நாகை ஆசைத்தம்பி
இந்த தீபாவளிக்காவது எப்படியும் ஒரு கூறு ஆட்டுக்கறி எடுத்து தின்னுடனும் என்பதே கூறுக்கெட்ட குப்பனோட அதிகபட்ச அஜன்டாவாக இருந்தது ஒவ்வொரு முறையும் இப்படி திட்டங்கள் போடுவதும் கடைசியில் அது கால வாரி விடுறதும் ஒன்னக்கட்டிக்கிட்டு வந்து கஞ்சில்லாம கஷ்டப்படுறதுக்கு ஒண்டியக்கிடந்தே செத்திருக்கலாமென அவன் பொஞ்சாதி சொல்றதும் வழக்கமான ஒன்னுதான் இருந்தாலும் இந்தவாட்டி குப்பனுக்கு எப்படியும் கறிக்கொழம்புச்சோறு திங்கனுமுன்னு வைராக்கியம்
ஒடம்பு முழுக்க பரவிக்கிடந்தது ஏன்னா இந்த ஊர்ல தீபாவளி பொங்கல் இந்த ரெண்டே நாளில்தான் கறி கெடைக்கும் அதுவும் ஒரு ஆட்டை வெட்டி கூறுக் கூறா பரப்பி வச்சிடுவாங்க அதுக்கும் சிலப்பேர் முன்பணம் தருவதுமுண்டு சிலப்பேர் நாலஞ்சு பேர் ஒன்னா சேந்து ஒரு ஆடு வாங்கி கறியை கூறுபோட்டு பிரித்துக்கொள்வதுமுண்டு குப்பனுக்கு அந்தளவுக்கு வசதியேது கடையிலையேபோய் ஒருக்கூறு வாங்கிடலாமுன்னு ஐடியா வச்சிருக்கான்
அப்படியே மசமசன்னு விடியிற நேரத்தில நீலப்படியார் கடையிலப்போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாமுன்னு பொறப்பட்டான் குப்பன் கிராமங்களில் பெரும்பாலும் வீட்டில் டீயோ காபியோ வைப்பது குறைவுதானே எல்லாரும் கடையில் வாங்கிக்தான் குடிப்பார்கள் அதோட டீக்கடைதான் அசம்பளி ஊரு நாயம் ஒலகநாயம் எல்லாம் அத்துப்படி அவன் அவனுக்கு தெரிஞ்சக்கதை தெரியாதக்கதை எல்லாத்தையும் திரைக்கதை வசனத்தோடு உளரி வைப்பார்கள் அங்கதான் நம்ம குப்பனும் தீபாவளிக்கு கறி எடுக்க தான் ஒரு வைராக்கியம் வச்சிருப்பதையும் பெரிய ஒலக விசயமா சொன்னாரு அதுக்கு டீக்கடைக்கார் சொன்னாரு
“அடே,,, கூறுக்கெட்ட குப்பா மொதல்ல நாலு டீக்கு காசுத்தரணும் அதக்கொடுக்குற வழியப்பாரு அப்பறம் நீ கறியெடுத்து கஞ்சிக்குடிக்கலாம்”
“யோவ் என்னங்கண்ணு இப்படி சொல்லிட்டீங்க இந்த தீபாவளிக்கு பாருங்க நான் கூறுக்கறி எடுக்குறனா இல்லியான்னு இன்னும் ரெண்டு நாளுல என் மாமனாரு தீபாவளி வரிச கொண்டுவருவாரு அப்போ தூக்கி வீசிறன்யா ஓங்காச பெரிசா பேசுற,”
“நீ கூறுக்கறி எடு அல்லது மொத்தமா ஒரு ஆடே வாங்கி தின்னுபூட்டு பாக்கிய உப்புகண்டம் போட்டு தின்னு அதப்பத்தி எனக்கென்ன,,, எனக்கு காசக்கொடுக்குற வழியப்பாரு எனக்கும் தீபாவளி செலவு இருக்குல”
