எனது ஹோண்டா 40-45 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
வாழவல்லான் பேருந்துநிலையத்திற்குச் சற்று முன்னின்ற ஒருத்தி, வலதுகை கட்டைவிரலைக் கீழ்குத்தியாட்டி, “ஏரல் வரைக்கும் போணும்.. கூட்டிட்டுப் போங்களேன்..” எனக் கெஞ்சினாள்.. அவளது திராவிட நிறமும், கலைந்த கூந்தலும், டீக்காய் அணிந்திருந்த டி-ஷர்ட்க்கும், ஜீன்ஸ்சுக்கும் பொருத்தமில்லாதிருந்தது.
“ரொம்ப தேங்ஸ்!” என்று சொல்லி, பிலியன் சீட்டில் அமர்ந்ததும், வாழவல்லான்காரங்க இங்கிலீஷில் பேச மாட்டாங்களே என்ற சந்தேகம் வந்தது.. “நீங்க வாழவல்லானா?” என்று வினவினேன்..
“ஆழ்வை..”
நேரடிபதில் சொல்லும் மாண்பு, இவளது வளர்ப்பு ஆழ்வையாக இராதென கட்டியம் கூறியது. என்னப் பேசுவதென புரியாவிட்டாலும், அவளைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் குறுகுறுத்தது. திடீரென அவள் குலுங்கி அழுவதை உணர்ந்த நான், அதிர்ச்சி அடைந்து வண்டியைச் சாலையோர மரநிழலில் நிறுத்தினேன்.
“ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லை, சார்! நீங்க போங்க! வண்டியை நிறுத்தாதீங்க! ப்ளீஸ்!” எனக் கெஞ்சினாள்.
வண்டியை நிறுத்தி, சைட் ஸ்டாண்டைப் போட, அவள் இறங்கி என்னைப் பார்க்காது, திரும்பிக் கொண்டாள். “ஏன்தான் உங்க வண்டியில் ஏறித் தொலைச்சேனோ, தெரிலை,” என்று பதற்றபட்டவள், பின்னர் திட்டவட்டமாய் பேசினாள்: “பாருங்க, இனிமே, வாழவல்லான்காரி இப்படி விக்கி, விக்கி அழமாட்டான், ஆழ்வார்காரி இப்படிப் பொட்டையாய் பொலம்ப மாட்டாள்னு, மொட்டை அட்வைஸ் பண்ண ஆரம்பிசிடாதீங்க.. அப்படி பண்ணினால், இதாலே ஒரு குத்து!” கையில் சின்ன பாக்கெட்கத்தி.
நான் பயந்து போனேன். அவளை அறிந்து கொள்கிற குறுகுறுப்பு ஓடி மறைந்தது. முட்டிக்கு கீழ், கணுக்காலுக்கு மேல், சிறு நடுக்கம் வேறு.. ஆனால், நான் எதிர்பார்த்ததற்கு மாறாய், “ஸாரி சார்! நான் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிருந்தேன்.. டிப்ரஷனில் இருக்கேன்.. அதான் ரூடாய் நடந்து கிட்டேன்.. ஸாரி!” என்றாள் அவள்.
வண்டியை ஸ்டார்ட் செய்து, அவள் ஏறாமல் போனால் தேவலாமென நான் நினைக்க, “தாங்ஸ்!” எனச் சொல்லி, பின்சீட்டில் அவளமர்ந்திருந்தாள்.
அவள் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். “என்னப்பா தன் பத்து வயசிலேயே மும்பை போனார். அப்பா பேர் கோதண்டம். அப்பாவின் கடை, செம்பூரில் இன்னைக்கும் பேமஸ்தான். ஊருக்கு வந்து, வாழவல்லான் ஊர்காரியான அம்மாவைக் கல்யாணம் முடிச்சாலும், அவங்களை அப்பா மும்பைக்குக் கூட்டிட்டு போலை.. அம்மா இல்லாம, மும்மையிலே அப்பா எவ்வளவு கஷ்டப்படுவாங்கனு, அம்மா ரொம்ப வருத்தப் பட்டாள். உண்மை என்னன்னா, அம்மாவுக்கு அப்பா இல்லாம முடியலை.” அவள் சிரித்தான்.
