காலை ஐந்து மணிக்கு படுக்கையில் இருக்கும்போது செல்வம் ஃபோன் செய்து விஜயராஜ் இறந்துவிட்டதாக தகவலை சொன்னான். ஒரு நிமிடம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. கண்டிப்பாக கனவாக இருக்கும் என்றே நினைத்தேன். முழுதாக விசாரிப்பதற்குள் அவன் வைத்துவிட்டான். இருண்ட காட்டுக்குள் தனியாக அமர்ந்திருப்பதாக ஒரு பிரமை ஏற்பட்டது. வாழ்வின் கெடும் நிலைகள் எவ்வளவு கொடூரமானது என்பதாக மனம் பித்துபிடித்தார்போல அரற்ற ஆரம்பித்தது. திரும்பிப்பார்த்தேன். அருகில் அமைதியான குழந்தை போல சரசு தூங்கிக்கொண்டிருந்தாள். அவளை எழுப்பி விஷயத்தை சொல்லலாமா என்ற எண்ணத்தை உடனே அழித்துவிட்டேன். இதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதாக அவளுக்கு தெரியவேண்டாம் என்று திடீரென்று தோன்றியது.
மெதுவாக எழுந்து என் சட்டையின் உள் பாக்கட்டை துழாவி சரசுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த இரண்டு சிகரெட்டுகளையும் தீப்பெட்டியையும், செல்ஃபோனையும் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் மொட்டைமாடிக்கு நகர்ந்தேன். மாடியின் கதவை மெதுவாக சாத்தி தாளிட்டேன். இரவு நீண்டதான பொழுது. இன்னமும் வெளிச்சம் பரவவில்லை. அங்கங்கே பால்காரர்களின் சைக்கிள் மணி சத்தமும், தூரமாய் யாரோ வாசல் தெளிக்கும் சத்தமும் கேட்டது. வாசல் தெளித்து கோலமிடும் அந்த பெண்ணின் மனதில் இப்போது என்னவிதமான எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும் என்று சம்மந்தமில்லாமல் நினைக்க ஆரம்பித்தேன். சம்மந்தமில்லாதது போலத் தோன்றினாலும் இதேபோன்ற அதிகாலையில் இதேபோல வாசல் தெளிக்கும் சத்தம் கேட்க சைக்கிளில் அலைந்தது ஞாபகம் வந்தது. நைட்டி போடும் வழக்கம் பரவ ஆரம்பித்திருந்தாலும் பானுமதி தாவணியை விடுவதாயில்லை.
சிகரெட்டை பற்றவைத்து ஆழ்ந்து இழுத்தேன். அதிகாலையில் முதல் சிகரெட்டின் முதல் புகையின் முழுமையான உணர்வு ஏதும் தோன்றாமல் மறுபடி வேகமாக இழுத்தேன். பாதி சிகரெட்வரை நெருப்பு விழுங்கும் வகையில் வெறிகொண்டு இழுத்தேன். வெளியேறும் புகையின் நடுவில் கோலம் போட்டவாறு பானுமதி சிரித்தாள். என்னை கவனிக்காதவள் போல காட்டிக்கொண்டாலும் அவளின் ஓரப்புன்னகையும், கோலம் போடும்போது புறங்கையால் கன்னத்தில் விழும் முடிக்கற்றையை கோதிக்கொள்ளும் பாங்கில் நான் இருக்கிறேனாவென்று ஒரு நொடி கவனித்து சட்டென்று கோலத்தில் ஆழ்ந்துவிடுவதாக காட்டிக்கொள்ளும் அழகையும் ரசித்தபடி நின்று கொண்டிருந்தேன். வீட்டுக்குள் இருந்து அழைப்பு சத்தம் கேட்க, அவசர அவசரமாக கோலத்தை முடித்துவிட்டு எழுந்து அதை ரசிப்பதுபோல மறுபடி ஒருகணம் என்புறம் பார்வை. மீண்டும் சத்தம் வர, வேகமாக வீட்டுக்குள் நுழையும் முன், என்னை பார்க்காமல் மின்னலின் ஒரு கணத்தில் என்னிடம் விடைபெறுவதாக கைகாட்டினாள். புகை கலைய ஆரம்பித்தது.
