இன்று ஆபீஸ் வேலை முடித்து எழும்பூர் ஸ்டேஷனுக்கு வரும்போது மணி ஒன்பதுபத்து. அங்கிருந்து சானடோரியம் போக வேண்டும். அடுத்த லோக்கல் எத்தனை மணிக்கோ தெரியவில்லை. ஸ்டேஷன் ஓவர் ப்ரிட்ஜில் வந்து கொண்டிருந்தபோது வீட்டிலிருந்து போன்.
“இப்பதான் கிளம்பினீங்களா. எத்தனை மணிக்கு வருவீங்க..”
“ஒரு பத்தேகாலுக்குள்ள கண்டிப்பா வந்துடுவேன்.”
“அல்ளோ நேரமாகுமா. பார்த்து வாங்க. பஸ்ஸுக்காகக் காத்திருக்க வேணாம்” .ஆட்டோலயோ டாக்சிலயோ வந்துடுங்க.”
“நான் எப்டியோ வரேன். நீ தூங்குறதா இருந்தா தூங்கு. இந்நேரம் ஆட்டோ டாக்சில்லாம் இருநூறு ரூபாய் கேப்பான். உங்கப்பாவா குடுப்பாரு”
இந்நேரம் ஆகி பசிக்குமே, களைப்பா இருப்பீங்களேன்னு சொன்னேன். வெளிலயும் சாப்பிட மாட்டீங்க. எனக்கென்ன ஆச்சு. நடந்து கூட வாங்க”.
போன் கட் ஆனது. பாக்கெட்டில் வைத்துக் கொண்டே கொண்டே வலது பக்கம் பார்த்தபோது டிரெயின் வருவது தெரிந்தது. போனைக் கையில் பிடித்துக் கொண்டே தடதடவென்று ஓட ஆரம்பித்தேன். முதுகில் பை வேறு டம்டம் என்று பின்னால் அடித்துக்கொண்டு இருந்தது.
சானடோரியம் ஸ்டேஷனில் ரோட்டில் வந்துகொண்டிருக்கும்போதே ட்ரெயின் வருவது தெரிந்தால் உடனே நாலுகால் பாய்ச்சலில் ஓடி ஆட்டோ, பூ விற்பவர்களையெல்லாம் தாண்டி
சப்வேயில் முப்பதுக்கும் அதிகமான படிகளில் தடதடவென்று இறங்கி ஒரு ஐம்பது மீட்டர் ஓடி… திரும்பவும் வேகவேகமாக படிகளில் ஏறி… அதற்குள் டிரெயின் வந்து நின்றிருக்கும். அதில் வந்து இறங்குபவர்கள் படிகளில் இறங்கும்போது ஏறுபவர்களுக்கு வழிவிட்டு இறங்க மாட்டார்கள்.
அவர்களுக்குள் நுழைந்து நுழைந்து விலக்கி விலக்கி ஏறி மேலே சென்று பக்கத்தில் செல்வதற்குள் டிரைவர் விசிலடித்து வண்டி ஒரு குலுக்கலுடன் நகரும். அடுத்த நொடி ஏற வழி விடாமல் கம்பியைப் பிடித்து நடுவில் நிற்கும்
பசங்களை ஒரு தள்ளு தள்ளி தாவி ஏறி விடுவேன். அதிகபட்சமாக ஒரு இருபது நொடிகளுக்குள் இத்தனையும் நடக்கும்.
ஆனால் பக்கத்தில் இருந்தாலும் எழும்பூர் ஸ்டேஷனில் அது கஷ்டம். நீஈஈளமான ஸ்லோப்பில் இறங்க வேண்டும். முன்னே சாய்ந்து ஓடும்போது லைட்டாக ஸ்லிப் ஆனால் கூட அவ்வளவுதான். அதனால் மெதுவாகத்தான் ஓட வேண்டும்.