ஒரு பெண் எப்படி இந்தமாதிரி விசயங்களை என்னிடம் சௌகரியமாய் பேச முடிகிறது? இந்த மாதிரி விசயங்களை என்னிடம் சொல்லலாம் என, அவள் எப்படி நம்புகிறாள்? எனக்குப் பெருமையா இருந்தது.
“அம்மா சொல்லாம கொள்ளாம மும்பை போனப்பதா, கோதண்டத்தின் உண்மை தெரிந்தது.. அவங்க மும்பை வந்த அன்னைக்குதான், வீட்லே ஏற்கனவே இருந்த பொண்ணு, என்னைப் பிரசவித்தாள். பொறந்த புள்ளையை, பச்சை மணம் மாறாமல், அம்மாவிடம் கொடுத்து விட்டு, நான் இனி உங்க வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேனு சொல்லிட்டு, அந்தப் பெண் போயிட்டாங்களாம்….”
இதைச் சொல்லும் போது, அவள் குரல் கம்மியது.. “அப்பாதான் அவங்க பின்னாடி போய், ‘நீ போக வேண்டாம்.. உங்க ரெண்டு பேரோடு சேர்த்து, உன் குழந்தையையும் நான் பாத்துக்கிறேன்..’ என்றாராம்.. அதெல்லாம் சாத்தியப்படாதுனு அவங்க போய்ட்டாங்க.. ரெண்டு மூணு நாள் சித்தபிரமை பிடிச்ச மாதிரி அம்மா இருந்தாங்களாம்.. பிறகு என்னவோ என்னை அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு… அதுக்கு என்ன காரணம்னு, இன்று வரை யாருக்கும் தெரியாது.. என்னை வளர்க்கணும்னு அம்மா இன்னொரு குழந்தையைக் கூட பெத்துக்கலைனா, பார்த்துக்குங்களேன்..” இதைச் சொல்லும் போது, அவள் குரல் கரகரத்து, இலேசாய் கண்ணீர் கசிய, “எனக்கு இப்படியொரு அம்மா கிடைக்க, நான் பெரும் அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும்,” என்றாள்..
ஏரல் பேருந்து நிலையத்தைக் கடக்கும் போது, “நிறுத்துங்கோ! நான் இறங்கிகிறேன்,” என்றாள்.. நான் ஒப்புக்கலை.
“நீ ஆழ்வைக்குதானே போணும்? தென்திருப்பேரையில் இறக்கி விடுறேன்.. அங்கிருந்து நீ ஈஸியா போயிடலாம். நீ எனக்கு உன் மீதி கதையைச் சொல்ற வரைக்கும், எப்படி உன்னை விட முடியும்?”
“நீங்க சொல்றதைப் பார்த்தா, எங்கப்பாவைப் பற்றி தெரிஞ்சுக்காம விட மாட்டீங்க போலிருக்குது.. இதுவே நம்ப தேசத்தந்தை காந்தி பற்றி சொல்றேனு, நான் பைக்கிலே உட்கார்ந்திருந்தா, நீங்களே கைக்காசைப் போட்டு, ஏரலிலேயே பஸ் ஏற்றி விட்டிருப்பீங்க..” என்று சொல்லிச் சிரித்தாள்.
காந்திச்சிலை மணிக் கூண்டுக்குப் போய், சந்திலிருக்கும் பாரத் டீ ஸ்டாலில் தேநீர் அருந்த சென்றோம். “உன் மனசுலே இருக்கிற பாரத்தை என்னிடம் இறக்கி வச்சா, உன் மனசு லேசாகுமில்லையா? அதற்காகவாவது, நீ உன் அப்பாவைப் பற்றி என்னிடம் சொல்லணும்..”
“சார்! என் மனதிலே, எந்தப் பாரமும் இல்லை.. நான் ஒரு லிபரேட்டட் பர்சன்.. அப்பப்ப கொஞ்சம் ஸ்ட்ரெஸ் தலைக் காட்டும்… அதை எப்படிக் கையாளுவது என்பது எனக்குத் தெரியும்…”
நான் அவளுக்கும் டீ ஆர்டர் செய்தான்.. கூடவே வடையும் ரெண்டு பேருக்கும் ஆர்டர் செய்தேன்.. அவள், “வடை வேண்டாம். சிகரெட் சொல்லுங்க,” என்றாள்.