மிகவும் விலைமதிக்கமுடியாத, அல்லது மீண்டும் பெறமுடியாத புதையல் என்பது இது போன்ற கண நேர சந்தோஷங்கள்தான். இதை வார்த்தையில் சொல்லி விளங்கவைக்க முடியாது. அந்த கைகாட்டுதலின் பரவசம் அதிகாலை இருளை விலக்கி மிகப்பிரளயமான வெளிச்சத்தை பாய்ச்சியபடி என் கண்களின் வழியே ஊடுருவி உடல் முழுதும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அதை, அந்த கண நேர அனுபவத்தை உணர்ந்தவர்களுக்கு தெரியும். அதன்பின் என் சைக்கிளில் ஏறி அமர அது என்னை எங்கெங்கேயோ சுற்ற வைக்கும். வாய்விட்டு பாட்டு பாடச்சொல்லும். ஆளில்லாத மயான வெளியில் “ஆஆ…” வென சத்தமாய் கத்தச்சொல்லும். கையில் சிகரெட்டின் கடைசி நுனி சுடஅதை தவறவிட்டேன். பொறிகளை சிந்தியவாறு உருண்டோடியது அது. மெதுவாக இருள் விலக ஆரம்பித்திருந்தது. மாடியின் சுவரில் வந்தமர்ந்த குருவிகள் தத்தித்தத்தி அருகே வர முயற்சித்தன. நான் அவற்றையே உறுத்துப்பார்க்க அவை என்னை பார்த்து சிரிப்பதாக தோன்றியது. தலையை சுற்றிச்சுற்றி அவை என்னை ஆழம் பார்த்தன. நான் மீண்டும் சிகரெட்டை பற்றவைக்கும் சத்தத்தால் பதறி படபடவென்று சிறகடித்தபடி ஓட ஆரம்பித்தன.
பானு இதே போல்தான் பதறுவாள்.
“இதோட மூணாவதுடா….” என்று என் தோளில் சாய்ந்தபடி என்னை பார்த்து சொல்லுவாள். அவள் கண்களில் கோபமும் ஆதங்கமும் இருக்கும்.
“இதான் கடைசி…”
“இப்படிதான் போன சிகரெட்டுக்கும் சொன்ன….”
“சந்தோசமா இருக்குடீ… நீ என் தோளில் சாய்ந்து பேசிக்கிட்டு இருக்க…எனக்கு அதை கொண்டாட எதாவது பண்ணனும்… அதான் பத்த வச்சுக்கிட்டே இருக்கேன்….”
“அட திமிர் பிடிச்சவனே…. நீ தம்மடிக்க இப்படிலாமா சாக்கு சொல்லுவ?… நானும் பத்த வச்சுக்கிட்டா?”
“வேணுமா?”
“பிஞ்சுசுடும்… நாத்தம் தாங்கலை …முதல்ல அதை தூர எறி….” என்று கத்த ஆரம்பிப்பாள். சிரித்தபடி ஆழமாய் இழுத்துவிட்டு தூரப்போடுவேன்.
“இதெல்லாம் கெடுதல்டா …நீயும் …உனக்கும் எதாவது ஒண்ணுன்னா என்னை நினைச்சுபாரு….விட்டுடுடா… நல்ல பையன்தான் நீ …இதெல்லாம் எப்படி கத்துகிட்ட…?”
குறைத்துவிட்டேன். சரசுக்கு தெரியாமல் காப்பாற்றுவதே பெரிது. ஆனாலும் நான்கைந்து ஆகிவிடுகிறது. ஒருவேளை அப்போதே விட்டிருந்தால் என் கதை மாறியிருக்குமா என்றெல்லாம் குழப்பியது. பானுமதியின் அப்பா புகை பிடிப்பவர் இல்லை. அவள் ஒரே பெண். அவளின் அப்பா ஓய்வு காலத்திற்குப்பின் வீட்டின் முன்புறம் சின்னதாக க்ளினிக் வைத்து நடத்தி வந்தார். அரசு மருத்துவராக இருந்தபோதே ஓரளவு நல்ல பெயர் உடையவர். அவர்கள் குடியிருக்கும் வீட்டுடன் ஒட்டிய மூன்று வீடுகளின் வாடகை கனிசமான வருமானம். அத்தனை சொத்துக்களும் பானுமதிக்கே சேரும்.
“என்னை ஏத்துக்குவாங்களா பானு?” என்பேன்.
“நான் சொன்னா கண்டிப்பா ஏத்துக்குவாங்க… ஏன் திடீர்னு இப்படி ஒரு கேள்வி…?”
“கொஞ்சம் பயமா இருக்குடீ….”
