கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள ’விக்ரம்’ படத்தை பார்ப்பதற்கு முன்பதாக ரசிகர்கள் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தை பார்த்துவிட்டு வரவும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்ததை விட படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் படம் வெளிவருவதற்கு ஒருநாள் முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், மறக்கமுடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தை பெறுவதற்கு, கைதி படத்தை இன்னொருமுறை பார்க்கவும். அதற்கு பிறகு விக்ரம் படம் பார்க்க வரவும் என்று கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பலரும் கைதி திரைப்படத்தை ஓ.டி.டி-யில் பார்த்து வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதில் இடம்பெற்ற ஒரு கிளைக் கதையை வைத்து தான் விக்ரம் படத்தின் மொத்த பின்னணியும் உருவாக்கப்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.