று மாலை கொடி பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து கொடியேற்றம் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளன. இந்த ஆண்டு “அமைதி” என்பதை மையக்கருத்தாகக் கொண்டு திருவிழா நடைபெறுகிறது. 11 நாட்கள் ஆன்மிக நிகழ்ச்சிகள் திருவிழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகின்றன.
ஆகஸ்ட் 30-ஆம் தேதி நற்கருணைப் பெருவிழாவும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி நற்கருணை ஊர்வலமும் நடைபெறுகிறது. செப்டம்பர் 7-ஆம் தேதி முக்கிய திருத்தேர் பவனி திருவிழா நடைபெறுகிறது. செப்டம்பர் 8-ஆம் தேதி அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழா கொண்டாடப்பட்டு, மாலையில் கொடியிறக்கத்துடன் 11 நாள் விழா நிறைவடைகிறது.
பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம்
விழாவையொட்டி பெசன்ட் நகர் பகுதியில் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சென்னை போக்குவரத்து காவல்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 29, செப்டம்பர் 7 மற்றும் செப்டம்பர் 8 ஆகிய முக்கிய நாட்களில் பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் கடற்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.
6-வது அவென்யு கடற்கரை சாலை, 2-வது அவென்யு, 3-வது அவென்யு, 4-வது பிரதான சாலை மற்றும் 7-வது அவென்யு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலங்களின்போது போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும். ECR மற்றும் OMR பகுதிகளில் இருந்து பெசன்ட் நகர் நோக்கி வரும் வாகனங்கள் தேவைக்கேற்ப அடையாறு பேருந்து நிலையம், இந்திரா நகர் வழியாக திருப்பிவிடப்படும்.
வாகனங்களை எங்கே நிறுத்தலாம்?
திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, பெசன்ட் நகர் 2-வது பிரதான சாலை, 4-வது அவென்யு மற்றும் 17-வது குறுக்குத் தெரு உள்ளிட்ட இடங்களில் வாகன நிறுத்த வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முக்கிய ஊர்வலங்கள் நடைபெறும் நேரங்களில் எலியட்ஸ் கடற்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார சாலைகளில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.