“கொஞ்சம் பொறுமையா இரு… எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்று என் மடியில் படுத்தபடி என் சட்டைக் காலரை இழுத்தபடி பேசுவாள். அவள் கண்களில் வழியும் அந்த அன்பின் வீச்சை தாங்கமுடியாமல் என் கண்கள் கலங்கிவிடும். அன்பானவள் அவள். ஒரு சிறு உயிருக்கும் தீங்கு நினைக்காத முழுமையான அன்பின் உருவம் அவள். உலகில் தப்பிப்பிறந்த தெய்வப்பிறவி. என்னை மீறி என் கண்கள் கலங்க ஆரம்பித்தது. கதவை தட்டும் சத்தம் கேட்க சட்டென்று சிகரெட்டை அணைத்து துண்டுகளை பொறுக்கி மொட்டைமாடிச் சுவற்றை தாண்டி வெளியே எறிந்தேன். கதவை திறந்தேன். சரசு கைகளில் டீ டம்ளருடன் நின்றுகொண்டிருந்தாள்.
“என்னங்க…காலையில் இங்க….?” என்றபடி டீயை தர அதை தள்ளி நின்று வாங்கிக்கொண்டு சுவரோரமாய் நகர்ந்தேன்.
“வந்து ஃபோன் வந்தது சரசு… நீ தூங்கிக்கிட்டு இருந்தியா… அதான் டிஸ்டர்ப் பண்ணாம இங்க வந்தேன்.”
“ஓ… யார் அது… காலையிலயே…” என்று கேட்டபடி அவளும் என் அருகில் வந்தவள் “தம்மடிச்சீங்களா?” என்று முறைத்தவாறு கேட்டாள்.
“அது…அந்த செல்வம் பேசினான்பா…. விஜயராஜ் இறந்துட்டதா….”
அவள் கவனம் மாற…
“யாரது விஜயராஜ்…?” என்றாள்.
“என் ஃப்ரெண்டு பானு இல்ல… அதான் போனமாசம்கூட கோயில்ல பாத்தியே… ரகு ஹாஸ்பிடல்ல ஒரு டாக்டரை கன்சல்ட் பண்ணச்சொன்னாங்களே”
“ஆமா… உங்க நெருங்கிய ஃப்ரெண்டு… பாத்து நாலஞ்சு வருஷமாச்சுன்னு சொன்னிங்களே…”
“அதான்பா… அவங்க வீட்டுக்காரர்…”
“அட கடவுளே… அன்னிக்கு கோயில்ல கூட பார்த்தோமேங்க…நல்லா சிவப்பா… அவர்கூட கலெக்டரேட்ல வொர்க் பண்றார்னு நினைக்கிறேன்”
“அவரேதான்பா… “
“சின்ன வயசுப்பா… அட்டாக்கா…?”
“இல்ல சரசு…ஆக்சிடெண்ட்…”
சரசுவின் முகம் வெகுவாக மாறிப்போனது. என்னோடு பேசும்போது எதுவும் தெரியாதது போல ‘அவங்களா’ என்பதாக பேசுவாள். ஆனால் சில சமயம் பானுவைப்பற்றி பேசும்போது என் முகம் பிரகாசமாவதையும், சில பரிசு பொருட்களை நான் என் அட்டத்து பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதையும் கவனித்திருக்கிறாள். ஒரு சில சமயம்… ‘உங்க பானுவா’ என்பாள். சற்றே யோசிக்கும்போது நான் நாள் முழுவதும் பானுவைப் பற்றியே நினைத்திருக்கிறேன் என்பது எனக்கே இப்போதுதான் புலனாயிற்று. வாரத்தில் இரண்டு மூன்று தடவையாவது அவளைப்பற்றி சரசுவிடம் பேசியிருக்கிறேன். அவளும் அதை கவனிக்காதது போலவும் அதே சமயம் அதை பேசுவதால் நான் சற்று ஆசுவாசமாய் இருப்பதையும் கவனித்திருக்கிறாள் என்பதும் அவள் கண்களில் இப்போது படித்தேன்.
