கடும் வர்த்தகப் பாதிப்பில் சிக்கி இருக்கும் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் இருக்கும் இரு கார் தொழிற்சாலைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் ஃபோர்டு. இந்நிறுவனம் உலகம் முழுவதும் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவுகளை வைத்துள்ளது. இந்தியாவிலும் இந்த நிறுவனம் தொழிற்சாலைகளை நிறுவி இருக்கிறது. ஆஸ்பயர், ஈக்கோஸ்போர்ட், ஃபிகோ உட்பட பல்வேறு கார் வகைகளை தயாரித்து விற்கும் இந்நிறுவனம் கடுமையான நஷ்டம் மற்றும் வளர்ச்சி இல்லாத காரணத்தால் இந்தியாவில் இருக்கும் ஒரு தொழிற்சாலைகளையும் மூட திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையும், குஜராத்தில் சனண்ட் (Sanand) பகுதியில் இருக்கும் தொழிற்சாலையிலும் கார் உற்பத்தியை நிறுத்த ஃபோர்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சனாண்ட் ஆலையில் 2021 நான்காம் காலாண்டில் இருந்தும் சென்னை ஆலையில் 2022 இரண்டாவது காலாண்டில் இருந்தும் கார்கள் தயாரிக்கும் பணிகள் முற்றிலும் நிறுத்தப் படும். அதே நேரம், சர்வதேச அளவில் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து நியாயமான தீர்வைத் திட்டமிடுவதாகவும் அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.