..எங்கோ இருந்து வந்த வெளிச்சம் கொஞ்சமாக அவனது முகத்தில் வீசிக்கொண்டிருந்தது, அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு தனது நண்பர்களுடன் அந்த நேரத்தை உணவு உட்கொண்டபடி செலவழித்துக்கொண்டிருந்தான்.. அது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியான பொழுது.
இருந்த யாவரும் சட்டென்று நினைவிற்கு வராத பெயர்களை உடைய நண்பர்கள்.. இருந்தும் அவர்களுடனான நெருக்கம் அவனுக்கு ஒருவித சந்தோஷத்தையும், கவலையின்மையையும் கொடுத்துக்கொண்டிருந்தது.
எங்கிருந்தோ அவனில் வீசிக்கொண்டிருந்த அந்த வெளிச்சத்தின் அளவு எல்லார் முகத்திலும் பட்டு அதிகரிக்க அவனுக்கு பக்கத்தில் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த நண்பர்களின் முகம் வாட்டத்தோடு மாறி, வெளிச்சத்தில் மெழுகைப்போல உருக ஆரம்பித்தது.. நடப்பது தெரியாமல் குழம்பியவன் அதே குழப்பத்தோடு எதிரே திரும்ப வெளிச்சம் அவன் முகத்தில் அறைந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவனை எழுப்பிவிட்டது.
முழுவதுமாக திறந்துகிடந்த ஜன்னலின் ஊடாய் உள் நுழைந்த சூரியனின் வெளிச்சம் எதிர் சுவற்றில் பட்டு எதிரொலிப்பதை தூக்க கலக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.. சமையலறையின் ஸ்லாப்பிலிருந்து ஏதோ ஒன்று சத்தத்தோடு விழ திடுக்கிட்டு திரும்பினான். கருஞ்சாந்து நிற பூனை ஒன்று திருட்டுத்தனத்தோடு அவனை பார்த்து பயந்து வெளியேற முற்பட்ட.. கையில் கிடைத்த ஏதோ ஒரு பொருளை அதை நோக்கி வேகத்திற்கும் எறிந்தான். அதற்குள் பூனை ஜன்னல் வழியாக வெளியேறி ஓடி மறைந்தது. மேசையில் ஜார்ஜில் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்துப்பார்க்க, இரவு காண்பித்த அதே இரண்டு பாய்ண்ட் ஜார்ஜரையே காண்பித்து பத்து ஐம்பது என்ற பகல் நேரத்தை காட்டியபடி எஞ்சிய சக்தியையும் செலவழித்துக்கொண்டு மயங்கியது செல்போன்.
கோவத்தை அடக்கிக்கொண்டு ஸ்விச் பாக்ஸை பார்த்தான்.. இரவு அவசரத்தில் போடப்படாத அந்த ஸ்விச் அவனை நோக்கி ஏளனமாய் சிரிப்பதாய் ஒரு பிரம்மை. விரக்தியாக அந்த ஸ்விச்சை வேகத்திற்கும் ஆன் செய்தவன், அறையை விட்டு வெளியேறினான். முகம் சுழிக்கும் வெயில்!
நீலம் மறந்த வானத்தில் வெள்ளை மேகங்கள் கிடையாய் கிடையென.. சிறிய அசைவுகளோடு மிதந்துகொண்டிருந்தன. மெதுமெதுவாய் வானத்தை கடக்கும் அந்த மேகங்களுக்கு வானத்தின்மீது அப்படி என்னதான் கோபம் இருந்துவிடப்போகிறது.. ஏன் இந்த நிலையற்ற தன்மை..? அவற்றின் நிலையின்மை தனது வாழ்வில் பிரதிபலிக்கும் பல முகங்களையும் கூட அவனுக்கு நினைவுபடுத்தியது. எங்கோ ஒரு மூலையில் விமானத்தின் சத்தம் சன்னமாக கேட்க.. அந்த சூழலை கடந்து சென்ற கருப்பு காகங்கள் குழப்பத்தோடு கரைந்துகொண்டே வானத்தை வட்டமடித்துக்கொண்டிருந்தன.
அறை கதவை மூடி தாழிட்டுக்கொண்டு இருக்கையில் சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தான்.. தனிமையின் அலைச்சலை கடந்து கடமைக்கென்று மாட்டிவைக்கப்பட்டிருந்த கடிகாரத்தின் கடமை உணர்ச்சியாய் அதன் சிறிய, பெரிய முள் நகர்வுகளின் நிசப்தம் கொல்லும் படபடப்பு!
“செல்லு தீந்துபோனா.. எப்புடி சந்தோசமா சுத்துறீங்கன்னு பாக்குறேன்?” மனதிற்குள் சொல்லிக்கொண்ட குரோத வார்த்தைகளோடு நேரத்தையும் பார்த்துக்கொண்டான்.
