சிம்பு நடித்து வெளிவந்த ஈஸ்வரன் திரைப்பட விவகாரத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக டி.ராஜேந்தர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் பொறுப்பில் தாம் இருக்கும் காரணத்தினால் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தன்னால் தொடர இயலவில்லை என்றார். எனவே அச்சங்கத்தில் கௌரவ ஆலோசகராக தாம் செயல்பட உள்ளதாகவும் டி.ஆர். கூறினார். தன்னுடைய மனைவி உஷா ராஜேந்தரை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக, செயலாளர் ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராஜேந்தர் திரைப்படங்களுக்கான உள்ளாட்சி வரியை ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் நீக்கியது போல், தமிழகத்திலும் நீக்க தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார். கோரிக்கை தொடர்பாக மறைந்த அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களுக்குச் சென்று முறையிட உள்ளதாக கூறிய டி.ஆர்., முதலமைச்சர் பழனிசாமி தமிழ் திரைப்படத் துறையினரை தொடர்ந்து புறக்கணிப்பதாக கண்டனம் தெரிவித்தார். தமது மகன் சிம்பு நடித்து வெளிவந்த ஈஸ்வரன் திரைப்பட விவகாரத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது எப்படி நியாயமாகும் என்றும் டி.ஆர். கேள்வி எழுப்பினார்.