– முனைவர் சு.சத்தியா
அதிகாலை 5 மணி, குயில் கூவும் ஓசையினைக் கேட்டு எழுந்தாள் கயல்! என்ன? இன்னைக்கு குயிலு சோகமா கூவுவது போல இருக்கு!…. அவள் மனதில் இனம் புரியாத தவிப்புடன் வாசல் கதவினைத் திறந்து வெளியே வந்தாள்.
கயல் வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில், எப்பொழுதும் ஒரு குயில் கூவிக்கொண்டே இருக்கும். அதுவும் அதிகாலை நேரத்தில் உற்சாகமாகவே கூவும். அதன் ஓசையில் மனதைப் பறிகொடுத்தவள், இன்று அதன் குரலின் சோகத்தைக் கண்டுவிட்டாள். திடுமென கையில் வைத்திருந்த செல்போனைப் பார்த்தாள்!.. செந்தில் முகத்தைக் கண்டு ரசித்தாள்.
கயலின் அம்மா முனியம்மா எழுந்து வந்து… என்ன? கயல் உன் கூட்டாளி கூவி உன்ன எழுப்பிடுச்சா! அது சரி! காலையிலே செல்போன நோண்ட ஆரம்புச்சிட்டுயா! சீக்கரமா வேலைய பாரு.. கம்பங்கொள்ளைக்கு போகனும்.. நெறைய வேலயிருக்கு.. என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.
கயலுக்கு இனம் புரியாத சந்தோசம் மனதில்! இன்னைக்கு கம்பங்கொள்ளைக்கு சீக்கரமா வந்துடுனு, செந்தில் மெசேஜ் பண்ணியிருந்தான். அவனுக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடறேனு, பதிலுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, பாத்தரம் தேய்த்துவீட்டு வேலைகளை முடித்தாள்.
அம்மா, நான் முன்னாடி கொள்ளைக்குப் போறேன்.. நீயும் அப்பாவும் அப்புறமா வாங்க என்றாள். செந்தில் வேற வந்திருப்பான், மனசு கெடந்து தவித்தது. மனசுக்குள்ளே பேசியவளாய் வீட்டை விட்டு நடக்கலானாள்.
அடி! எங்கடி இம்புட்டு அவசரமா போற, என்னைக்கும் இல்லாம இன்னைக்கு புதுசாயிருக்கேனு முனியம்மா கேட்டாள்.
அது வொன்னுமில்லம்மா.. நம்ம தோப்பு வீட்டு பூங்கொடி ஊருலேர்ந்து வந்துருக்கேனு போன்ல சொன்னா, அவள பாத்துப்புட்டு அப்படியே கொள்ளைக்கு வந்துபுடறேன்! என்று கூறியவள், பதில் எதுவும் எதிர்ப்பார்க்காமல் விரைந்து நடந்தாள்.
வாட்செப்பில் அறிமுகமாகி, இன்று உடலளவில் நெருக்கமாகி, இருவரின் காதலும் எவரும் அறியாதவாறு தொடர்கிறது. பக்கத்து ஊர்க்காரன் என்ற அச்சமில்லாது, நான் அவன நம்பிகிட்டு வேறே இருக்கிறேன் என்ற நினைத்தவளாய், கொள்ளைய அடைந்தாள்.
கம்பங்கொள்ளைக்குப் பின்புறம், எவர் கண்ணிலும் படாத அடந்த கம்பஞ்செடிக்குள்ளே நின்றுக் கொண்டிருந்தான் செந்தில்! சல சல சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.. புன்னகையுடன் கயலை!. அவன் பார்வையில் காதல் குடிகொண்டிருந்தது.
ஏய்!. வந்துட்டியா, எவ்வளவு நேரமா உனக்காக காத்திருப்பது என்றவன், அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டான்….
கயலோ, விடுடா!.. என்று செல்லமாகக் கூறினாலும், அவன் அணைப்பிலேயே இருக்க விரும்பினாள். அவளுக்கு இவ்வுலகமோ மறந்துப் போனது!… எல்லாமே அவன் தான் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவளாய், தன் மனதை முழுதும் அவனுக்கே பறிக்கொடுத்து நின்றாள்.