இருட்டான கழிவறைக்குள் முகம் கழுவிக்கொண்டு வெளியேறியவன், இரவில் தான் வாங்கிவந்திருந்த.. ஈ, எறும்புகள் தின்று தீர்த்த தின்பண்டத்தை பெயருக்கென்று ருசிக்க ஆரம்பித்தான்.. பசி வயிற்றை முட்டி எழுப்பும் ரோதனை அதிகரித்திருந்தது. சட்டென்று மேற்சட்டை ஒன்றை போட்டுக்கொண்டு வெளியேறினான். சாலையில் அவன் எப்போதும் வெறுக்கும் மக்கள் நடமாட்டத்தை அந்த விடுமுறை நாளில் அதிகமாக உணர முடிந்தது.
“அடிக்கிற வெயிலுக்கு அப்புடி என்னதான் அவுத்துப்போட்டு ஆடுது ரோட்டுல..?” தன்னிச்சையாக தோன்றிய நெற்றிச்சுருக்கத்தோடு தனக்கு மட்டும் கேட்கும்படி முனுமுனுத்துக்கொண்டான்.
உணவகத்தில் குழுமிய கூட்டத்தை அருவருப்பாக பார்த்தபடி, வெளியே தேங்கி நின்றிருந்த சாக்கடை தண்ணீரில் முகம் பார்த்தான்.. அழுக்கில் ஒரு அழுக்கின் பிம்பம், அதை நோக்கி கோவத்திற்கும் காரி உமிழ்ந்துகொண்டான்.
உணவை வாங்கிக்கொண்டு வெளியேறிய பழைய நண்பனை பார்த்து சற்று ஆச்சரியமாகவும் அதே சமயம் சட்டென்று எந்த சமிஞ்சையை கொடுப்பது என்ற குழப்பத்தோடும் இருந்து.. கடைசியாக குறுஞ்சிரிப்பை கொடுத்தான், எந்த பயனும் இல்லை. தன்னை கண்டுகொள்ளாமாமல் சென்றவனை மனதிற்குள் அமங்கலப்படுத்தினான். தலை குனிவோடு உணவகத்தினுள் நுழைந்து இருக்கைகளை பார்த்தான்.. உட்கார்வதற்கு இடம் இருந்தாலும் பார்சல் வாங்கிக்கொண்டு.. இரைச்சலை விட ஈனத்திலும், இழிவுகளிலும் ஈக்களை போல மேய்ந்துகொண்டிருந்த மக்களிடமிருந்து விலகி ஓடவே அவனது கால்களும் மனமும் எத்தனித்தது.
இருண்ட அறைக்குள் மூச்சுவிட முடியாமல் திணறும் வெளிச்சமாய்.. சற்று நேரத்தில் அணைந்துவிடும் முனைப்பில் ஒளியோடும், ஒலியோடும் இயங்கிக்கொண்டிருக்கும் அவனது செல்போன்..
‘…பறவையே எங்கு யிருக்கிறாய்..? ‘
சாப்பிட்டு முடித்து மீண்டும் வெறுமனே இருக்கையில் உட்கார்ந்துகொண்டான்,
ஜார்ஜர் போட்டுக்கொண்டே தனது செல்போனை இயக்க ஆரம்பித்தான்..
ஞாயிறு விடுமுறைக்கு கூட்டாக வெக்கேஷன் சென்றிருந்த தனது அலுவலக நண்பர்களின் சந்தோஷமான ஸ்டேட்டஸ்கள். நினைவு வந்தவனாய் யாருக்கோ தொடர்புகொண்டான்..
“த நம்பர் யு டயல்.. இட்ஸ் கரெண்ட்லி பிசி,.. ” அது மேலும் தொடர்வதற்கு முன்னதாக இணைப்பை துண்டித்துக்கொண்டான். வாட்ஸ்சாப் நண்பர்களின் முகப்புகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு அவளின் நினைவு வந்தது..
சட்டென்று தனக்கு எதிரே இருந்த அலமாரியை உண்ணிப்பாக நோட்டமிட்டான்.. அவளின் அன்பளிப்பு புத்தகம் ஒன்று நீண்டநாள் ஓய்வோடும் ஒட்டடை தூசிகளோடும் மினுக்கிக்கொண்டிருந்தது. தலையை சொறிந்தபடி.. நீண்ட நேரத்து இழுபறிக்கு பிறகு,
“ஹாய்..! ” என்று அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.. அவள் ஆன்லைனிலேதான் இருக்கிறாள், ஒருவேளை அவனை ஒதுக்கிவிட்டிருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.. இதுவரைக்கும் அவன் கடந்துவந்த பாதையும் அப்படித்தான்.