எப்படியோ சமாளித்து ஓடி வண்டி நகர்வதற்குள் கீழே வந்து விட்டேன். கொஞ்சம் கூட்டம் அதிகமானதால் டிரைவர் இன்னும் வண்டி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். முதல் கம்பார்ட்மெண்டிலேயே ஏறி விட்டேன்.
பெரும்பாலும் பீச் – தாம்பரம் வண்டியில்தான் ஏறுவேன். செங்கல்பட்டு வண்டி வந்தால் கூட அதை விட்டு விட்டு அடுத்த தாம்பரம் வண்டியில் ஏறுவேன். எழும்பூர் என்பதால் ஏறியவுடன் உட்கார இடமும் கிடைக்கும். இது செங்கல்பட்டு வண்டி போல. ஏறும்போதே சரியான கூட்டம். கூட்டமென்றாலே எனக்கு மூச்சுத் திணற ஆரம்பித்து விடும். எனக்காக
செலவழிப்பது என்றால் மட்டும் நிர்தாட்சண்யமாக மறுக்கும் என் கஞ்சபுத்தி விதித்துள்ள ஆயுள் தடையின் காரணமாக முதல் வகுப்பின் பக்கம் எட்டிப் பார்க்கும் பழக்கமே இல்லாததால் இந்த கூட்டத்தில் திணற வேண்டியதுதான். இருக்கும் கூட்டத்தில் நீந்தி உள்ளே தள்ளிக்கொண்டு போனேன். சராசரிக்கும் சற்று குள்ளம் என்பதால் ரொம்ப நேரம் மேலே கையைப் பிடித்து பயணிப்பது ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்.அதனால் ஜாக்கிரதையாக ஓரமாகப் போய் நின்று கொண்டேன்.
வண்டி முழுக்க நிறைய வடக்கர்கள் ஏறியிருந்தார்கள். எல்லாம் பெரிய பெரிய பெட்டி. பைகள், மூட்டை முடிச்சு. அவை எல்லாவற்றையும் ஏறும் வழியிலேயே வைத்திருந்தார்கள். அதன் மீது இரண்டு மூன்று பேராக உட்கார்ந்தும் இருந்தார்கள்.
இப்போதெல்லாம் ரயில் வண்டிகளில் அலுவலக நேரம் தவிர்த்து வருபவர்கள் எல்லாம் பெரும்பாலும் வடக்கர்கள்தான். சென்ட்ரலில் வந்து நிற்கும் அத்தனை வண்டிகளிலும் அன்ரிசர்வ்டு பெட்டிகளில் வந்து இறங்குபவர்கள் தொண்ணூறு சதவிகிதம்
வடக்கத்தி இளைஞர்கள்தான். கொத்துக் கொத்தாக புதிது புதிதாக வந்திறங்கும் இத்தனை பேருக்கும் தங்க இடம் எப்படி கிடைக்கும் என்று ஆச்சரியமாக
இருக்கும்.
நுங்கம்பாக்கத்திலும் நிறைய கூட்டம் ஏறியது. அவசர அவசரமாக ஏறிய ஒருவர் வடக்க்தியர்கள் வைத்திருந்த பை வாரில் கால் சிக்கி விழத் தெரிந்தார். அந்த அதிர்ச்சியில் தமிழில் செம்மையாக உள்ள வசவுகளை வாரி வழங்கியவர் எங்கடா போறீங்க என்று ஒரு பையனை ஜாடையிலேயே கேட்டார். அவன் புரிந்துகொண்டு “தம்பாராம்” என்றான்.
“தம்பாராமாம் தம்பாராம். அங்கென்ன சிரைக்குறதுக்கு வந்தீங்களா” என்று திட்டினார்.
அந்தப் பையன் முழித்தான்.