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குப்பன் அக்கா மகன் இடைமறித்து
” யாரு கூறுக்கறி எடுக்கப்போறா மாமாவா பஸ்ட் அவரு கறி போடுற எடத்துக்கு வரும்போது பாப்போம் அவரு எங்க கவுந்து கெடக்காறோ”
“ஏய் போடா போடா பொசக்கெட்ட பயல தீபாவளி அன்னக்கி காட்றேன்டா யாரு ஆம்பள சிங்கமுன்னு”
“பஸ்ட்டு நீ மனுசனா இரு அப்பறம் சிங்கமாகலாம்”
அடப்போங்கடா லூஸுபயலுகலான்னு குப்பன் எழுந்திருச்சி வீட்டைநோக்கி நடந்தார்
குப்பன் சம்சாரம்தான் ஆரபித்தார் ” என்ன கப்பல் கவுந்தமாதரி ஒரே யோசன “
“ஒன்னுமில்ல கொப்பா எப்போ வரிச கொண்டு வருவாரு”
“அடா,,,நீ வாழுற வாழ்வுக்கு ஒனக்கு வரிச ஒரு கேடா அதெல்லாம் வரும்போது வரும் நீ போயி உன் வேலையைப்பாரு,,,ஆமா இப்போ அத எதுக்கு கேக்ற”
“இல்ல போன வருசம்தான் தவறிப்போய்ட்டு இந்த வருசமாவது ஒரு கூறு கறி எடுக்கலாமுன்னு பாக்றேன் கொப்பா வரிச தந்தாருன்னா கறிக்கடைக்காரருக்கு அட்வான்ஸ் கொடுத்திடலாம் “
“ஓ,,, இது வேறயா ஐயா சாமி அப்படி கிப்படி கறிகிறி எடுத்துடாத அதத் தின்னுகின்னு நாங்க நல்லா வந்திடப்போறோம் அடாப்போய்யா ஒன்ன கல்யாணம் பன்னி பதினாறு வருசத்தில மொத தீபாவளிக்கு கறிச்சோறு தின்னது அதுவும் என் அப்பன் வரிச தந்த காசில வாங்கினது அதுக்கப்பறம் பழையக்கஞ்சிக்கே இங்க பரதநாட்டியம் ஆட வேண்டியிருக்கு இப்போ கறி எடுக்குப்போறாராம் பொஞ்சாதிக்கும் புள்ளைக்கும் தீபாவளிக்கு ஒரு துணி எடுத்துக்கொடுக்க துப்பில்ல கறிச்சோறு கேக்குதாம் கறிச்சோறு”
“சரிவிடு ஒன்னக்கிட்ட பேசினா சண்டதான் வரும் நான் கம்மா வரைக்கும் போய்ட்டு வரேன்,,,”
தீபாவளி ரெண்டுநாளுக்கு முன்னாடி குப்பனோட மாமனார் ஆறாம் நம்பர் பஸ்ஸப்பிடிச்சி அழுக்கும் இல்லாம வெள்ளையும் இல்லமா இரண்டுக்கும் இடைப்பட்ட கலரில் ஒரு வேஷ்டி சட்டை அணிந்துக்கொண்டு ஒரு காக்கிலோ ஸ்வீட் பாக்ஸோடு வீட்டுக்குள் நுழைந்தார்
“அப்பா,,,வாப்பா நல்லா இருக்கியாப்பா போன தைமாசம் பொங்கலுக்கு வந்தது இப்பதான் பாத தெரியுதாக்கும்”
“அடா விடு கழுத என்னசெய்ய வேலவெட்டி சரியா இல்ல அங்கே இருந்து இங்க வர காசுபணம் வேணுமுல்ல வெறுங்கையோடு வரமுடியுமா அதான் வரல தாயி,,, எங்க பேரன காணும் மாப்ள எங்கப்போனாரு?”