நல்லவேளை அவள் அந்த மெசேஜை படிக்கவில்லை.. பார்த்து படித்துவிட்டு அமைதியாக இருந்திருந்தால் அவன் இன்னமும் அதிக மன வேதனைக்குள் மூழ்கியிருக்க வாய்ப்புகள் ஏராளமாக இருந்தன.
ஜன்னல்களுக்கு வெளியே எட்டிப்பார்க்கும் வானத்தில் அதே மிதக்கும், கடக்கும் வெண்பஞ்சு மேகங்கள்.
ஒரு சிறிய மென் சிரிப்போடு “பாசிங் க்ளவுட்ஸ்.. ” என தனக்குள் சொல்லிக்கொண்டான்,
இருளை தாண்டி அடர்ந்த இருளாக அவனுக்கு எதிரே திறந்துகிடந்த படுக்கை அறை காட்சியளித்தது.. அது அசட்டு தனிமையை தாண்டி ஒருவித அச்சத்தையும் கொடுத்திருக்கலாம்.. அங்கிருந்து ஏதாகிலும் தன்னை ஏறெடுத்து பார்க்கின்றது என்றோ தன்னை எதிர்பார்த்து காத்திருக்கிறது என்றோ நினைத்திருக்கலாம்.. வேகமாக எழுந்துபோய் படுக்கை அறையை வெளிப்புறமாக தாழிட்டான்.
கண்ணாடி ஜன்னல் கதவுகளின் வழியே வழியும் வெளிச்சத்தின் வீரியம் தனிந்த ஈரமான ஒளி அதே எதிர்புற சுவற்றில் ஒரு வரைபடமாக தெரிந்துகொண்டிருந்தது.. அது இதற்கு முந்தைய இரவு நேரத்து கனவுகளையும் சற்று நினைவுபடுத்தி சென்றது.
அந்த கனவு அத்தனை பிரம்மிப்பு..
சக வாழ்வியலின் சந்தோஷ நிமிடங்கள் அவனுக்கு எப்போதும் பிரம்மிப்பே.. என்றும் நடந்திடாத நிகழ்வுகள் என்பது யாவருக்கும் பிரம்மிப்பே! மனதிற்குள் சிரித்துக்கொண்டவன் கனவில் தோன்றிய அத்தனை நண்பர்களுக்கும் தொடர்புகொண்டான்..
சில தொடர்புகள் நீண்ட நேரத்திற்கு தொடர்ந்து பதிலின்றி துண்டிக்கப்பட்டன,
சில தொடர்புகள் பாதியிலேயே துண்டிக்கப்பட்டு அவனை அவர்கள் வைத்திருக்கும் நிலையை பிம்பித்தன..
எஞ்சிய தொடர்புகளுக்கு அவசரமாக எதையோ உளரும் பதில்கள் வந்து துண்டாக்கப்பட்டன.
தான் மிகவும் அதிர்ஷ்டமற்றவன் என்பதை எப்போதும்போல அப்போதும் நினைத்துக்கொண்டான்.. அழுகையில் ஏங்கிய இதயத்தின் முனகலை தாண்டி வேறு ஒரு முனகலையும் அவனது இடது காது உணர்ந்துகொண்டிருந்தது..
அது ஒரு பசபசப்பான பாஷையாய்..
ஒருவித சூசனத்தோடு அந்த உலரல்கள் அவனுக்குள் நுழைந்து கலவரம் செய்துகொண்டிருந்தன.
எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை.. எழுந்திரிக்கும்போது நேரம் இரவு இரண்டு, ஆழியென மேயும் இருளுக்குள் மூச்சடைக்கும் அழுத்தம் நிலவிக்கொண்டிருந்தது.. தேடிப்பிடித்து அறை ஜன்னல்களை திறந்தான், விட்டால் போதுமென்று எதுவோ வேகமாக வெளியேறி.. புதிய எதிர்பார்ப்போடு எதுவோ உள் நுழைந்து அறையை நிரப்பிக்கொண்டது.
அரை நிலவின் வெளிச்சத்தில் பசியின் கிரக்கத்தோடு அதனை ஏறிட்டான்..
பகலைப்போலவே கூடுமானவரைக்கும் இரவை குலைக்கும் நிலவின் வெற்றியின் சாட்சிக்கென்று.. கூறிய கொம்புகளாய் நிலவின் இரண்டு எதிரெதிர் முனைகள்! ஜன்னலை சாத்திவிடும்படி காதோரத்தில் வழியும் பெயர் தெரியாத மர்மத்தின் குரல்.
