வாகனங்கள் ஓட்டிகள் எதற்கெல்லாம், காப்பீடு திட்டத்தில் இழப்பீடு கோர முடியும் என்பதற்கான விவரங்களை காணலாம்.
விபத்துகள் மட்டுமின்றி மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களாலும் வாகனங்கள் சேதமடைவது என்பது இயல்பாகிவிட்டது. அதன் காரணமாகவே, தற்போது வாகனம் வாங்கும்போதே பதிவு செய்வதோடு, அதற்கான காப்பீடும் செய்யப்படுகிறது.
வாகனங்களுக்கு பொதுவாக இரண்டு வகையிலான காப்பீடு திட்டங்கள், அதாவது ஒருங்கிணைந்த காப்பீடு மற்றும் 3-ம் நபர் காப்பீடு ஆகிய காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் வாகனங்களின் உரிமையாளர்கள் 3-ம் நபர் காப்பீட்டை தேர்வு செய்வர். அத்தகையோர் மழை, வெள்ள சேதத்துக்கு இழப்பீடு கோர முடியாது. ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தை வைத்திருப்பவர்கள் இழப்பீடு கோரலாம்.
ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தின்படி, மழை நீர், வெள்ள நீர் புகுந்து பாதிப்புக்குள்ளான கார், மோட்டார்சைக்கிள் போன்ற வாக்னங்களுக்கு இழப்பீடு கோரலாம். வீட்டுக்கு வெளியே நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றின் என்ஜின் பாதிக்கப்பட்டாலும் இழப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
பாலங்கள் மீது செல்லும்போது பாலம் திடீரென உடைந்து வாகனம் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், மழையில் மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகள் வாகனங்கள் மீது விழுந்து சேதம் ஏற்பட்டிருந்தால், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் பயனாளர்கள் இழப்பீடு கோரலாம்.
தற்போதைய உயர்தொழில்நுட்ப வாகனங்களில் அதிநவீன, மின் சென்சார் கருவிகள் உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வாகனங்கள் மழை, வெள்ள நீரில் சிக்கி இருந்தால் அதை மீட்டு விரைவாக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கோரிக்கையை வைக்க வேண்டும். தாமதமானால், அதை பெரும்பாலும் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. சில சமயங்களில் உரிய நிவாரணம் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.