ஒரு மின்னல்போல எல்லாம் நடந்து முடிந்துபோனது. இரண்டு ஆண்டுகாலம் பானுவுடன் இருந்திருப்பேன். அவளையோ என்னையோ தனித்தனியாக பிரித்து பார்ப்பதே இயலாத நாட்கள். பெயரளவில் அவள் பெண்ணாகவும், நான் ஆணாகவும்…இரு வேறு உடல்களில் ஒரே உயிர் போலதான் இருந்தோம். இதில் உயர்வு நவிற்சிகூட இல்லை. என் முகத்தை பார்த்தே என் மனதில் இருப்பதை சொல்வாள். மிக சந்தோஷமாக இருப்பதாக அவள் ஃபோன் செய்யும்போது இயல்பாகவே என் மனம் சந்தோஷத்தில் இருந்திருக்கும். சட்டென்று ஒரு சோர்வு வரும்போது அவளுக்கு ஃபோன் செய்து ‘ஏன்பா டல்லா இருக்க?’ என்று கேட்கலாம். ‘அட கூடவே இருந்து பார்த்த்து போலவே கேட்கற பாரு’ என்பாள். இத்தனைக்கும் நாங்கள் பழக ஆரம்பித்ததே ஒரு விபத்து போலதான். என் நண்பனின் திருமணத்தில் அவளை சந்தித்தேன். பெண்ணின் தோழியாக அவளும் மாப்பிள்ளையுடன் நானும் இருக்க, அவர்களுக்கு மேக்கப், இன்னபிற விஷங்களில் நாங்கள் கலந்து பேச, ஒரு இனம் புரியாத ஈர்ப்பு எங்களுக்குள் ஏற்பட்டது. ஒரே ரசனை, ஒரே போன்ற குணம், அதில்லாமல் எனக்கானவள் அவள் என்பதான ஒரு ஜென்ம பந்தம் அது.
சில தடவை எங்கள் வீட்டுக்கும் வந்து போயிருக்கிறாள். எங்களுடையது ஒரு சிறு ஓட்டு வீடு. அப்போது. அவர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியது அது. அளவில், வசதியில் எல்லாமே. ஆனால் சிறு தயக்கமும் இல்லாமல் தன்னுடைய வருங்கால வீடு என்பதான ஆர்வத்தில் சுற்றிச்சுற்றி வருவாள். அவள் வரும்போது முடிந்தவரை ஆளில்லாமல் பார்த்துக்கொள்வேன். டீ போடுவோம், சிறு சமையல் செய்வோம். அது சமயம் எங்களின் கைகள் மோதிக்கொள்ளும். அதுகூட அழானாதாகவே இருக்கும். அதிகபட்சம் என் மடியில் படுத்தபடி எதாவது பேசிக்கொண்டே இருப்பாள். அவள் போனதும், என்ன பேசினோம் என்பதே ஞாபகத்தில் இருக்காது, முழுவதும் அவள் உதட்டசைவை, கண்களை அந்த விரல்கள் என் விரல்களுடன் விளையாடுவதை மட்டுமே ரசித்துக்கொண்ட்டு இருந்திருப்பேன். எல்லாம் கூடிவரும்போலதான் தெரிந்தது. உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டம் செய்த ஒரு ஜீவனாக என்னை நினைத்துக்கொண்டிருந்தேன்.
“எப்படி பானு என்னை உனக்கு பிடிச்சது?” என்பேன்.
“நீதான் ஆள் மயக்கியாச்சே… அதான் என்னை மயக்கிட்ட” என்று கொஞ்சுவாள்.
“உன் அழகுக்கு நான் கொஞ்சம் டல்லுதானில்ல….”
“நீதான் என் அழகன்… என் கோணபல்லன்…” என்பாள்.
“எப்படி உன் அப்பாகிட்ட பேசுவேன் நான் “ என்று தயங்குவேன்.
“நான் ஒரு நாள் சொல்றேன்… ரெடி பண்ணி வைக்கிறேன். வா..வந்து இதோ பாருங்க மிஸ்டர் கண்ணபிரான்… நான் உங்க பெண்ணை விரும்பறேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். உங்க பணம் ஒரு பைசா வேணாம். நீங்களா ஒத்துகிட்டா உங்களுக்கு மரியாதை… அப்படின்னு கெத்தா அடிச்சுவிடு… நானும் ஆமான்னு உன் பக்கம் நிக்கறேன். அவ்ளோதான்.” என்று சிரித்தபடி சொல்லுவாள். அப்படி ஒருதடவை அவர்கள் வீட்டுக்கும்போய்விட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் அந்த கண்ணபிரானிடம் இல்லாத காய்ச்சலுக்கு ஒரு ஊசியை போட்டுக்கொண்டு திருதிருவென்று விழித்தபடி இருக்க, அவளோ ஓரக்கண்ணால் என்னை பார்த்து சிரித்தபடி “அப்பா..இது என் ஸ்கூல்மேட்… பாத்து கம்மியா ஃபீஸ் வாங்குங்க” என்று சொல்லிவிட்டு சிரிப்பை அடக்கியபடி உள்ளே ஓடிவிட்டாள். அவர் என்னிடம் ஃபீஸே வாங்கவில்லை. அதன்பின் அடிக்கடி அவரை வழியில் பார்த்து என் முகத்தை அவர் மனதில் பதிய வைக்க முயன்றுகொண்டிருந்தேன்.