மெதுவாக திரும்பி அறையை நோட்டமிட்டான். இருள் என்ற அரக்கன் நிலவின் வெளிச்சத்திற்கு எங்கோ ஓடி ஒளிந்தபடி.. இருள் கலையாத சமையலறையிலிருந்து அந்த சத்தம் வந்துகொண்டிருந்தது.
தனிமையின் உச்சத்திலோ அல்லது வெறுமையின் பிடியிலோ நிற்கும்போது இதுபோன்ற சம்பவங்களை அவன் எதிர்கொள்வதுண்டு.. ஒருவேளை அதி தீவிர யோசனையில் மிதந்திடும் கற்பனை என்றும் அவற்றை வைத்துக்கொள்ளலாம். இதுதான் நிரந்தரம் என்று ஆனபின்பு அதன் வழியிலேயே செல்லத்தான் யாவரும் விரும்புவர்.. அவனைப்போல. அரை நிலவை கடைசியாக பார்த்துவிட்டு அறை ஜன்னல்களை மூடி படுத்துக்கொண்டான். புழுக்கத்தோடு அவனது கண்ணீரும், தூக்கமின்மையும் தொடர்ந்தது.
*****
அலுவலகத்திற்கு எப்போதும் பிரயாணப்படும் பேருந்தை கோட்டை விட்டிருந்தவன் கை கடிகார நேரத்தை பார்த்தபடி நெடுஞ்சாலையில் வேகமாக நடந்துகொண்டிருந்தான்.. மேகங்களற்ற வெறிச்சோடிய வானம் அவன் கண்களுக்குள் அகப்பட்டிருந்தது,
லிப்ட் கேட்ட ஒருவனும் அவனுக்கு உதவுவதாக தெரியவில்லை.. தடிமனான கல்லை கோவத்திற்கும் எட்டி உதைத்தான், வலி மிகுதியில் மண்டைக்குள் வண்டுகளின் ரீங்காரம். ஓய்விற்கு இளைப்பாறல் தேடி.. இலைகள் இழந்த, நிழலற்ற மரத்தின் நெம்பிக்கிடந்த வேரின்மீது அமர்ந்த அவனுள் புழுங்கிக்கிடந்தது நிழலற்ற விதி. வீசும் வாடைக்காற்றில் பொழிந்தது காய்ந்த சருகு மழை!
வேர்த்துப்போய் அலுவலகம் வந்தடைந்தான். வாடிக்கையான பேச்சுக்கள் மேலாளரிடம் இருந்து வந்துகொண்டிருந்தன.. பக்கத்தில் வாய் மூடி சிரித்துக்கொண்டிருந்த சக வேலையாளை கோவத்தோடு முறைத்தான். அதன்பின் அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
“என்னடா ஜனா நேத்து ஜாலியா இருந்தீங்க போல? ” உணவு இடைவேளையில் அந்த கேள்வியை செயற்கை புன்னகையோடு கேட்டான்.
கேட்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையென்றாலும் கூட கேட்டான்.. பெயருக்கென்று,
“ஹான்.. ஆமா வினோ, ப்ச் உன்னதான் கூப்பிட மறந்துட்டோம்..” ஜனா அதை சாதாரணமாக சொல்லிக்கொண்டு உணவு உட்கொள்வதில் மும்முரம் காட்டினான்.. சக நண்பர்களும் சிறிய அமைதிக்கு பிறகு தங்களது வேலையை தொடங்கியிருந்தனர்.
அழுகிய மனம் நாற்றம் எடுத்தது.. முகம் வாடி, வியர்த்து, வெதும்பிய நிலையை மாற்றும் முயற்சியோடு,
“ஹேய்.. அப்போ அடுத்தவாரம் எங்கயாச்சோம் வெளிய போலாமா? ” என்று கேட்டான்.
“ம்ம்.. இல்லடா, எந்த ப்ளானும் இல்ல.. டப்பும் காலி வேற ஒருநாள் பாத்துக்கலாம் ” ஒரு எதிர்பார்த்த பதில் அவனிடமிருந்து.
“ஹிம்.. அப்போ நீங்க மறுபடியும் எப்போ போறீங்களோ அப்போ கூட்டிட்டு போங்கடா.. மறந்துடாதீங்க? ” சீரான அமைதிக்கு பிறகு வினோத்திடம் இருந்து ஒரு கோரிக்கை.
“மேடம் பேச மாட்டீங்களா..? ” அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது அவளிடம் மிகுந்த ஜாக்கிரதையோடும் எதிர்பார்ப்போடும் கேட்டான். நடந்துகொண்டே. அவனுக்கு பிடித்த மௌனத்தாலேயே அவனை வஞ்சித்தாள்.