கயல், ஒரு முக்கியமான விசயத்துக்குத் தான் உன்ன வர சொன்னேன். நேத்துதான் இரயில்வேல எனக்கு வேல கெடச்சிருக்குனு, அப்பாய்மெண்டு ஆர்டர் வந்துருக்கு. இன்னைக்கு இரவு சென்னைக்குப் புறப்படறேன். அதான், உன்ன பாத்து சொல்லிட்டுப் போலாமுனு வந்தேன் என்றான்.
என்ன செந்தில்?, இப்புடிக் குண்ட தூக்கிப் போடற!.. உன்ன நம்பி என்னையே உனக்குக் கொடுத்தேனே!.. என்றவள், அவன் பிடியிலிருந்து விலகிக் கண் கலங்கியபடி நின்றாள்.
ஏய்! உன்ன நான் கைவிட மாட்டேன். வேலையில சேந்ததும் அடுத்த மாதம் நம்ம கல்யாணம் தான் என்று கூறியவன், அவள மீண்டும் அணைத்தான்.
அதுக்கு இல்ல செந்தில், நானோ 12-வது பெயிலு! நீயோ நெறய படிச்சிருக்க.. அதான் பயமாயிருக்குனு புலம்பினாள்.
இல்ல கயலு, நீ நெனைக்கிற மாதிரி நாவுன்ன ஏமாத்திட மாட்டேன் என்றவன், அவளை அனுபவக்கத் தவறவில்லை. தன் வாழ்க்கையே முடியப் போவுதென்பதை அறியாத கயலோ!.. அவன் அணைப்பின் சுகத்தில் மனதைப் பறிகொடுத்தாள்.
சரி! நேரமாயிடுச்சு என்றவனிடம், ஒரு செல்பி ரெண்டு பேரும் சேந்து எடுத்துக்குவோம்னு கூறியவள், தன் போன எடுத்து அவன் முகத்தோடு முகமா சேர்ந்து நின்னு போட்டோ எடுத்தாள்.
இனிமே இங்க நாம நிக்கப்புடாது, நீ தைரியமாயிரு என்றவன் அவள் கையை அழுத்தி விட்டு விறு விறுவென நடக்கலானான். கயலோ இவ்வுலகமே இருண்டது போல் பிரம்ம பிடித்தவள் போல நின்றாள். திடீரென சல சலவென்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டுப் பார்த்தாள்!.. இரண்டு ஆடுங்க, கம்பஞ்செடிய மேய்ந்துக் கொண்டிருந்தன. அதனை விரட்டக் கூட நினைவில்லாதவளாய் வீட்ட நோக்கி நடந்தாள்.
வீட்டுக்குள் நுழையும் போதே கயலின் அம்மா, என்னடி? போன வேகத்துல திரும்பி வர்ற!..
இல்லம்மா தலைய வலிக்குது, கொஞ்சம் காப்பித் தண்ணி குடிக்கலாமுனு வந்தேன்! என்றாள்.
கயல் அப்பா முனியாண்டி,அதுசரி! வா! நாம போவலாம். ஊரு ஆடு மாடுவ, கொள்ளய மேஞ்சுபுடப் போவுது! என்றுக் கூறிவிட்டு நடக்கலானார், தன் மகளையே ஒரு காளை மேய்ந்தது தெரியாது!..
நாங்க கஞ்சி எடுத்துக்கிட்டு போறோம்.. நீ சீக்கிரமா வா!. செல்போனையே தட்டிக்கிட்டு இருக்காத, எல்லாம் உங்க அப்பன சொல்லனும், ஒரு புள்ளனு செல்லங் கொடுத்து, உன் இஷ்டத்துக்கு நடக்க வச்சிப்புட்டாரு. இது எதுல முடியப் போவுதுனே தெரியலனு சொல்லிபுட்டு, கொள்ளய நோக்கி நடந்தாள் முனியம்மா.