கோடைவாசஸ்தலத்தில் உள்ள புகைப்பாளர்கள் போல், கலாரசனையுடன் சிகரெட்டைப் பற்ற வைத்தாள்.
“இங்கேதான் மூணு வடை பத்து ரூபா…” என்றேன் நான்..
“நானும் நீங்க இங்கே வருறதுக்கு, இப்படி ஏதாவது ஒரு காரணம் இருக்கும்னு நினைச்சேன்.. வடை சின்னதா இருக்கிறதாலே, நான் வாங்கலைனு நினைக்காதீங்க.. எனக்குப் புகைப்பிடிக்க ரொம்ப பிடிக்கும்.”
“புகைப்பிடிக்க பிடிக்குமா? புகை பிடிப்பதில் அப்டி என்ன சுகம் இருக்கு?”
அவள் என்னைக் கேவலமா பார்த்தாள்.. “புகைப்பிடிப்பது ஈஸ் தி சிம்பல் ஆப் மை எக்ஸ்பிரஷன் ஆப் லிபரேஷன்..”
“என் நண்பர்களில் தைரியமில்லாதவர்களும், சுயகட்டுப்பாடு இல்லாதவர்களும்தான், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்..”
“உங்க பிரண்ட்ஸ்தானே? எதைப் பிடிச்சாலும், அவங்க லிபரேட்டாக மாட்டாங்க” என்று சொல்லி அவள் சிரித்தாள்.
“கோயில் திண்ணையில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசுவோமா?” என நான்தான், அருகிலுள்ள திண்ணையைச் சுட்டிக்காட்டி பரிந்துரைத்தான்..
“எனக்கும் உங்களுடன் அரட்டை அடிக்க பிடிக்குதான். ஆனா அதுக்கு நீங்க இன்னும் எனக்கு அரைப் பாக்கெட் வில்ஸ் அடிஷனலா வாங்கித் தரணும், சரியா?” அவள் இப்படிப் பேரம் பேசுவது பிடிக்கவில்லை. ஆனாலும் அவள் வில்ஸ் கை மாறிய பின்தான், பேசவே ஆரம்பித்தாள்.
“உங்க அப்பா விரும்பிதானே, உங்கம்மாவை சேர்த்துக் கொண்டார்.. அப்படி இருக்கும் போது, வாழவல்லானில் இன்னொரு கல்யாணம் எதுக்கு?”
“உங்க கேள்வி ரொம்ப நியாயமான கேள்வி… ஆனா மனுசங்க யாரும், நியாயமான கேள்வி கேட்டு, அதற்கு நியாயமான பதில் சொல்ற வாழ்க்கையை வாழ்றது இல்லை.. மாறாக வாழ்ந்து விட்டு, அதை நியாயப்படுத்த ஏதாவது பதில் சொல்வாங்க…” அவள் தலையை கவிழ்ந்து கொண்டு பதில்சொன்னாள்.
“என் உண்மையான அம்மாவை, ஒரு பிராத்தல் ஹவுஸில்தான் அப்பா சந்தித்திருக்கிறார்.. காதலோடு யாரும் பரத்தையார் விடுதிக்குப் போவதில்லை. அனிமல் இன்ஸ்டிங்கைத் தீர்த்துக்கணும்.. அப்படிப்பட்ட பழக்கம், காதலாய் பரிணமித்திருக்கலாம்…” இதைச் சொல்லும் போது கண்ணீர் விட்டாள்..