அவருடன் வந்தவர் போல தெரிந்த இன்னொருவர், “சார் அவங்களைத் திட்டாதீங்க. பாவம். பிழைக்க வந்தவங்க. இவங்களாலதான் இன்னிக்கு தமிழ்நாட்டுல முக்காவாசி தொழில்கள் பிரச்சினை இல்லாமல் போயிட்டிருக்கு. நம்ம ஊரு பயலுங்களுக்கெல்லாம் பெரிய இவனுங்கன்னு நெனப்பு. கலெக்டர் வேலை மட்டும்தான் பாப்பானுங்க. மத்த வேலைல்லாம் செய்ய மாட்டாங்க.” என்று பேசிக் கொண்டே இருந்தார்.
மாம்பலத்தில் ஒரு கும்பல் ஏறியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலிருந்தார்கள். பெண்கள் அனைவரும் பர்தா அணிந்திருந்தார்கள். அநேகமாக ஆண்கள் எல்லாரும் நீளமான தாடி வைத்திருந்தார்கள். ஏறி உட்பக்கம் சென்று ஓரமாக ஒரே இடத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நெருக்கமாக நின்று கொண்டார்கள். செண்ட் வாசனையோ என்னவோ மூச்சு திணறும் அளவுக்கு பரவியது.
வடக்கத்தி இளைஞர்களுக்கு சப்போர்ட்டாக இருந்தவர் சத்தமாகத் திட்ட ஆரம்பித்தார்.
“வந்துட்டானுங்க. எல்லா இடத்துலயும் இவனுங்க ஆதிக்கம்தான். எங்கேருந்துதான் காசு வருமோ.. நகைக்கடை, துணிக்கடை எல்லா இடத்துலயும் பணத்தைத் தண்ணியா கொட்டுறாங்க. என்ன வேலை செய்றாங்கன்னே தெரியல. எல்லாம் தீவிரவாதத்லுலயும் வெளிநாட்டு ஏஜென்சி கிட்ட இருந்தும் வரும் பணமாதான் இருக்கும்”
கூட வந்தவர் “அண்ணே. சும்மாருங்க. அவங்க பாட்டுக்கும்தானே இருக்காங்க. எதுக்கு தேவையில்லாம வம்பிழுக்குறீங்க. உங்களுக்கு இதே பொழப்பாப் போச்சு” என்றார்.
“நீங்க சும்மா இருங்க. இப்ப கூட எவன் கைலயாவது கத்தியோ துப்பாக்கியோ இருக்கும்”
பக்கத்தில் ஏதோ அசைவு தெரிந்தது. திரும்பிப் பார்த்தேன். அதே மாதிரி நீளமான தாடி வைத்த ஒரு பையன் கையை இறுக்கிக் கொண்டு நின்றிருந்தான். முகம் கோபமாகத் தெரிந்தது. நான் கொஞ்சம் பயத்துடன் நெருக்கத்தில் முட்டித்தள்ளி நுழைந்து கொஞ்சம் தள்ளிப் போய் நின்றுகொண்டேன். திட்டியவர் இப்போது என் பக்கத்திலிருந்தார். அடுத்து வண்டி சைதாப்பேட்டைக்குள் நுழைந்து கொண்டிருந்தது இங்கு நின்றதால் காரணீசுவரர் கோவில் கோபுரம் நன்றாகத் தெரிந்தது. இன்று பிரதோஷம் என்பது ஞாபகம் வந்து. கைகுவித்து கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.
சைதாப்பேட்டையில் ஒரு பழம் விற்கும் அம்மணியும் சமோசா விற்பவரும் ஏறினார்கள். இவ்வளவு கூட்டத்திலும் திறமையாக உள்ளே புகுந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். பழத்தை விட சமோசா விற்பனை படுஜோர். அருமையான வாசனை மூக்கைத் துளைத்தது. இவர்களுடன் ஏறிய ஒரு பார்வையற்றவரும் கூட நகரச் சொல்லி நகரச் சொல்லி லாவகமாக நடந்து கடலை மிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார். கழுத்தில் ஒரு சிலுவை டாலர் சங்கிலி அணிந்திருந்தார்.