“இந்த அமைதிக்கு என்ன அர்த்தம்.. எனக்கு புரியல.. நேத்து பண்ண மெசேஜ நீ படிக்கக்கூட இல்ல..? “
“ஹாய் னு ஒரு மெசேஜ்.. அத ஓப்பன் பண்ணி வேற படிக்கனுமா? ” முகத்தை கோணிக்கொண்டு அவனை பார்க்காமல் பதிலலித்தாள்..
“அதுக்கே ஊங்கிட்ட இருந்து பதில் வர்லயே.. பயங்கர கோவத்துல இருக்கியோன்னு நெனச்சேன். இந்த டிஸ்டன்ஸ்க்கு என்ன காரணம்..? “
அவன் புரிந்தும் புரியாமல் கேட்டான்.
“ஹிம் அதுக்கு பதில் ஊங்கிட்டத்தான் இருக்கு! ” குழப்பம்.. கோபம் இரண்டும் சேர்ந்த தொணியில் கேட்டுவிட்டு தனது நடையை தொடர்ந்தாள்.. மீண்டும் திரும்பிப்பார்க்காமல்.
*****
இருள் புழுங்கியது..
ஜன்னல்களை திறக்க, தெருவிளக்கு வெளிச்சம் அறையை அப்பிக்கொண்டது..
கண் அயர்ந்தான்..
“ஹேய்.. ஹேய்..? ” ஒரு குரலற்ற, வாடிக்கையான முனகல்.. கண்களை திறக்காமல் கருவிழிகளை குவிக்க அதனோடு நெற்றிச்சுருக்கங்கள் சேர்ந்துகொண்டது.
“ஹேய்.. என்ன விட்டுட்டு வெளிய போவப்போறியா..? ” காதுக்குள் ஊதும் அந்த குரல் அவன் மூளைக்குள் முழுவதுமாக ஏறியிருந்தது. சுதாரித்துக்கொண்டவனில்
தூக்கம் முழித்துக்கொண்டாலும் கண்களை திறக்கவில்லை. அமைந்து கிடந்த மின் விசிரியின் இறக்கைகள் அவனுக்கென்று காத்திருப்பதாய் ஒரு பிரம்மை.
“எங்கள விட்டுட்டு எங்க போற நீ.. எங்க போவ.. போவாத”
அதற்குமேலும் அவனால் அமைதியாய் இருக்க விரும்பவில்லை.. திடுக்கிட்டு கண் விழித்தான், ஒளி வழிந்த ஜன்னல்கள் முழுவதுமாக மூடிக்கிடந்தது.. எங்கும் குழுமிய இருளின் வெளிச்சம் ஒரு அனலாய் விளங்கியது. செல்போன் அவன் கைகளுக்கு அகப்படவில்லை..
“ஹேய்.. ஹேய்.. ?” அந்த குரலற்ற சத்தம் மூலை முடுக்குகளில் எதிரொலித்து அவனை வந்தடைந்தது.. அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு.. இரவில் விழிகளை துழாவிக்கொண்டு பயந்தபடி தன்னை ஒரு மூலைக்கு குருக்கி உட்கார்ந்துகொண்டான்.. ஸ்லாப்பில் தவறி விழ காத்திருக்கும் உபயோகப்படுத்திடாத, கூர்மையான சமையல் அறை கத்தி!
“எங்க.. எங்க போற..? “
“இங்கயே இரு.. எங்க கூடவே..?
“இதான் உன்னோட இடம்..? “
“நாங்கதான் உன்னோட நிரந்தர நண்பர்கள்..? “
குரல்கள் அங்கும் இங்குமாய் கேட்க குரலை தேடி தலையை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டவன் பயத்தின் உச்சியில் மிதந்துகொண்டிருந்தான். சுவற்று மூலையில் பாம்பைப்போல ஊர்ந்துகொண்டிருந்தது கருப்பு நிற கேபில் மின்கம்பிச்சுருள். அதை தூரத்திற்கும் தள்ளிவிட்டுவிட்டு,
“ய்யாரு.. யாரு நீ? ” என்று தைரியத்தோடு ஒரு கேள்வியை முன்வைத்தான்.
நிசப்தத்தின் சிரிப்பு சத்தம். அது முடியும் முன்னரே இருளை கடந்து நின்ற காரிருள் பகுதியில் ஒரு நடமாட்டம்.. அது அவனுக்கு நேராக இருந்த படுக்கை அறையில் உலாவிக்கொண்டிருந்தது.
துளியும் வெளிச்சமற்ற அந்த இடம் ஒருவித அழுத்தத்தை அவனுக்கு தந்துகொண்டிருந்த அதே வேளையில்.. அங்கே நடமாடும் உருவமற்ற இருளின் குரல் அவனை மேலும் நடுக்கத்திற்கு உள்ளாக்கியது.