அவள் தன் அப்பாவை வெறுக்கிறாளோ என்று கூட நினைத்தேன்.. முகத்தில் அப்படி எந்த வெறுப்பும் மண்டிக் கிடக்கவில்லை. “அகிம்சாமூர்த்தி காந்தி பிறந்த போர்பந்தரில் பெண்கள் இன்றும் கேங்ஸ்டராக இருப்பதுதான் அவலம்.. சாந்தாபென் பெயரைச் சொன்னால், 90-களில் சௌராஷ்டிராவில் அனல் பறக்கும். சாந்தாவின் கணவர் முஞ்சா, போர்பந்தர் மஹாரானா பஞ்சாலையில் தினக்கூலி. மஹர். மில் வேலைநிறுத்தத்தை உடைக்க மில் முதலாளிகள், தேவூவஹார் என்ற ரௌடியை அனுப்ப, நடந்த களேபரத்தில், முஞ்சா தேவூவைக் கொன்று விட்டார். விளைவாய் சாதாரண தினக்கூலி, டானாக உருமாறினார். தேவூவை அனுப்பி வைத்த மில் முதலாளிகள், முஞ்சாவைப் பார்த்து, உச்சா போனார்கள். முதலில், சாந்தாபென் கணவனிடம் ரௌடிதனத்தைக் கண்டு அஞ்சி, வேண்டாம் என மன்றாடினாள்.. முஞ்சாவை எப்படியும் மீட்டுவிட வேண்டுமென விரும்பினாள்.. எதற்காகவும், அவனை இழக்க அவள் தயாராய் இல்லை.. அப்போது மகராஷ்டிரத்தில் தாதாஜி என்றொருத்தர் இருந்தார், அவரது வீச்சு குஜராத் வரையும் இருந்தது.. அவருடைய சுதேசிய பரிவார் என்ற அமைப்பு, பகவத் கீதை, உபநிடதங்கள் மூலம், ஒருவன் தன்னைத் தானே சுயபரிசோதனைச் செய்து, சுயநலமற்ற சமூகப்பணிகள் செய்தால், தன்னை மீட்டெடுக்க முடியுமென சந்கேத்திற்கிடமில்லாது எடுத்துரைத்தது. உங்களுக்கு சுதேசிய பரிவார், என்னச் சொல்கிறதென புரியுதா? எனக்கும் எதுவும் புரியவில்லை.. ஆனால் முஞ்சாவுக்கும், சாந்தாவுக்கும் தெளிவாக புரிந்தததுதான்திருப்பம்.. தன்னை மீட்டெடுத்த முஞ்சா, பாவச் செயல்களையும், ஆயுதங்களையும் விட்டொழித்தான். அறத்தில் நம்பிக்கை வைத்து, அறவழிக்குத் திரும்பும் மனிதர்களை, வரலாறு குரூரமாக தண்டித்து விடுகிறது. காலா கேசவ் அணியினர், ஆயுதம் துறந்த முஞ்சாவைக் கொடூரமாக சுட்டுக் கொன்றனர்.. ஆயுதத்தைக் கைவிட சொல்லி, தானே கணவனுக்கு எமனாகி விட்டேன் எனப் பரிதவித்தாள் சாந்தா. தனது காதலைச் சுட்டுப் பொசுக்கியவர்களை பழி வாங்க, தனது கணவனது பாதைக்கு வழிமாறினாள். பழிவாங்க பணம் வேண்டும்.. பணம் பண்ண, லாபம் தரும் தொழில் வேண்டும். மூடப்பட்ட கஞ்சா தொழில், பரத்தையர் தொழில், மதுபான உற்பத்தி எல்லாம் மீண்டும் திறக்கப் பட்டது… சாந்தா பலரை நரவேட்டையாடினாள்.. சாந்தாபென் நடத்திய பரத்தையர் இல்லத்தில் இருந்து தப்பி வந்தவள்தான், என்னம்மா…”
எனக்கு என்கன்னத்தில் பளார் என அறைந்தது போல, அவள் வார்த்தைகள் வலித்தது. எனக்கு இன்னொரு காபி குடித்தால் தேவலை எனத் தோன்றியது.. நான் எனக்கு ஆர்டர் பண்ண கோயில் திண்ணையிலிருந்து எழுந்து, டீக்கடையை நோக்கிச் சென்றேன்.. அவள், “எனக்குக் காபி வேண்டாம்.. டீ சொல்லுங்கள்,” என்றாள். அவளும் என் கூட, டீக்கடைக்கு வந்தாள்.. டீக்கு நான் பைசா கொடுத்ததும், “நீங்க போய் திண்ணையிலே உட்காருங்க.. நான் உங்க காபியையும் எடுத்துக் கொண்டு, அங்கு வந்து விடுகிறேன். வேறு யாராவது திண்ணையைப் பிடித்து விடப் போகிறார்கள்..” என்றாள்.
