எம்.எஸ். தோனி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் அனைவரின் மனதிலும் சிறிய தோனியாக இருந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் (வயது 34). இவர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழில்போட்டி காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதாவது காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுஷாந்த் சிங்கின் தந்தை, சுஷாந்த் சிங்கின் காதலி(ரியா சக்ரபோர்த்தி)மீது புகார் அளித்துள்ளார். அதில் சிலர் சுஷாந்த் சிங்கிற்கு மன ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 15 கோடி ரூபாயை எடுத்து அதனை வேறு ஒருவர் வங்கி கணக்கில் மாற்றியதாகவும் புகார் அளித்துள்ளார்.
சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு மற்றும் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா சக்கரபோர்த்தி,சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சில நாட்கள் முன்பு வரை அவருடன் பாந்திராவில் ஒரே வீட்டில் வசித்ததாக கூறப்படுகிறது.
சுஷாந்தின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பீகார் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து மத்திய அரசும் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதியளித்தது. ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி சுஷாந்த் வழக்கு தொடர்பாக ரியா சக்ரபோர்த்தி, அவரது நண்பர் சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி உள்ளிட்ட சிலர் மீது CBI முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், பணமோசடி குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ள ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ரியா சக்ரபோர்த்தியின் மேலாளரான சாமுவேல் மிராண்டா மும்பையில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்திற்கு நேற்று விசாரணைக்காக சென்றார். அவரிடம் அதிகாரிகள் நேற்று இரவு வரை விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து 9 மணிநேரம் நடந்தது. நீண்ட நேர விசாரணைக்குப்பிறகு அமலாக்க துறை அலுவலகத்தில் இருந்து விசாரணை முடிந்து வெளியே வந்த அவர்.புறப்பட்டு சென்றார்.