“ய்யாரு அது? ” குரல் உடைந்த ஒரு கேள்வி தூரத்து காரிருளை நோக்கி நீள.. உலாவிய இருளின் நடமாட்டம் சட்டென்று நின்றது. மூடிய ஜன்னல்களுக்கு வெளியே கடந்துபோன வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சம் ஜன்னல் இடுக்குகள் வழியாய் பிரவேசித்து படுக்கையறையை கடக்க.. அந்த இருளின் முகமற்ற மொழுக்கையாய் ஒரு உருவம் அவனை எட்டிப்பார்த்து சிரித்தது. உருவமில்லை எனினும் அதன் மர்மமான முகம் பார்க்க மரணம் கொள்ளும் பயம். பயத்தின் உச்சிக்கு சென்றவன் கத்திக்கொண்டே ஜன்னல்களை திறக்க முற்பட்டான்.. முடியவில்லை!
இருளில் நிறைந்திருந்த அந்த மொழுக்கை அவனை காரிருளில் இருந்து எட்டிப்பார்ப்பதும்.. ஒளிந்துகொண்டு சிரிப்பதுமாக தன்னை தொடர..
பின் திரும்பாமல் அழுதுகொண்டே ஜன்னல்களை திறக்கும் முயற்சியில் மும்முரமாக இருந்தான். வெளிச்சமும் அவனைப்போலவே ஜன்னலுக்கு வெளியே தத்தளிப்பதை இடைவெளியில் உதிரும் ஒளியின் மூலம் அவனால் உணர முடிந்தது.
ஜன்னல்களை திறக்கும் முனைப்பின் இடைவெளியில் பின்னால் திரும்பி பார்த்தான்.. அந்த காரிருள் மொழுக்கை தன்னை முழுவதுமாக வெளியேற்றி அவனை நோக்கி வேகத்திற்குள் வர.. மீண்டும் அலறியபடி ஜன்னல்களை கோவத்திற்கும் இழுத்தான்.. இருள் அவனை வந்து தோள்மேல் கை வைத்து அழுத்தவும் அவன் அறை ஜன்னல்களை திறக்கவும் சரியாக இருந்தது.
உள்ளே நுழைந்த வெளிச்சம் இருளை சுட்டுப்பொசுக்கி சாம்பலாக்கியது..
இருள் மறைந்து புழுக்கம் வெளியேறி,
ஈர காற்று உள் நுழைந்து வெளிச்சம் அறைக்குள் வாழ தொடங்கியது.
ஆசைக்கும் அந்த மூச்சை இழுத்து விட்டான். வெயில் வெளிச்சத்தில் நனைந்தான்.. தூரத்து பர்வதங்கள் அப்போதுதான் அவன் கண்களுக்கு தெரிந்தன. அவை ஒருவித சிலிர்ப்பை கொடுத்தன.. சிவந்த வானத்தின் சிவந்த மேகங்கள்.. ஆகாயத்து பறவைகளின் கூச்சல் இனித்தது, அவற்றின் இறக்கைகளை அந்த வானத்தை வண்ணமடிக்கும் இறகுகளாய் நினைத்துப்பார்த்தான்.. குறுஞ்சிரிப்பு கசிந்தது.
செல்போன் சினுங்கியது..
அவளிடம் இருந்து ” ஹாய் ” என்ற எதிர்பதில்.
“பேச மாட்டியா..? ” என்று அனுப்பினான்..
“படிச்சிட்டியா? ” என்ற கேள்வி. அதற்கு பதில் சொல்ல முடியாமல் மூச்சை இழுத்து வானத்தை நோக்கி வீசினான்.
*****
அலுவலக பேருந்தை வழக்கம்போல தவறவிட்டு எப்போதும்போல நெடுஞ்சாலையில் நடக்க ஆரம்பித்திருந்தான்..,
ஆனாலும் கோவத்திற்கு பதிலாக வேறு ஒரு ஆச்சரியம் அவன் முகத்தில் தத்தளிப்பதை உணர முடிந்தது.. மெதுவாக நடக்க ஆரம்பித்தான்,
கூடுமானவரை லிப்ட் கேட்டான்.. யாரும் உதவ முன்வரவில்லை. தன்னிச்சையாக செயல்படுவது புதிதில்லையே என்ற நினைப்பில்.. கடந்த சோகங்களை நினைத்து சிரித்தபடி தனது நடையை தொடர்ந்தான். தன்னை தொடரும் மேகங்களை ஏறிட்டான்..
“இயற்கை எத்தனை அலாதியானது! ” தனக்குள் சொல்லிக்கொண்டான்.