நான் சென்றதும், அவள் வில்ஸ் பாக்கெட் வாங்கினாள்.. பெண் ஒருத்தி டீக்கடையில் அத்தாரிடியுடன் சிகரெட் வாங்குவதை நம்ப முடியாது, ஏரல் ஆண்கள் விழித்தார்கள். அவள் காபியைத் தர, நான் உடனே குடித்து முடித்தேன். அவள் பாதி தம்ளர் டீயைக் குடிக்காது பார்த்துக் கொண்டிருந்தாள். ரொம்ப அனுபவித்து குடிக்கணுமென நினைக்கிறாளோ என்னவோ? அவள் டீ குடித்து முடித்ததும், புகைப் பிடித்தாள்.. நான் அந்த கதையில் பல விபரங்கள் குறித்து கேட்க வேண்டிய அவசியமிருந்தது, அப்போது அவளுக்குத் தெரியவுமில்லை, புரியவுமில்லை.
எனக்குப் பொறுமை போய் விட்டது. “யார் கதையையும் நீ முழுசா சொல்லலை. உங்க அப்பா, அம்மா, வாழவல்லான் அம்மா, சாந்தாபென் என யார் கதையையும் முழுசா சொல்லலை.. எல்லாம் பாதி முடிஞ்சு அந்தரங்கத்தில் தொங்குது. ஆனால், டீயும், காபியும் குடிச்சுகிட்டு, புகை விட்டுகிட்டிருக்கே..”
நான் சொன்னதைக் கேட்டதும், தலையைத் திருப்பிக் கொண்டாள்.. “சார்! எங்கக் கதை, பெருமைப்பட ஒண்ணுமில்லாத அற்பர்களின் கதை. நாங்களே மறக்க விரும்பும் கதை..”
கிளம்பலாம் என்று எழுந்து நின்றேன்.. வண்டி கிளம்பும் போது, “ஸ்டாண்டை எடுக்கலை,” என்றாள்..
சேர்மன் கோயில் கடக்கும் போது, “சார்! சேர்மன் கோயிலிலுக்குப் போவோமே!! மனசு டிஸ்டர்ப்பா இருக்கு! சேர்மனை, பாதிச்சித்தர்னு சொல்வாங்களாமே?.. அந்தச் சித்தராவது மனச்சாந்தியைக் கொடுப்பாரானு பார்ப்போம்…” என்றாள்..
மூலஸ்தானத்தைக் கடந்தும், மேற்கில் பல ஆலமரங்கள் கம்பீரமாக கட்டிநிழல் பரப்பி நின்றது. அங்குள்ள திண்டில் நானமர, அவளும் அருகில் அமர்ந்தாள்… “சாந்தாவைக் கூட அம்மா வெறுத்திருக்கமாட்டாள்.. என்னை வயிற்றில் சுமக்கவில்லை என்றால், அம்மா கண்டிப்பாக சாந்தாவை வெறுத்திருந்திருக்கமாட்டாள். வேசிகள் குழந்தைப் பெறக்கூடாதென சாந்தா வலியுறுத்தியதுதான், முரண்பாட்டை எழுப்பியது. அம்மா எதற்காகவும், என்னைத் தவிர்க்க விரும்பவில்லை.. நான் அவளது காதலின் சின்னம். ஆகவே அம்மா என்னை எக்காரணம் கொண்டும் இழக்க விரும்பவில்லை.” தலையில் சம்மட்டி கொண்டு தாக்கியது போல எனக்கு வலித்தது, வியர்த்தது.
“கருவைக்கலைக்க அனுப்பிய சாந்தாவின் குண்டாக்களின் இருவரது தலையை அம்மா கொய்து விட்டாளாம். ஆனால் யாரும் அங்கு அம்மாவை காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. காவல்துறையினரே அம்மாவுக்கு மறைமுக ஆதரவாக செயற்பட்டார்களாம். அம்மாவை எப்படியோ அப்பா மீட்டு, மும்பைக்கு அழைத்து வந்து விட்டார்..”
இதைச் சொன்னதும் எனது சமநிலை தடுமாறியது.. அடிமனதில் புதைந்திருக்கும் பல சிந்தனை, ராட்சசத்தனமாக அலை போல் எழுந்து மேலெழுந்து வந்தது. நான் அவளிடம் ஒரு சிகரெட்டைக் கடன் வாங்கி, உதட்டில் வைக்க, அவள் தன்னிடம் இருந்த லைட்டர் மூலம் பற்ற வைத்தாள். என்னை விட நாற்பது வயது சின்னவளாய் இருப்பாள்.. ஆனால் அவளது அனுபவம் என்னை விடவும் பல மடங்கு அதிகம்..
உண்மையை ஒப்புக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.
