இந்தியாவில் மின்சார வாகனங்கள் மீதான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக இருப்பதோடு மட்டுமில்லாமல், உச்சபட்ச விலையைத் தொட்டு வரும் எரிபொருளின் விலைவாசியில் இருந்தும் இது நம்மை தப்பிக்க வைக்க உதவும்.
இதனால் உலக நாடுகள் சிலவற்றில் மின்சார வாகன விற்பனை ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஆனால், இந்தியாவில் இப்போதுதான் மின் வாகனங்கள் மக்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியுள்ளன. இதைத்தொடர்ந்து, பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் புது முக மின்சார வாகனங்களை இந்தியாவில் களமிறக்கி வருகின்றன.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரவைக் டைனமிக்ஸ் எனும் நிறுவனம்,தனது புதிய மின்சார கார் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் எக்ஸ்டின்க்சன் எம்கே1 என்ற பெயரில் அந்த எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன் அக்காரின் சிறப்பம்சம் குறித்தும், தோற்றம் குறித்தும் தெரிவித்துள்ளது. இதனால் எக்ஸ்டின்க்சன் எம்கே1 எலெக்ட்ரிக் கார் முதல் முறையாக வெளியுலகிற்கு அறிமுகமாகியுள்ளது.
இந்த நிறுவனம், சமீபத்தில்தான் மின்சார கார் உருவாக்கத்திற்கான சோதனையைத் தொடங்கியது. இதைத் தொடங்கிய வெகுவிரைவிலேயே கான்செப்ட் மாடல் அல்லது ப்ரீ புரொடக்சன் பணி வரை அது சென்றிருக்கின்றது. அதேசமயம், தற்போது வெளியாகியுள்ள தகவலில் எக்ஸ்டின்க்சன் எம்கே1 எலெக்ட்ரிக் காரின் அனைத்து தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.
மக்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டுகின்ற வகையிலான குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே அது வெளியிட்டுள்ளது. இதன்படி, கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் எக்ஸ்டின்க்சன் எம்கே1 இரு கதவுகளைக் கொண்ட கூப் ரக காராக கிடைக்க இருப்பதாக உறுதியாகியுள்ளது.