சட்டென்று ஒரு நாளில் பானுவின் பேச்சு என்னிடம் தடைபட்டது. எதுவும் சண்டையோ மனஸ்தாபமோ எதுவுமே இல்லை. என்னை பார்ப்பதையே தவிர்த்தாள். நான் தொடர்ந்து அவளுக்கு மெசேஜ் போட முயல…சில நாளில் என்னை ப்ளாக் செய்தும் வைத்தாள். என்ன காரணம் என்றே தெரியாமல் அந்த நரக மாதங்களில் பைத்தியமாகவே அலைந்தேன். அப்படி ஒரு நாளில்தான் கண்ணபிரான் என்னை வழியில் சந்தித்தார்.
“தம்பி… பானுவோட ஃப்ரெண்டுதானே நீங்க…?”
“வந்து… ஆமாங்க…அது…”
“ஓகே…சாயந்திரம் வீட்டுக்கு வரீங்களா…பேசணும்”
பயமும் பதட்டமுமாக இருப்பதில் நல்ல சட்டையாக மாட்டிக்கொண்டு, நன்றாக சேவ் செய்த முகத்துடன் நெற்றியில் நீறு எல்லாம் வைத்துக்கொண்டு அவர்கள் வீட்டுக்கு போனேன். பானு வந்து டீ கொடுத்தாள்.
“தம்பி…பானுவோட கல்யாணத்துக்கு நண்பர்கள் நீங்க எல்லாம் முதல் நாளே வந்து உதவி பண்ணனும்… நெருங்கிய நண்பர்களை ஒவ்வொருத்தரா கேட்டு கேட்டு உதவி வாங்கறேன். அதிக சொந்தமில்லை பாருப்பா… அம்மா இல்லாத ஒரே பொண்ணு… நீங்களாம் வந்துதான்……”
பானு வெளியே வரவேயில்லை. அவள் அப்பா தந்த பத்திரிக்கையை பார்த்தேன். மிக வசதியான மாப்பிள்ளைதான் போல. விஜயராஜ். அரசு வேலை. சொந்த வீடுகள்…சொத்து. பானுவுக்கு தகுந்த வரனாகத்தான் தெரிந்தது. வீட்டோடு வந்துவிடுவதாக மாப்பிள்ளை சொல்லியிருந்தாராம். மிகவும் மகிழ்வாக என்னை காட்டிக்கொண்டு கல்யாணத்துக்கு முதல் நாளிலேலே போய்விட்டேன். என் வீட்டு விஷேசம் போல அனைத்து வேலைகளையும் எடுத்துபோட்டுக்கொண்டு செய்தேன். பெண்ணழைப்பின் போது ஒரு தேவதை போல பானுவை அலங்கரித்து கூட்டிவந்தார்கள். வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த தேவதையை என்னுடன் இணைத்து வாழும் வாழ்வை நினைத்து நானே சிரித்துக்கொண்டேன். அவள் என்னுடன் பழகிய நாட்கள் எனக்கு அவள் நட்பின் பால் அளித்த மாபெரும் பரிசாகவே தோன்றியது. என் ஒவ்வொரு சுக துக்கங்களிலும் அவளது நினைவுகளே துணையாக இருப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். எனினும் அவள் கழுத்தில் தாலியேறும்போது நான் வெளியேறிவிட்டேன்.
அதன்பின் நான் வெளியூருக்கு சென்று வேலை தேடிக்கொண்டேன். இரண்டு ஆண்டுகள் அவளை முழுதாக பார்க்கவேயில்லை. என் மனதில் இருப்பதையெல்லாம் நண்பன் செல்வம் இடம் அவ்வப்போது உளறிக்கொண்டிருப்பேன். மிகவும் நம்பிக்கையானவன் ஆதலால் அவனுடன் பகிர்ந்துகொள்வது எனக்கு ஆபத்தில்லாததாகவும், மனதுக்கு சற்று இதம் தருவதாகவும் இருந்தது. அப்படி ஊருக்கு வந்த ஒரு சமயம் அழகான குழந்தையுடன் அவளை சந்தித்தேன். கூட இருந்த விஜயராஜிடம் என்னை அறிமுகப்படுத்தினாள் அவள்.