கண்களை மூடிக் கொண்டு, வெண்புகையை வெளியேற்றினேன்.. “சார், நீங்க இப்ப ஆஜானுபாகுவாக தெரியறீங்க.. உங்களைப் பார்த்தால், லிபரேட்டட் உணர்வு வருது…” என அவள் சத்தமாய் கூவினாள்… நான் சங்கடத்துடன், அவளைப் பார்த்துச் சிரித்தேன்.. “மகளே! உன் அப்பா கோதண்டம் இடதுகை பழக்கம் உள்ளவரா? அவர் ஆழ்வை கிடையாது.. ஆழ்வார் தோப்பு..”
“ஆமாம், ஆற்றுக்கு இந்தப்பக்கம் ஆழ்வார்திருநகரி அந்தப்பக்கம் ஆழ்வார்தோப்பு. ரெண்டும் எங்களுக்கு ஆழ்வைதான். அப்பா இடதுகைப் பழக்கம், எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்க அப்பா பிரண்டா?” சிகரெட்டைத் தூர எறிந்து விட்டு, சுகந்த பாக்குப் பொடியை வாய்க்குள் போட்டுக் கொண்டாள். மரியாதையடன் நடந்து கொள்கிறாளாம். அப்பாவின் பிரண்டுக்கு, அப்பாவுக்குக் கொடுக்கும் அதே மரியாதையைக் கொடுக்க விரும்புகிறாள் போலிருந்தது.
“நான் உனது மீதிக் கதையை சொல்றேன், கேள்..” என்று பைக்கை ஸ்டார்ட் செய்ய, அவள் பிலியனில் அமர்ந்தாள். “உண்மை தெரிந்தால் சொல்லணும்.. ஏதோ குப்பைத்தொட்டி கிடக்குது, நமக்குத் தோன்றுகிற குப்பையை கொட்டிடலாம் என்ற எண்ணத்தோட மட்டும் பேசாதீங்க.”
நான் நிறுத்தாமல் தொடர்ந்தேன்.. “குஜராத் லான்வாவில் 18 வருசங்களுக்கு முன்னால் பணியாற்றினேன். அங்கு ஓ.என்.ஜீ.சி.க்கு டீரிட்மெண்ட் பிளாண்ட் கட்டிக்கொடுக்கணும். நான்தான் சைட் பொறுப்பாளர். சௌராஷ்டிராவில் இருந்து பலர் வந்து பணியாற்றினார்கள்.. அதிலொருத்திதான் உன்னம்மா.. அவள் சொல்லில், செயலில், சைட் வேலை வேகமாக நடக்க வேண்டுமென்ற உத்வேகமிருக்கும். அங்கிருந்த ஏற்கனவே கல்யாணமான ஒருத்தன், அதை மறைத்து, அவளைத் திருமணம் பண்ணிக் கொள்வதாக சொல்லி, ஏமாற்றி விட்டான்.. அப்பதான் என் நண்பன் உன்னப்பா கோதண்டம், வேலை கேட்டு அங்கு வந்தான். அதற்குள் கர்பமான உன்னம்மாவை, சௌராஷ்டிராவுக்கு அனுப்பிட்டாங்க… அங்கே போய் அவளை மீட்டு வரச் சொல்லி, கோதண்டத்தை அனுப்பினேன்.. அங்கே கர்ப்பவதியான அவளை, வேசைத்தொழில் செய்ய கடத்திச் சென்றார்கள்.. கர்ப்பவதியாக இருப்பது, பிராத்தலில் விரும்பப்படுவதில்லை. கருகலைப்புக்கு ஒப்புக் கொள்ள வைக்க வன்முறையில் இறங்கியவர்களை, உன் அம்மா, வகுந்து விட்டாள். அவளைக் காப்பாற்றி, கோதண்டம் மும்பை அழைத்துச் சென்று விட்டான்… என்னை, சைட்டை விட்டுப் போக சொல்லி விட்டார்கள்.. உன்னம்மாவுக்கு உதவ போய், சௌராஷ்டிராவில் உன்னம்மா நிகழ்த்திய படுகொலைகள் என்னை லான்வாவில் இருந்து, முற்றிலுமாக விலக வைத்து விட்டது.. சாந்தாவைப் பகைத்துக் கொண்டு குஜராத்தில் யாரும் எந்தத் தொழிலும் செய்ய முடியாதாம்.. ஓ.என்.ஜீ.சி காரங்களுக்கு கொடுக்க வேண்டியிருந்த 22 லட்சம் லஞ்சப்பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு, தமிழகம் திரும்பினே்ன. ரயில் மும்பையைக் கடக்கும் போது கோதண்டத்தை அழைத்து, அப்பணத்தைக் கொடுத்து உன் அம்மாவிடம் கொடுக்கும் படிச் சொன்னேன்..”பைக் குரங்கணி முத்தாரம்மன் கோயிலை கடக்கும் போது, எங்களுக்குள் மிக அடர்த்தியாய் அமைதி நிலவியது.. அவள் என் முதுகில் முகத்தைப் பதித்துக் கொண்டு வெளியே தெரியாத படி அழுதாள்.. என்னவோ எனது மனதும் கனத்து இருந்தது.. இன்னும் ஒரேயொரு கேள்விக்குதான் பதில் சொல்ல வேண்டியுள்ளது. யார் அவளுடைய உண்மையான அப்பா?