திட்டிக் கொண்டிருந்த நம்மாள் என்னிடம் குனிந்து
“இங்க மிட்டாய் விக்குறவனுங்க மாதிரி வேஷம் போட்டுட்டு ஸ்டேஷன் வாசல்ல போயி மதமாற்றப் பிரச்சாரம் செய்வானுங்க” என்றார். நான் இவர் பக்கத்தில் நின்றால் வம்பாகிவிடும் என்று பயந்து கூட்டத்தில் புகுந்து எதிர்ப்பக்கம் போய் நின்றேன். எப்போதும் பயணத்தை ரசித்துக்கொண்டே கடக்கும் நான் இப்போது எப்போதடா இறங்குவோம் என்ற மனநிலைக்கு வந்து விட்டேன்.
வண்டி சரியாக 9.55 மணிக்கு தாம்பரம் வந்தது. இறங்க விடாமல் தடுத்து ஏற முண்டியடித்த கூட்டத்துக்கு நடுவே முட்டி மோதி சமாளித்து இறங்கி விட்டேன். ஏறியது முதல் பெட்டி என்பதால் களைப்புடன் ஒவ்வொரு பெட்டியாகத் தாண்டி நடந்தேன்.
எஸ்கலேட்டரில் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு ஏறிக்கொண்டு இருந்தார்கள். சில மாதங்கள் முன்பு ஈரோடு ஸ்டேஷனில் எஸ்கலேட்டரில் ஏறும்போது கால் நழுவி உதவிக்கு ஒருவர் கூட இல்லாத நிலையில் ஒரு நிமிடத்துக்கும் அதிகமான நேரம் தலைகீழாக மல்லாக்கப் படுத்துக்கொண்டு பயணித்து மேலே சென்றது நினைவுக்கு வர அதனைத் தவிர்த்து விட்டு இன்னும் இரண்டு பெட்டி தூரம் கடந்து மறுபக்கம் வெளியே செல்வதற்காக படியேறும் இடத்திற்கு வந்தேன்.
என்றும் இல்லாத அதிசயமாக கடலை விற்பவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். நான் பார்த்து ஏழரை ஏழே முக்காலுக்கெல்லாம் ஏறக்கட்டி விடுவார். அவரைச் சுற்றி எப்போதும் ஐந்தாறு பேர் நின்று கை நீட்டிக் கொண்டிருப்பார்கள். இன்று யாரையும் காணோம். அவரைப் பார்த்தவுடன் இத்தனை நேரம் தெரியாதிருந்த பசி கபகபவென்று ஆரம்பித்தது. அவர் கூடையை எட்டிப் பார்த்தேன். நல்லவேளை கடலை இருந்தது. வாங்கிக் கொண்டு ஆசுவாசமாய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து பொட்டலத்தைப் பிரித்தேன்.
திடீரென மணி பார்த்தேன். 10.03. இப்பவே லேட்டாகி விட்டது. உட்கார்ந்து சாப்பிட்டால் இன்னும் ஒரு பத்து நிமிடம் லேட் ஆகும். போய்க்கொண்டே சாப்பிடலாம். என்று எழுந்து படிகளில் ஏற ஆரம்பித்தேன். இந்தப் பக்கம் அதிகம் கூட்டமில்லை. அங்கே பார்வையற்ற ஒருவர் ஒவ்வொருவரிடமாக என்னவோ கேட்டுக் கொண்டிருந்தார்.. நான் கடலை சாப்பிட்டுக் கொண்டே கவனிக்காமல் அவர் நிற்கும் பக்கமாகக் கடந்து சென்றபோது.. அவர் சட்டென்று என் கையைப் பிடித்தார்.