“அந்த மனுசன் எங்க வெட்டியா சுத்துறாரோ தெரியல ஓங்பேரன்தான் பள்ளிக்கூடம் போய் இருக்கான்”
“அடா படிக்கப்போறானா பள்ளிக்கூடம் அனுப்பமாட்டேன்னு வீட்லயே வச்சிருந்த இப்பதான் புத்தி வந்ததா ஒனக்கு”
“அப்பா,,,முன்னாடி சோறுகீறு எதுவும் போடமாட்டாங்க புள்ள பசியில மயக்கம் எடுத்துவிழுந்தா என்ன பன்றதுன்னுதான் அனுப்பல இப்பதான் காமராசு அய்யா மத்தியானம் சோறு போடுறாரே அதனால்தான் அனுப்பினேன்”
“பரவாயில்லம்மா நல்லக்காரியம் செய்த,,,நாமதான் படிக்கல அவனாவது படிக்கட்டும்”
“சரிம்மா மாப்ள எப்போ வருவாரு வந்தா வரிச கொடுத்துட்டு போய்டுவேன் ஓ,,,இந்தா மாப்ளையே வந்துட்டாரே”
“வாங்க மாமா எப்படி இருக்கீங்க. இந்தப்பக்கமே வர்றதே இல்ல என்னவாம்”
“அது ஒன்னுமில்ல மாப்ள எல்லாம் பணம் பிரச்சனைதான் உங்க மாமியார் போனதிலிருந்து நான் நொடிச்சிப்போய்டேன் அப்படியே வீடு அடங்கிக்கிடக்கேன் நம்ம ஊருலையும் சாகுபடி ஒன்னும் சரியில்ல நம்மகிட்ட ஒரு ஆட்டுக்குட்டி இருந்திச்சே அதைதான் வித்துட்டு வரிச கொடுக்க வந்தேன் இல்லன்னா புள்ள ஏங்கிடுமே நான் உயிரோட இருக்கும்வரை என் கையில கெடச்சத கொண்டுவந்து தந்துட்டு போறேன் இந்தாங்க இப்போ என் கையில கெடச்ச நூறு ரூவா புடிங்க நான் பொறப்படுறேன்”
“அட என்னப்பா சொல்ற இரு நான் அவரப்போய் மீன் வாங்கியார சொல்றேன் சோறு ஆக்கி தின்னுட்டு போகலாம்”
“ஆமா மாமா நீங்க ஒடனே வந்துட்டு ஒடனே போனா ஊருக்காரனுவோ எங்கள மதிப்பானுங்களா,,, என்ன சுடு தண்ணியவா காலுல ஊத்திட்டு வந்தீங்க,,, வாங்க கடவீதிக்குபோயி டீ குடிச்சிட்டு ஒரு பவுன்டு மீன் வாங்கிட்டு வரலாம்”
“ம்,,,சொன்னா கேக்கவா போறீங்க வாங்க போகலாம்”
“இந்தா,,, இந்த கானாங்கெளுத்தி மீனுதான் கெடச்சது இதுவே யானை வெல குதிர வெல சொல்றானுங்க என்னப்பன்றது வாங்கிதானே ஆகனும் சீக்கிரம் கொழம்பு வை மாமா அர்ஜெண்டா போகனுமாம்”
” இந்தா அஞ்சி நிமிசத்துல வச்சிடுறேன் கொஞ்சம் பொறுங்க,,, அப்பா அப்படி இந்த பாயப்போட்டு கொஞ்சம் படு ரொம்பத்தூரம் வந்தது களப்பா இருக்கும் “
“சரிம்மா நான் படுக்கிறேன் நீ வெரசா சோறும் கொழம்பும் வச்சிட்டு எழுப்பு”
“சரிப்பா இப்ப ஆயிடும் அடுப்பு பத்தவச்சிட்டேன் ஒல கொதிக்கப்போவுது ஆயிடும் ஆயிடும் நீ படு”