பஞ்சாயத்து ஆபிஸிக்கு எதிரேயுள்ள பஸ்நிலையத்தில் யாரும் இல்லை..
“உங்களுக்கு, நண்பர் கோதண்டத்தைப் பார்க்க வேண்டும் என்று, இவ்வளவு நாளும் தோன்றவே இல்லையா, சார்?”
“கோதண்டத்தை மற்றும் ஓ.என்.ஜீ.சி அபிசியலகளை இனி பார்க்க கூடாது என்பதற்காகதான், ஜோர்டானில் பாஸ்பாட்டிக் ஆலை ஒன்றில் கிடைத்த வேலையை ஒப்புக் கொண்டு இந்தியாவை விட்டே சென்று விட்டேன்.. என் குடும்பம் முழுதையும் அழைத்துக் கொண்டு சென்று அம்மனில்தான் வாழ்ந்னே்.. பத்து வருடத்திற்கு ஒரு தடவை, ரெண்டு மூணு மணி நேரங்கள் இந்தியாவில் தங்கினால் அதிகம்… பணிஓய்வு பெற்ற பிறகுதான், நான்கு வருசத்துக்கு முன்பு தூத்துக்குடிக்குத் திரும்பினேன்…”
அவள் மறுபடியும் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டாள்…
“எனக்கும் ஒரு சிகரெட் தாயேன்… எனக்கும் புகைக்க வேண்டும் போலிருக்கிறது!” என்றேன்.. மிச்சம் இருந்த சிகரெட்களுடன் மொத்த சிகரெட் பாக்கெட்டையே தந்தாள்.. ஒன்றை எடுத்து உதட்டில் வைக்க, அவளே லைட்டரால் பற்ற வைத்தாள்.. சிகரெட் பாக்கெட்டை நானே வைத்துக் கொண்டேன்.. லைட்டரையும் நானே வைத்துக் கொள்ள சொல்லி என்னிடம் தந்தாள்..
“இதோட நான் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுடலாம்னு முடிவெடுத்துள்ளேன்…” என்று சொல்லி சிறிதாக புன்னகைத்தாள்..
“என்னால் நினைத்தாலும், புகை பிடிக்கும் பழக்கத்தை இனி விடமுடியாது எனக் கருதுகிறேன்..” என்றேன்..
அவள் ரொம்ப புத்திசாலியான பெண்… நான் சொல்லாமலேயே உண்மையைப் புரிந்து கொள்வாள் என்பது எனக்குப் புரிந்தது.
ஆழ்வை செல்லும் பேருந்து ஒன்று வந்தது.. “அப்ப நான் வரேன், அப்பா! உங்க பேர் எனக்குத் தெரியாது… ஆனா நீங்கதான் என்னோட உண்மையான அப்பாவென்பது தெரியும்… குட் பை, அப்பா!”
நான் அப்படியே பதறி போய், தரையில் உட்கார்ந்து விட்டேன்.. பஸ் போகும் போது, அவள் என்னையே பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டிருப்பது எனக்குத் தெளிவாக தெரிந்தது.. எனக்குப் பரிசாக சிகரெட் பாக்கெட்டையும், லைட்டரையும், புகைபழக்கத்தையும் விட்டுச் சென்றிருக்கிறாள்.
************