பொட்டலத்திலிருந்து இரண்டு மூன்று கடலைகள் சிதறின. என்னாச்சு என்று அவரைப் பார்த்தேன். ஐம்பதைத் தொடும் வயது போல தெரிந்தது. கொஞ்சம் பழசாகத் தெரிந்தாலும் நல்லவிதமாக உடையணிந்து வாட்ச் எல்லாம் கட்டியிருந்தார். ஒரு விசித்திரமான விதத்தில் சட்டையை டக் செய்திருந்தார். கூலிங் கிளாஸ் அணியாமல் பாக்கெட்டில் வைத்திருந்தார். கொஞ்சமாக கறுப்பு தெரிந்த நரைத்த தாடி. தலையில் வெலவெலத்துப் போன ஒரு தினுசான தொப்பி .
“சார் ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா”
ஏதோ பணம் கிணம் கேட்பதாகத்தான் இருக்கும். இல்லாவிட்டால் வாசலில் சில இளைஞர் இளைஞிகள் கையில் பெரிய பெரிய ஃபைல்களோடு மதப் பிரசாரத்துக்காக நின்றிருப்பார்கள். கடந்து செல்லும் ஒவ்வொருவரிடமும் சார் ரெண்டு நிமிஷம் பேசலாமா என்று கேட்பார்கள். பாவமாக இருக்கும். இருந்தாலும் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான். வண்டியில் வரும்போது அந்த ஆள் சொன்னது ஞாபகம் வந்தது. இவரும் அதுபோலவோ என்று நினைத்தேன். என்றாலும் புறக்கணித்துச் செல்ல மனம் வராமல் என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்று நினைத்து “சொல்லுங்க” என்றேன்.
“இங்கே பக்கத்துல எங்கனா ஒரு ஆணும் பெண்ணும் கண் தெரியாதவங்க ரெண்டு பேர் நிக்குறாங்களா பாருங்க.”.
நான் சுற்று முற்றிலும் பார்த்து விட்டு “அப்படி யாரும் இல்லையே” என்றேன்.
“இல்லை சார் கொஞ்சம் நல்லா பாருங்க. அந்தம்மா சுடிதார் போட்டிருக்கும்”.
“நல்லா பார்த்தாச்சுங்க. அப்படி யாரும் இல்லை”.
“சரி சார். இன்னும் ஒரே ஒரு உதவி வேணும்” என்று பாக்கெட்டிலிருந்து ஒரு பழைய நோக்கியா பேசிக் மாடல் செல்லை எடுத்து
“இதுல வெங்கடேசுன்னு ஒரு நம்பர்லேர்ந்து கால் வந்திருக்கும். அதை கொஞ்சம் டயல் பண்ணிக் குடுங்க” என்றார். போன் கீபோர்டெல்லாம் தேய்ந்து அவ்வளவு அழுக்கு. போனைத் தொடுவதற்கே என்னவோ போலிருந்தது.
பார்த்தேன். அப்படி எதுவும் கால் வரவில்லை. கடைசியாக வேறு யாரோ ஒருவரிடமிருந்துதான் கால் வந்திருந்தது. அந்தப் பெயரை அவரிடம் சொல்லி. “இந்தக் கால்தாங்க வந்திருக்கு” என்றேன்..
“அவரில்லை சார்.. வெங்கடேசு கிட்டேர்ந்துதான் கடேசியா கால் வந்தது.. கொஞ்சம் நல்லா பாருங்க”.
அப்படி எதுவும் இல்லை. காண்டாக்ட் டீடெயில்ஸ் பார்க்கலாம் என்று வெங்கடேஷ் என்று அடித்தேன்..
“ஏங்க. அப்படி ஒரு பேரே இல்லைங்க”
“அச்சச்சோ.. இன்னான்னு தெர்லியே சார். சரி.. எனக்கு இன்னும் ஒரு உதவி வேணும் சார். என்னைக் கொஞ்சம் படி ஏத்தி ரெண்டாவது ப்ளாட்பாரம் படிக்கட்டு பக்கமா வுட்டுடுங்க. ஒரு ஓரமா நின்னுக்கிறேன்”
கையினை இன்னும் இறுகப் பிடித்துக் கொண்டார்.