” நான் போயி பெரிய மச்சான் வீட்டு கொள்ளையில வாழ எல வெட்டிட்டு வரேன் நீ சோற ஆக்கு”ன்னுட்டு குப்பனும் பொறப்பட்டான்
மீன் கொழம்பு ருசி அமிர்தமாக இனித்தது எப்பவும் இப்படி செய்யமாட்டா அவ அப்பனுக்குன்னதும் நல்லா வச்சிருக்கா அப்படின்னு குப்பன் மனசுக்குள்ள நெனச்சிட்டான் மாமனார் பொறப்பட்டுப்போனதும் வரிச பணத்துல ஒரு அம்பது ரூபாயை எடுத்துக்கிட்டு கறிக்கடைக்காரருக்கு அட்வான்ஸ் கொடுக்கப்போனான்
” எதுக்கு கறி கறின்னு இப்புட்டு வெரசா போற என்னதான் கறிக்கொழம்பு வச்சாலும் நாம ரேசன் அரிசி வாங்கிதானே சோறாக்கனும் கறிக்கொழம்புக்கும் ரேசன் அரிசி சோத்துக்கும் நல்லாவா இருக்கும்”
“அதுக்கு என்னப்பன்றது நம்மல மாதரி ஏழப்பழைங்க பொன்னி அரிசா திங்கமுடியும் இருக்குறத வச்சி ஓட்டு”
“சரி,,சரி போயித்தொல சொன்னா கேக்கவா போற”ன்னுட்டு குப்பன் பொஞ்சாதி ஏனம் பானம் கழுவப்போய்டா
விடிந்தால் தீபாவளி பட்டாசு சத்தம் காதைக் கிழிக்கிறது ஆடு மாடு நாய் எல்லாம் சத்தம் தாங்கமுடியாமல் அங்கும் இங்கும் அலைமோதுகிறது குப்பன் விடியற்காலையிலே ஐந்துமணிக்கெல்லாம் கறிக்கடையில் போய் முதல் ஆளா நின்னு கறியை வாங்கிக்கிட்டு வீடு வந்துசேர ஆறுமணியாச்சி வீட்டுக்குள் புகுந்து மகிழ்ச்சியோடு சிகரத்தைத் தொட்டுவிட்ட வீரனாய் சந்தோசத்தோடு மனைவியிடம் கறியைக் கொடுத்துவிட்டு திரும்பினால் வாசலில் சைக்கிள் பெல் சத்தம் என்னடான்னு உத்துப்பார்த்தால் மாமனாரு ஊர்ல இருந்து ஒருவன் வந்து இருந்தான்
“ஏய் என்னப்பா இந்நேரத்துல வந்து இருக்க என்ன சேதி “
“அது வந்தண்ணா உங்க மாமனாரு நெஞ்சுவலியில் ராத்திரி இறந்து போய்ட்டாரு அதான் தகவல் சொல்ல வந்தேன் “
செய்தியை காதில் வாங்கிய குப்பன் மனைவி அய்யோ அப்பா என்ன அனாதையாக்கிவிட்டு போய்ட்டியேன்னு போட்ட அலறல் பட்டாசு சத்தத்தை எல்லாம் பின்னுக்கு தள்ளியது
சரி தம்பி நீங்க பொறப்படுங்க நாங்க வாரோம்முன்னு சொல்லிட்டு மனைவிக்கு ஆறுதல் சொல்லி புறப்படு ஆகவேண்டிய காரியத்தை பாக்கலாமுன்னு பக்கத்து வீட்டில் கறியைக் கொடுத்து கைக்கு எட்டியது வாயிக்கு எட்டல நீங்களாவது தின்னுங்கன்னுட்டு ஆறாம் நம்பர் பஸ்ஸைப் பிடிக்க அவசரமாய் புறப்பட்டுச் சென்றான் குப்பன்,,, அவன் பொஞ்சாதி பின் தொடர்ந்தால் மூக்கைச் சிந்தியப்படி.
*********