எதற்கு இந்த படபடப்பு.. மெதுவாக நடக்க தீர்மானித்தான், அடிக்கடி நேரம் பார்க்க தொந்தரவாக இருந்தது.. கை கடிகாரத்தை கழற்றி பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டான்.
சாலையை கடக்கும் பட்டாம்பூச்சியின் பரிதவிப்பு.. அவற்றை இரண்டு விரல்களில் பிடிக்க எத்தனித்தான்.. ஏமாற்றம், இருந்தும் அளவற்ற மகிழ்ச்சி!
ஏங்கி நின்ற தெருநாயின் கண்களில் வழிந்த ஆதங்கத்தில் தனக்கான இடம் எத்தகையது என்பதை கால தாமதமாய் உணர்ந்தான்.. வாலை குழைக்கும் அதன் பாசத்தில் வெறும் பசி மட்டுமே இருந்துவிடவில்லை என்பதை மனம் உணரும் தருணத்தில் அதே வாலாட்டும் நாய் அவன்முன் நின்றுகொண்டிருந்தது.. நாக்கை சுழற்றியபடி!
தலையை தொட்டு.. தாடையை தடவி விட்டான்.. மகிழ்ச்சியின் முனகல் காதில் கேட்டது. இயற்கையின் வெகுமதிகளை மேலும் ரசிக்கவும் ருசிக்கவும் மனம் வேண்டி நின்றது.
பாடம் கற்பிக்கும் நாட்களும் நகர்ந்தது.. காலை உரசும் உயிராய் மாறிப்போயிருந்தது அவன் வெறுக்கும் அறையின் கருஞ்சாந்து நிற திருட்டு பூனை.
*****
“என்ன.. எப்போமே உர்ருன்னு இருப்ப.. இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போல? ” உடன் பணிபுரியும் திவாகரின் ஆச்சரியமான கேள்வி.
அகத்திலிருந்து ஒரு எதிர்பாராமல் வந்த சந்தோஷ சிரிப்பு முகத்தில் அப்பட்டமாக காட்சியளித்தது..,
“ப்பா.. உன்ன இப்புடி சிரிச்சி பாத்ததே இல்லயேடா?” திவாகரின் பிரம்மிப்பில் நிறைந்திருந்தது வினோத்தின் கடந்தகாலத்து நிலை.
சில நாட்கள் யாரிடமும் சொல்லாமல் எங்கேயோ கிளம்பி சென்றான்.
*****
வானத்து மேகங்கள் வெகு அருகாமையில் சூழ்ந்திருந்தன.. இயற்கையை தாண்டி நமக்கான நெருக்கமான நண்பனை எங்கு தேடியும் கிடைக்கமாட்டார்கள்.. எந்த நிலையில் யார் ஒதுக்கினாலும் கூட இயற்கையின் இயல்பு எல்லாரையும் ஒரேமாதிரியாய் வாரி அணைத்துக்கொள்கின்றது.
பச்சிலை தேக்கிவைத்த இரவு நேரத்து பனித்துளிகள் அவனை ஒவ்வொரு நகர்விலும் நனைத்தபோதும் மெய்சிலிர்த்தான்.. பனித்துளிகளை அவன் ருசித்தபோது உண்மையிலேயே அவை இனித்தது!
யாரும் போகாத ஆழத்தில் நீந்தினான்.. அப்படியே தொலைந்துபோகவும் விரும்பினான்.. வாழ்தல் அத்தனை கடிதானது கிடையாது என்று மேலே இருந்த வெளிச்சம் அவனை மீண்டும் கரைக்கு கூட்டிவந்து போட்டது.
மிதக்கும் மேக கூட்டத்தில் தானும் ஒரு மேகமாய் மிதந்திட எண்ணினான்..
“யாரும் இல்லை எனினும்.. யார் நீ எனக்கு என்று கேட்க மீண்டும் மீண்டும் உன்னிடம் வருவேன்..! ” பூரண மகிழ்ச்சியின் ஊடாய் ஒரு பித்து வார்த்தைகள் போதையாய் அவனிடம் இருந்து ஒலித்தது.
“வா.. காத்திருக்கிறேன்! ” வேகமாய் அணைத்த பேரலையும்.. தொட்டு நனைத்த ஈர காற்றும்.. முக்கி விளையாடிய அருவி வாசமும்.. அதனதன் மொழியில் பதிலலித்தன.