அவரைப் படிகளில் அழைத்துச் சென்று ஒரு ஓரமாக நிற்க வைத்துவிட்டுக் கிளம்பத் தயாரானேன். அவர் கையை விடாமல்
“சார் ஒரு ரெண்டு நிமிஷம் நில்லுங்க சார். அவங்க அடுத்த டிரெயின்ல கூட வரலாம். இறங்கி இப்படித்தான் வரணும். இல்லாட்டி கால் பண்ணுவாங்க. வெயிட் பண்ணி பார்த்துட்டுப் போலாம்”
எனக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. இவர் ஏன் விசித்திரமாக நடந்து கொள்கிறார். போனில் இவருக்கு போன் பண்ணிய்தாகச் சொன்ன ஆள் பெயரும் இல்லை. இது போன்றவர்கள் தினமும் செல்லும் வழியில் சரியாகச் சென்று விடுவார்களே. வேறு ஏதாவது நோக்கமிருக்குமோ.
பரவாயில்லை, நமக்குதான் இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் ரஸ்க் ஆயிற்றே. என்ன ஆகிறது பார்ப்போம் என்று நின்றேன். அவர் நான் போய்விடுவேனோ என்ற சந்தேகத்திலோ என்னவோ என் கையை விடவேயில்லை . .
அடுத்த வண்டியும் வந்தது. இவர் சொன்ன மாதிரி ஒருவரும் வரவில்லை. ஆனால் அவருக்கு ஒரு call வந்தது. எடுத்து காதில் வைத்தார்.
“வெங்கடேசுதான் கூப்பிடுறார். சார். எங்க இருக்கார்னு கேக்கிறேன் இருங்க. ஹலோ.. நான் இங்க ரெண்டாவது பிளாட்பாரத்துல இருந்து மேல வர்ற படி பக்கத்துல நின்னுட்டிருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க.. சுரங்கப் பாதை முன்னாடியா. சரி நான் வர்றேன். சார். அவங்க சுரங்கப் பாதை முன்னாடி இருக்காங்களாம்.. அங்க கொண்டு போயி விட்டுடுறீங்களா”
“எனக்கு சுரங்கப் பாதை எங்க இருக்குன்னு தெரியாதே”
“எனக்குத் தெரியும் சார். நீங்க கூட வந்தா போதும். மெயின் என்ட்ரன்ஸ் வழியா போணும். வாங்க, போலாம்”
நான் போக வேண்டியது வேளச்சேரி ரோடு பக்கம் கிழக்கு எண்ட்ரன்ஸ் . மணி பத்தேகால். அங்கு போய்விட்டு திரும்பி படி ஏறி வர வேண்டும். மிகவும் களைப்பாகவும் சலிப்பாகவும் இருந்தது. இருந்தாலும் வேறே வழியில்லையே. கையை விடாமல் பிடித்துக்கொண்டு போன அவருடன் நடந்தேன்.
முதல் ப்ளாட்பாரத்திலிருந்து வெளியே வந்து சுரங்கப் பாதையின் அருகே சென்றோம். .பஸ் ஸ்டாப்பின் பக்கத்தில் அவர் சொன்ன அடையாளப்படி ஆணும் பெண்ணுமாக இரண்டு பேர் ரோட்டோரத்தில் குவிந்திருந்த கல்திட்டின் மேல் குத்த வைத்து அமர்ந்திருந்தனர். அந்தப் பெண்மணி மின்சார ரயிலில் கடலை விற்பவர் போல. நிறைய கடலை பாக்கெட்டுகளைக் கையில் தொங்க விட்டிருந்தார். இன்னொருவர் செல்போன் ஐடி கார்டு கவர்களை வைத்திருந்தார். இருவரும் ஊன்றுகோல்களை வைத்திருந்தனர். பக்கத்தில் கொண்டு போய் விட்டு,
“சார் இவங்கதானா பாருங்க” என்றேன்.
