“ராமர் ஒரு நேபாளி, அவர் இந்தியர் அல்ல… இந்தியாவில் இருப்பது போலியான அயோத்தி” என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசுக்கும், நேபாள அரசுக்கும் இடையேயான உறவில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை நேபாள மேப்புடன் இணைத்தது, இந்திய சேனல்களை தடை செய்தது என்று பல அதிரடியான நடவடிக்கைகளை நேபாள அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நேபாள பிரதமரின் இல்லத்தில்நடந்த பானு ஜெயந்தி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கே.பி.சர்மா கூறியதாவது: “பகவான் ராமர் ஒரு நேபாளி, அவர் இந்தியர் அல்ல, உண்மையான அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது. உண்மையான ராம இராஜ்ஜியமான அயோத்தி, நேபாளத்தில் உள்ள பிர்கஞ்சின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. ஆனால், இந்தியாவிலோ பிரச்னைக்குரிய அயோத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சீதா, இந்தியரான ராமனை மணந்தார் என்ற தவறான எண்ணத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் ராமர் இந்தியர் அல்ல நேபாளி .
நேபாளத்தின் கலாச்சார உண்மைகளை இந்தியா மறைத்து திருடிக்கொண்டுள்ளது. இந்தியா ‘போலி அயோத்தி’ ஒன்றை உருவாக்கியுள்ளது. ராமரின் இராஜ்ஜியம் உத்தரபிரதேசத்தில் இல்லை. அது நேபாளத்தில் உள்ள பால்மிகி ஆசிரமத்திற்கு அருகில் இருந்தது. பால்மிகி நகர் என்று அழைக்கப்படும் இடம், தற்போது பீகார் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ளது. அதில் சில பகுதிகள் நேபாளத்திலும் உள்ளன.
அதுமட்டுமல்ல, தசரதருக்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்த, பண்டிட்ஜி ரிஷிக்கு சொந்தமான வால்மீகி ஆசிரம் இருந்த இடமான தோரியும், நேபாளத்திற்கு சொந்தமானது. அயோத்தி இந்தியா கூறும் உத்தரப்பிரதேசத்தில் இருந்திருந்தால், அங்கு வசிப்பவர்கள், எப்படி சீதையை திருமணம் செய்து கொள்ள ஜனக்பூருக்கு வந்தார்கள்? அந்த நேரத்தில் தொலைபேசிகள் இல்லை, அதனால் அவர்கள் எவ்வாறு தொடர்பு கொண்டனர்? அந்த சமயங்களில், அருகிலுள்ள ராஜ்யங்களில் மட்டுமே திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. திருமணம் செய்ய, யாரும் இவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டிருக்க மாட்டார்கள். ” என்று கூறியுள்ளார்.