கார்களில் இனி ஸ்பேர் டயர் கட்டாயமில்லை என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களை செய்துள்ளதன் மூலம், ஸ்பேர் டயர்கள் (Spare Tyres) பற்றிய ஒரு விதிமுறையை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன்படி கார்களில் இனிமேல் ஸ்பேர் டயர்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இதன்மூலம் கார்களில் ஸ்பேர் டயர்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இடம் இனி காலியாகும்.
இந்த புதிய விதிமுறை அனைத்து வகையான வாகனங்களுக்கும் பொருந்தும் என்றாலும் கூட, எலெக்ட்ரிக் கார்களுக்குதான் அதிக பலன் கிடைக்க போகிறது. ஏனெனில் எலெக்ட்ரிக் கார்களில் பெரிய பேட்டரியை பொருத்துவதற்கு அதிக இடம் கிடைக்கும். இதன் மூலமாக எலெக்ட்ரிக் கார்களின் டிரைவிங் ரேஞ்ஜை உயர்த்த முடியும்.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காகவே ஸ்பேர் டயர்கள் பற்றிய விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தங்களை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விதிமுறைப்படி, ட்யூப்லெஸ் டயர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் அல்லது டயர் ரிப்பேர் கிட் உடன் வரும் மற்றும் 8 பயணிகள் வரை அமரக்கூடிய கார்களுக்கு ஸ்பேர் டயர் கட்டாயமில்லை.
ஏற்கனவே குறிப்பிட்டதை போல் எலெக்ட்ரிக் கார்களுக்கு இதனால் பலன் கிடைக்கும். இந்தியாவில் மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ச் குறைவாக இருப்பதால், அவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்திய மார்க்கெட்டில் தற்போது பல்வேறு கார்களில், ஃபேக்டரி-ஃபிட்டட் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System – TPMS) உடன் வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, விலை உயர்ந்த கார்களில் மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சிறிய கார்களில் கூட இந்த பாதுகாப்பு வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவு காரணமாக கார் உற்பத்தி நிறுவனங்கள் வரும் காலங்களில், ஸ்பேர் டயரை வழங்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக எளிமையான டயர் பஞ்சர் ரிப்பேர் கிட்டை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் டயர்களில் காற்றை நிரப்ப பயன்படும் கம்பரசரை கார் உற்பத்தி நிறுவனங்கள் வழங்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.
2019ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் 3.5 டன்னுக்கும் குறைவான எடை கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும். பேட்டரியின் அளவை அதிகரிப்பதற்கு கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.