அவர் முகமலர்ச்சியுடன் “வெங்கி இங்கதான் இருக்கீங்களா” என்றார்.
குரல் கேட்டு இருவரும் வேகமாகத் தடுமாறி எழுந்தார்கள். அந்த பெண்மணி வருத்தமான முகத்துடன்
“பீட்ரு. எங்கல்லாம் உன்னிய தேடுறது. ஒரே வெசனமாப் போயிடுச்சு. தனியா என்னா செய்றீயோன்னு தவிப்பா இருந்தது. உனுக்கு போன் பண்ணலாம்னாலும் பத்து பேரைக் கேட்டா யாரோ ஒருத்தருதான் போனைப் போட்டுக் குடுப்பாங்க. வெங்கடேசு போன்லேர்ந்துதான் கூப்பிடணும். நீயும் ஒருவாட்டி கூட போன் பண்ணி கூப்பிட்டு உனுக்குப் பழக்கமில்லை.. என்ன பண்றதுன்னே புரியல”.
“ஆமா சாந்தி. உங்களைக் காணோமா. நானும் ரொம்ப தடுமாறிட்டேன். என்ன பண்றதுன்னே தெரியலை. நல்ல வேளை தெய்வம் மாதிரி சார் வந்தாரு. விடாம பிடிச்சுகிட்டேன். சார். நாங்க மூணுபேரும் இரும்புலியூர் பாலத்தாண்ட பக்கத்து பக்கத்துல டெண்ட் போட்டு தங்கியிருக்கோம். டெய்லி ஒண்ணா வந்து ஒண்ணாதான் போவோம். பெட்டி கணக்கு வச்சு ஏறி எறங்குவோம். இன்னிக்கு என்னவோ நான் கூட்டத்துல பெட்டி கணக்கை மாத்தி வச்சி ஏறிட்டேன். எல்லாம் கலீஜாயிடுச்சு. சாந்தி , வெங்கி.. சாருக்கு தோத்திரம் சொல்லி வணக்கம் வச்சுகுங்க. பாவம் அவர் வேலைய விட்டு இந்த ராத்திரில நமக்காக இம்மா நேரம் ஸ்பெண்ட் பண்ணி வந்திருக்காரு”
அந்தம்மா கைகூப்பி “வணக்கம் சார். பெரிய உதவி செஞ்சிருக்கீங்க. உங்க புள்ள குட்டில்லாம் நல்லா இருக்கணும். நாங்க இனி சேர்ந்து ஜாக்கிரதையா போயிப்போம். நீங்க பத்திரமா போயிட்டு வாங்க சார். ரொம்ப நேரமாயிடுச்சு”
என்றார். அந்த வெங்கடேஷும் அவர் சொல்வதெற்கெல்லாம் தலையாட்டிக்
கைகூப்பிக் கொண்டே நின்றார்.
“சரிங்க. நான் போறேன். ஆமா நீங்கள்லாம் எந்த ஊரு..”
“நாங்கள்லாம் வெவ்வேற ஊருதான் சார். ஊட்டுக்கு தண்டமா இருக்க வேணாமுன்னு இங்க வத்துட்டோம். ரொம்ப நாளா ஒரே எடத்துல சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்கோம். இங்க எங்களை மாதிரி நிறைய பேர் இருக்காங்க. வயித்துப் பாட்டுக்கு பிச்சை எடுக்க வேணாமேன்னு இந்த மாறி வியாவாரம் செஞ்சு பொழைக்கிறோம்”.
“ஒகே. நல்ல விஷயம்தான். பார்த்து கவனமா போங்க.