பசும்புல் மீது படுத்துக்கொண்டு அவள் அன்பளிப்பாய் கொடுத்த புத்தகத்தை படித்து முடிக்கும்போது அவளின் மனதின் அரவணைப்பை ஓரளவிற்கு உணர முடிந்திருந்தது. வாஞ்சையோடு முழு புத்தகத்தையும் படித்து முடிக்கும்போது.. அந்த எழுத்தாளன் தனது கற்பனை காதலின் ஆழத்தில் விழுந்து தொலைந்த கதையை ஒரு கவிதையாய் தீர்மானிக்க முடிந்திருந்தது.
*****
“ஏங்கிட்ட கூட சொல்லாம ரெண்டு நாளா எங்க போயிருந்த..? போன் போட்டாலும் நாட் ரீச்சபில்” காபி குடிக்கும் முன்னரே அந்த கேள்வியை தொடர்ந்தாள்.
“அவுட்டிங்..! ” காபியை விழுங்கியபடி சொன்னான்.
“ஓகோ.. எத்தன பேரு? “
“நா மட்டுந்தான்.. “
“தனியாவா.. அது சரி, ஊங்கூட யார் வருவா.. இல்ல நீதான் அவங்ககூட போவியா? ” அவனின் கடந்தகால நிலைப்பாட்டை மீண்டும் குத்திக் காண்பித்தாள்.
“தனிமை அலாதியானது.. “
“ஒரு கட்டத்துக்கு மேல ரொம்ப ஆபத்தானதும் கூட.. ” அவள் பதிலில் ஒரு அதிர்வு தெரிந்தது.. வினோ சிரித்துக்கொண்டான்.
“எதுக்கு சிரிக்குற? “
“அந்த புக்க எதுக்கு குடுத்த..? “
“ப்ச்.. அதான் நீ படிக்கலயே அப்போறோம் எதுக்கு?” கோவமான பதில் சத்தமின்றி வந்தது.
“நல்லாருந்தது..! ” அதே மௌனத்தோடு சொல்லிவிட்டு காபி குடிக்க தொடங்கினான்.
“எ.. என்ன சொன்ன? நல்லாருந்ததா… அப்போ நீ படிச்சிட்டியா? “
“ஹிம்.. “
“ப்ச் பொய் சொல்லாதடா சிடுமூஞ்சி..? “
அவன் அவளை பார்த்து சிரித்தான்..
“செரி அப்போ அந்த புக்கோட கடைசி கவிதைய சொல்லு பாப்போம்..? ” அவள் தேர்வு வைத்தாள். அமைதியானவன் காபி ட்ம்ளரை மெதுவாக கீழே வைத்தவாரு தலையை கீழே தாழ்த்தினான்..
“தெரியும்.. நீ படிச்சிருக்கமாட்டேன்னு, உன்னபத்தி எனக்கு தெரியாதா? ” பழைய கோவத்தோடு எழுந்துகொண்டாள்..
“நுகரும் காற்றில்
மணக்கும் உன் வாசத்தில்,
கண்மூடிய ஏக்கங்களின்
துயில் களை நிலையடையும்
சலன பொழுதுகள் கொழுத்த..
விடியாத இரவுயிது!
எனது மூச்சுக்காற்றும்..
உனக்கான உன்மத்தங்களாகும்
தருணம்!
நீண்ட இரவின்
வெளிச்சம் சுமக்கும்..
ஆழி மனதின்
அழுத்த கண்ணீர்களை
யாருக்கென்று பரிசலிப்பது?
திசை தெரியாத ஆழத்தில்..
மெதுமெதுவாய்
புதைந்துகொண்டிருக்கும்
வெளிச்சத்தின்..
கடைசி துளி வெளிச்சம்
கண்ணீராய் உதிர்ந்து
என்னை தொட்டு தெறித்தபோது
கண்விழித்தேன்.
அவள் மடியிலிருந்த என்னை..
அதே வெளிச்ச துளி..
கண்ணீராய் நனைத்தது மீண்டும்..!
நாளொன்று வரக்கூடுமோ என் கண்மணியே”
அவன் தலை சாய்த்தபடி சொல்லி முடித்து அவளை ஏறிட்டான்..
“நாளோன்று வரக்கூடுமோ என் கண்மணியே..? ” என்று மீண்டும் அதை சொல்லும்போது அவளது கண்கள் கலங்கியிருந்தது. அவன் எழுந்திருந்து இரண்டு கைகளையும் பிளந்தபடி நீட்ட வேகமாக அவனை கட்டிக்கொண்டாள்!
தனிமை நிலையற்றது..
அதை நிலையற்றதாகவே வைத்துக்கொள்ள விரும்புங்கள்..
நீங்கள் நினைத்தாலும் அது முடியாத காரியம்.. ஏனெனில் இயற்கை நமது மரணம் வரைக்கும் நீள்கிறது.. இயற்கையோடு ஒன்றித்து அதனை அனுபவித்து வாழுங்கள்!