“ஓ…இவரை நம்ம கல்யாண ஃபோட்டோவில் பார்த்திருக்கேன்….” என்றார் விஜயராஜ்.
“என் ஸ்கூல்மேட்… நல்ல ஃப்ரெண்ட்… ஏண்டா…நீ இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க… உன்னை அந்த கோலத்தில் நாங்க பார்க்கணுமே…”
அதே மாத்த்தில் வீட்டில் சொல்லி சரசுவை நான் திருமணம் செய்துகொண்டேன். என் திருமணத்திற்கு பானு மட்டும் குழந்தையுடன் வந்துபோனாள். பலதடவை என் நண்பர்களை பற்றி சரசுவிடம் பேசியிருக்கிறேன். பானுவை கொஞ்சம் அதிகமாக. சென்ற மாதம் அவளை சந்தித்த போது மிகவும் மகிழ்வாக உணர்ந்தேன். அவள் சரசுவுடன் நீண்ட நாள் பழகிய தோரணையில் ஒருமணி நேரம் பேசிக்கொண்டிருந்தாள். குழந்தை பிறக்காமல் இருப்பதையும், அதற்கான ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருப்பதையும் சரசு சொல்ல, பானுவே ஒரு டாக்டரை ரெகமண்ட் செய்தாள். அப்போது வந்த விஜயராஜை சரசுவுக்கும் அறிமுகப்படுத்தினாள். அவள் சந்தோஷமாக இருப்பதை பார்க்கும்போது என்னுடன் இருந்திருந்தாள் அவளுக்கு இதே சந்தோஷம் கிடைத்திருக்காது என்றே தோன்றியது. சரசு என்னுடன் இணைவதற்காகவே பானு என்னை விட்டுக்கொடுத்திருக்கிறாள் என்றுகூட எனக்குத் தோன்றும்.
“நீங்க போக வேணாம்ங்க” என்றாள் சரசு.
“அதெப்படிபா…கேட்டு போகாம இருக்க முடியும்…. நல்ல ஃப்ரெண்டுபா”
“புரியுது. ஆனா உங்களுக்கு மனசு தாங்காது. சொன்னா கேளுங்க… யாரோ எவரோ…சொந்தம்னாகூட தெரிஞ்சுக்காது… ஆனா நல்ல ஃப்ரெண்டுக்கு இது ஒரு பெரிய இழப்பு. கண்டிப்பா உனக மனசுக்கு கஷ்டமா இருக்கும்…. குழந்தைக்கு மூணு வயசுதான் போல…பாவமே… கடவுளுக்கு கண்ணே இல்லைன்னு இதான் சொல்லுவாங்க போல”
“சும்மா போய் எட்டி பார்த்துட்டு வந்திடறேன் சரசு… நீயும் வா… போனதும் வந்திடலாம்”
“நானா…. தெய்வமே… நானெல்லாம் அழுது புலம்பிடுவேன். காரியத்துக்கு போயிட்டு வாப்பா…இப்ப வெளியூர்னு சொல்லு” என்று சரசு சொல்லிகொண்டிருக்கும்போதே செல்வம் கால் செய்தான். வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாக சொன்னான். செல்வம் எனக்கு நெருங்கிய நண்பன், அதே போல பானுவுக்கு ஏதோ வகையில் சொந்தம். சிறிது நேரத்தில் செல்வம் வர, நானும் அவனுடன் கிளம்பினேன். போகும் வழியில் நான்கைந்து இடங்களில் இறங்கி இறங்கி சிகரெட்டுகளை முடித்தோம். அவனுடன் அதிகம் பேச முடியவில்லை. ஆனால் என்ன கண்கள் கலங்கியபடி இருப்பதை கண்டுகொண்ட அவன் அதை தெரியாதவாறு ஆறுதல் சொல்லுவதாக பேசிக்கொண்டே வந்தான். நேற்று இரவே நடந்திருக்கிறது என்றான். பைக்கில் போனவர் மேல் லாரி மோதியிருக்கிறது. முகம் முழுவதும் சிதைந்து….போஸ்ட்மார்ட்டம் முடிந்து பாடி வந்துவிட்டதாக அவனுக்கு தகவல் வந்தது. நல்ல பெரிய மாலையாக வாங்கிக்கொண்டு பானுவின் வீட்டுக்கு போனாம்.