கயலுக்கு மனசெல்லாம் ஒரே புழுக்கம்! என்ன? செய்வது, அவன் நம்மல ஏமாத்தி விட்டுட்டானா? பலவாறு யோசித்தாள். சாட்சிக்கு எதுவுமேயில்ல! கடைசியா எடுத்தப் போட்டோவைத் தவிற, வேறெதுவுமே இல்லாது தவித்தாள்!..
நாட்கள் நகர்ந்தன. செந்திலிடமிருந்து ஒரேயொரு நாள் தான் மெசேஜ் வந்தது. அதன்பிறகு அவன் போனே ஸ்விட்ச் ஆப்னு வரவே!.. நடுங்கினாள். ஐயோ!.. மாதவிடாய் வரவில்லையே!. கொழந்த தறிச்சிருக்குமோ? தனக்குத் தானே கேள்விக் கேட்டு புலம்பினாள்.
ஏ! கயலு, என்ன? எப்பப் பார்த்தாலும் போன வச்சுக்கிட்டு, அதையே பாத்துகிட்டு, எதையோ பறிக்கொடுத்தது போல ஒக்காந்திருக்க!.. முனியம்மா கத்தினாள்.
அதையே காதுல வாங்காதவளாய், அம்மா! நான் பூங்கொடிய பாத்துப்புட்டு வர்றேம்மா என்று சொல்லி விட்டு, விடுவிடுனு நடக்கலானாள்.
இவளுக்கு என்னாச்சு? கொஞ்ச நாளா இவ நடவடிக்க சரியில்லயே! இவ, அப்பனே இவக் கெட்டுப் போறதுக்குக் காரணமாயிட்டாரு! என்ன பண்றது?, எல்லாம் காலத்தோட கொடுவன….புலம்பினாள்.
பூங்கொடி வீட்ட அடைந்தாள். வாடி!.. என்ன? கொஞ்ச நாளா போன்லேயே புடிக்க முடியலனு நெனச்சேன். இப்பதான் கண்ணு தெருஞ்சுச்சா? கோபத்துடன் திட்டினாள்.
இல்லடி!.. என்று சொல்ல வந்தவள் அழுதாள். ஏய்! என்னாச்சுடி, பதறிப்போனப் பூங்கொடி, தனியே கயல வீட்டுக்குப் பின்புறமாக அழைத்து, நடந்தவற்றையெல்லாம் கேட்டு அறிந்தவள் அதிர்ந்துபோனாள். அடிப்பாவி ஏமாந்துட்டியே!..என்றுஆதங்கப்பட்டாள்.
என்னடி சொல்ற!..அதிர்ச்சியுடன் கயல் கேட்டாள்.
ஏய்!..அவனுக்கு……….பொண்ணுங்கள, ஏமாத்துறது தான் பொழுதுபோக்காம்!… எங்க அண்ணனுக்கு, நல்லா அவனத் தெரியும். வேல கெடச்சுருச்சுனு தடபுடலா பார்டி வச்சிருக்கான்.
என்னடி? சொல்ற!.. அதிர்ந்தாள் கயல், அழுதாள்!…
எப்படியாவது அவன நான் பார்க்கனும். நீதான் எனக்கு உதவனும் என்றவளிடம், என்னால என்ன? முடியுமுடி என்றாள் பூங்கொடி.
நான் வீட்டுக்குப் போறேன், நீ உங்க அண்ணங்கிட்ட சொல்லி அவனோட அட்ரச வாங்கி, எனக்குப் போன்ல மெசேஜ் பண்ணுடி. எனக்குப் பைத்தியம் புடுச்சுடும் போலயிருக்கு!… என்றுக் கூறிவிட்டு வீடு நோக்கி நடந்தாள்… கால்கள் பின்னின…
பூங்கொடி , கயல காப்பாற்றும் முயற்சியில் இறங்கினாள். தன் அண்ணனிடம், அவன விசாரிப்பதுப் போல பேசி, அவனது முகவரிய அறிந்து, உடனே கயலுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
கயலுக்கு மெசேஜை பாத்ததும், புது தெம்பு வந்தவளாய், வீட்டுல எதையுமே காட்டிக் கொள்ளாமல் படுத்தேக் கெடந்தாள். கொள்ளயிலிருந்து வீடு திரும்பிய முனியம்மா என்னம்மா? மகள பார்த்துக் கேட்டாள்.
