வேலு பிரபாகரன் இயக்கிய படங்கள் வெளியானாலோ அல்லது சினிமா விழாக்களில் பேச அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டாலோ சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது.
சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வேலு பிரபாகரன் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு எதிராக பேசிய கருத்து தமிழ்த் திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜாங்கோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் செப்டம்பர் 6 அன்று நடைபெற்றது. இந்தப் படத்தில் இயக்குநர் வேலு பிரபாகரனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனிதா சம்பத்தும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வேலு பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழ்த் திரையுலகத்தில் கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் பேசும்போது, “தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டு மக்களின் மூளையாக இருக்கக் கூடிய சினிமாவுக்குள் நாம் நுழைந்துவிட்டோம். நிறைய சினிமாக்காரர்கள் சினிமாவை மட்டுமே பின் தொடர்கிறார்கள். ஆனால், என் நண்பர், தயாரிப்பாளர் சி.வி.குமார் மட்டுமே சினிமாவோடு சேர்த்து நமது தமிழ்ச் சமூகத்தையும் பின் தொடர்ந்து வருகிறார்.
சினிமா என்பது சமூகத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒரு விஷயம். இது சி.வி.குமாருடைய காலகட்டம். இவர்தான் தமிழ் சினிமாவை அடுத்த காலகட்டத்துக்கு நகர்த்தியவர் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்றார். தொடர்ந்து, உலகிலேயே அதிகமாக சினிமாக்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் நாம். ஆனால், உலகத் தரத்தில் நாம் எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை. இந்தி நடிகர்கள், இயக்குநர்களைவிட அதிக சம்பளம் பெறும் நடிகர்கள், இயக்குநர்கள் பலரும் தமிழ் சினிமாவில்தான் இருக்கிறார்கள்.
இங்கு நான் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன் என தொடர்ந்த அவர், இந்த இந்திய நாடு ஏழைகளின் நாடு. இங்கு ஒரு நடிகர் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஒரு நடிகர் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். 100 நாட்கள் நடித்துவிட்டு அதற்கு 100 கோடி ரூபாயை சம்பளமாக வாங்குவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
நம் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள். அதனால்தான் நடிகர்களுக்கும் இந்த ஆசை வந்திருக்கிறது” என்று அதிரடி காட்டியுள்ளார் வேலு பிரபாகரன்.