எனக்கு கால்கள் மிகவும் நடுக்கம் பிடித்தது. மயக்கம் வருவது போலவும் இருந்தது. நேற்று இரவு பானு எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பாள். குழந்தையை கொஞ்சிக்கொண்டு …. வரப்போகும் கணவனை வரவேற்க…அவனுக்கு டிஃபன் செய்துகொண்டு…இந்த வாரம் எங்கெல்லாம் போக திட்டமிட்டிருப்பார்கள். ஃபோன் வந்திருக்கும்…. இதுபோல உன் கணவன் ஆக்ஸிடெண்ட்… அய்யோ கடவுளே … என்ன பாடுபட்டிருக்கும் அவள் மனம். இன்னமும் இளம் வயதின் நடுப்பகுதியைகூட அவள் தாண்டவில்லையே…. நான் இன்னும் கல்யாணம் பண்ணாமல் இருந்திருந்தால் பானுவை ஏற்றுக்கொண்டிருப்பேனே… என்றெல்லாம் மனம் பலவாறாக புலம்பிக்கொண்டே வந்தது. இன்னும் சில மாதங்களில் அவள் மன ஆறுதலடையும். அது சமயம் அவள் அப்பாவிடம் பேசி அவளுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்றும் மனதுக்குள் ஒரு எண்ணம் தோன்றியது.
வாசலில் நல்ல கும்பல். வீட்டிற்குள் ஐஸ்பெட்டி நுழையாததால், வாசலிலேயே கிடத்தியிருந்தார்கள். விஜயராஜ் நல்ல அழகு. என்னை விட ஒரடி உயரம். நல்ல ஜிம் பாடி. ஆனால் எல்லாம் மூட்டை கட்டி முகம்கூட தெரியாமல் இருந்தது அந்த உருவம். பகீரென்றது, மனித வாழ்வின் விசித்திரங்களை, அதன் விளையாட்டை ரசித்து கடந்து செல்லும் ஞானியின் மனநிலையை எல்லோரும் பெறமுடிந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று மனம் ஒப்பாரி வைத்தது. என் கண்கள் பானுவை தேடின. அவள் அங்கே இல்லை. செல்வம் தன் கண்களால் பானு உள்ளே இருப்பதாக சைகை காட்டினான். நான் ஓரமாக உட்கார்ந்து அங்கிருந்தபடியே அவளை தேடினேன். என் கண்களில் படவில்லை.
நிறைய கார்கள், நிறைய பெரிய மனிதர்கள். பானுவின் அப்பா மிகவும் சோர்வாக காணப்பட்டார். இருந்தாலும் அங்கும் இங்கும் அலைந்தபடி அவர் இருப்பதை காண பரிதாபமாக இருந்தது. பானுவின் குழந்தை என்று நினைக்கிறேன். ஓரிரு தடவை மட்டும் பார்த்ததால் எனக்கு சரியாக தெரியவில்லை. அது அந்த ஐஸ் பெட்டியை தொட்டு அதன் குளிர்ச்சியை தடவி சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது. நல்லவேளையாக சரசுவை கூட்டி வரவில்லை என்று மனதில் நினைத்துக்கொண்டேன். குழந்தையை பார்த்தவுடன் அவள் மனமே வெடித்திருக்கும்.
சிகரெட் பிடிக்கவேண்டும் போல இருந்தது. வெளியே சென்ரறு வரலாம் என்று எழ, செல்வம் வீட்டுக்குள் இருந்து என்ன என்பதாய் கேட்டான். விரல்களால் சைகை காட்டினேன். என்னை அவன் வா என்பதாக சைகை காட்ட, தயங்கியபடி வீட்டிற்குள் நுழைந்தேன். பானுவின் கோலத்தை எப்படி மனதில் ஏற்றுக்கொள்வேன் என்று படபடப்பாக இருந்தது. வாழ்வின் மிகக்கொடுமையான கணங்களாக உணர்ந்தேன். ஆனால் வீடு வெறிச்சோடி இருந்தது. ஓரிருவர் மட்டும் உள்ளும் புறமுமாக நடந்துகொண்டிருந்தார்கள்.
“பானு இல்லையா…செல்வம்?”
“அவங்க ரூம்ல இருப்பாங்க போலடா… அவங்களை பார்க்க வேணாம்…இதோ மாடியில் சிலர் தம் போட்டு இருக்காங்க. அதான் கூப்பிட்ட்டேன்” என்றான் செல்வம்.