பீட்டர் ”மூணுபேரும் இருக்கோம்ல சார். எங்களுக்கான அடையாளத்தை வச்சுகிட்டு சரியா போயிடுவோம். பிரிஞ்சுட்டாதான் கஷ்டம். வரோம் சார். ரொம்ப நன்றி”.
மூன்று பேரும் எல்லாவற்றையும் சரிசெய்து கொண்டு ஒருவர் முன்னால் ஊன்றுகோலைத் தட்டிக் கொண்டு செல்ல மற்ற இருவரும் ஒருவரின் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டு சுரங்கப்பாதையில் ஒரே மாதிரி சீராக படியிறங்கத் தொடங்கினார்கள். நான் அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.
மனம் வெறுமையாக இருந்தது. ஏற்கனவே இரைச்சல் பிரச்சினையுள்ள வலது காதில் அலை ஓசை பயங்கரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. நெற்றிப் பொட்டில் விண் விண் என்று தெறித்தது. அந்த நபர் என்னிடம் போனைக் கொடுத்து கடைசியாக வெங்கடேஷ் என்பவர் அழைத்ததாகச் சொல்லி அந்த நம்பரை அழைக்கும்படி சொல்லி நான் அதை சரிபார்த்தபோது கடைசியாக அழைப்பு வந்திருந்தது சையத் ஹஃபீஸ் என்பவரிடமிருந்து. அதைப் பார்த்ததும் மிரண்டு விட்டேன். வெங்கடேஷ் என்பவரின் பெயரும் காண்டாக்ட் லிஸ்டில் இல்லை என்றதும் நான் அவரைஒரு தீவிரவாதியோ என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கத் தொடங்கினேன். செல்லில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பட்டனை அழுத்தினால் எங்காவது குண்டுவெடித்து விடுமோ என்ற சந்தேகமெல்லாம் கூட வந்தது.
அவர் ஒரு கையால் என்னைப் பிடித்துக் கொண்டு படியேறியபோது அவரது இன்னொரு கை என்ன செய்கிறது என்று நான் கண்காணித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை தீவிரவாதியாக இல்லாவிட்டாலும் திடீரென்று கத்தியைக் காட்டி கையில் இருப்பதையெல்லாம் கேட்டால்… இன்றைக்கென்று பார்த்து கழுத்தில் மூணு பவுன் செயின் வேறு அணிந்திருந்தேன்.
கீழே சென்று அவரை சேர்க்கும் வரை எனக்கு அந்த சந்தேகமும் பயமுமேதான் பிரதானமாக இருந்தது.
ஒரு குறிப்பிட்ட பெயர் மாற்றத்தைப் பார்த்ததும், நேரம், சூழ்நிலை, யாரோ உளறியது எல்லாம் வைத்து ஆதரவற்றவர்களின் மேல் கூட சந்தேகம் வரும் அளவுக்கு மனம் தடம் புரண்டு போயிருக்கிறது. இதை வெளியில் காட்டாமல் உதவி செய்வதாக நடிப்பு வேறு.
பாவம், அவர்கள். கண் தெரியாதவர்கள். வேறு யாராவது டயல் பண்ணிக் கொடுத்தால்தான் உண்டு. செல்லில் பெயர் மாறி இருந்ததற்கு என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை அவரிடமே கேட்டிருக்கலாம். அதைச் செய்யாமல் ஒரு கேவலமான கண்ணோட்டத்துடனே உண்மையைக் கண்டுபிடிக்கும் நோக்கில் அவருடன் சென்றிருக்கிறேன்.
சட்டென்று ஏதோ உரைக்க. கையிலிருந்த கடலைப் பொட்டலத்தைத் தூக்கிப்போட்டு விட்டு. அந்த பெயர் மாற்றத்தை சரிசெய்து கொடுக்க சுரங்கப்பாதை படிகளில் தடதடவென்று இறங்கி அவர்களைத் தேடி ஓடினேன்.
……