படிகளில் ஏறினோம். வாசலை ஒட்டி மாடிக்கு ஏறும் படி அது. வந்திருந்தவர்களில் ஒரு சிலர் அங்கே ஒதுங்கி சிகரெட் பிடித்தபடி இருந்தார்கள். பால்கணியில் சென்று சேர்ந்தது அந்த படி. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து நானும் செல்வமும் பற்ற வைத்தோம்.
“பாவம்தான் இல்ல…?” என்றேன் நான்.
“பரிதாபம்டா… இது ரொம்ப கொடுமை….சின்ன வயசுடா…அந்த குழந்தைய பார்த்தியா….”
“அதை சொல்லாதே….அழுகையா வருது எனக்கே…”
“இல்ல..இல்லா நீ தைரியமா இரு… என்ன இந்தாள் இப்ப போயிட்டான்… கொஞ்ச வருஷம்தான்…நாம் எல்லோரும் போகவேண்டியவங்கதான்… எதுவும் நிரந்தரமில்ல.. அதை நினைச்சு தைரியமா இரு.. இப்ப நாம நினைக்க வேண்டியது….கொஞ்ச நாள் கழிச்சு…இந்த பெண்ணுக்கு என்ன செய்யணும்னுதான்…”
“இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சிருலாம்… வங்க சொந்தக்காரங்ககிட்ட எல்லாம் பேசி….”
“அது சரிதான். நமக்கு முன்னயே அதை எல்லோரும் யோசிச்சிருப்பாங்க..ஆனா பானுவோட விருப்பம்னு ஒண்ணு இருக்கில்ல… அதை மறந்திடக்கூடாது… அதான் முக்கியம்”
“நீ அவளை பார்த்தியா…இப்ப….”
“ம்… வந்தவுடனே வாசலுக்கு பக்கம்தான் இருந்தா….பாவம்…ரொம்ப இடிஞ்சு போயிருந்தா…. என்னாலேயே கொஞ்ச நேரம்கூட பேச முடியலை…”
“அவ பேசினாளா….?”
“குழந்தையை பார்த்துக்குங்க… அப்பாவுக்கு உதவி பண்ணுங்க…இதான்…அப்புறம்….உன்னைய கேட்டாடா…வருவியான்னு கேட்டா…”
“நிஜமாவா சொல்ற….என்னையா”
“ஆமாடா…ஏதோ உன்னை பார்த்தா அவளுக்கு ஆறுதலா இருக்கும்னு நினைச்சிருப்பா போல…போகும்போது பார்த்துட்டு போ…” என்றான் செல்வம்.
எனக்கும் என்னை மீறி அழுகை பீரிட்டுக்கொண்டு வந்தது. மிகவும் சிரமத்தினூடே அதை அடக்கியவாறு தொடர்ந்து அடுத்த சிகரெட்டை பற்ற வைத்தேன். செல்வம் இறங்கி கீழே செல்ல. அந்த பால்கணியை சுற்று சுற்றி என் கண்களை மேயவிட்டேன். வசதியான வீடு. அங்கிருந்த புகைப்படங்களில் விஜயராஜ் அவனது குழந்தை, கூடவே பானு என்று மிகப்பெரிதாக புகைப்படங்கள் மாட்டியிருந்தன. அழகாக சிரித்தபடி இருந்தாள் பானு. சற்று குண்டாக இருந்தாள். சில படங்கள் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டிருந்தன. சிலது வரையப்பட்டிருந்தன. எழுந்து கீழே கவனித்தேன். கும்பல் வந்துகொண்டே இருந்தது. விஜயராஜ் பிரபலமானவன்தான் என்று தோன்றியது. கீழே இறங்கலாம் என்று நினைக்கும்போது யாரோ என்னையே கண் வைத்துக்கொண்டிருப்பதாக தோன்ற சற்று நிதானித்து பார்வையை சுழலவிட்டேன். கும்பலில் யாரும் இல்லை. விஜயராஜை கிடத்தியிருந்த வாசலின் கிழக்குப்புறமாய் இருந்த ஓரிடத்தில் சில பெண்கள் இருப்பதை கவனித்தேன். அங்கிருந்து பானு என்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
சிகரெட்டை கீழே போடப்போனவன் போடாமல் அப்படியே இழுத்தேன். பானு என்னை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தாள். என்மனதில் ஏன் அப்படி ஒரு சாத்தான் புகுந்ததோ தெரியவில்லை. அவளை பார்த்து கண்கள் வெறிக்க சட்டென்று சிரித்தேன். என் சிரிப்பை கண்டு அதிர்ந்துபோனாள் அவள்.