ஒன்னுமில்லமா என்று கூறியவள், புரண்டு படுத்து அழுதாள். இரவுக்காக, காத்திருந்தது போல மணி எட்டானது. கொள்ளையில வேல பாத்த அசதியில, கயலோட அம்மாவும் அப்பாவும் தூங்கினர். இரவு வெளியில வரதுக்கு சற்றே பயம் தான்!.. ஆங்காங்கே தோப்புகளும் கொள்ளைகளும் தான் தெரியும். சோலக்குள்ள தோப்புக்குள்ளனு தான் வீடு இருக்குமே தவிற, தெருவே இருக்காது!..
கொறட்டை ஒலி கேட்டதும், அம்மா அப்பா தூங்கிட்டதை உறுதி செய்தவள் எழுந்தாள். கையில செலவுக்கான பணத்த எடுத்துக்கிட்டு, செல்போனயும் எடுத்துக்கிட்டு, வீட்ட விட்டு வெளியே வந்தவள், கிடு கிடுவென நடந்தாள்.
ரோட்டினை அடைந்தாள். ஒன்பதரைக்கு அவ்வூருக்கு வரும் கடைசி பஸ் வந்தது. நல்லவேள, யாரும் பஸ்ல இல்ல என்று தன்னை தைரியப்படுத்தியவள், விழுப்புரம்-னு டிக்கெட் கேட்டதும், கன்டக்டர் அவள ஒரு மாதிரியா!.. பாத்துப்புட்டு, இந்த நேரத்துல எங்க போறனு கேட்டார்.
அப்பாவுக்கு ஒடம்பு முடியல, ஆஸ்பத்திரியில வச்சுருக்காங்க, அதான் அம்மாவுக்கு தொணையிருக்கப் போறேனு!… வார்த்தைகள் தடுமாறியபடி பதில் சொன்னாள்.
காஞ்சிபுரத்துக்கு அரைமணி நேரத்துல பஸ் வந்து நின்றது. சென்னை…! என்று கத்தியக்குரல் வந்த திசையை நோக்கி நடந்தாள். பஸ்ல ஏறி அமர்ந்தாள்!.. இது கனவா? இல்ல நிஜமா? கண்களை மூடினாள். உலகமே!.. இருண்டது போல் தவித்தாள்.
பஸ் புறப்பட்டது. திடுமென, ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்தாள், சென்னை வந்தது அறிந்தாள்.
பஸ்ஸினை விட்டு இறங்கியவள், ஆட்டோ வெனக் கத்திய சத்தத்தினைக் கேட்டு, ஆட்டோவில் ஏறி அமர்ந்தவள், முகவரியைக் கூறினாள்… ஆட்டோ பறந்தது!… இவள் மனசோ நிலைக்குழைந்தது…
அடுத்த கால்மணி நேரத்துல ஆட்டோ, ஒரு வீட்டின் முன்பு நின்றது. ஆட்டோவுக்குப் பணத்தைச் செலுத்தி விட்டு மணிய பார்த்தாள். அதிகாலை 4.55…கதவினைத் தட்டினாள்.
யாரு? இந்த நேரத்துலனு அதிர்ந்து எழுந்த செந்தில், படுக்கைய விட்டு வெளியே வந்து, சன்னல எட்டிப்பார்த்தவன், திடுக்கிட்டு அதிர்ந்தான். இவயிங்க….எப்படி? வந்தாள்… கோபத்துடன் கதவினைத் திறந்தான்.
கதவு திறந்த வேகத்துல, உள்ள நுழைந்தக் கயல், என்ன இப்படி மோசம் பண்ணிட்டியேடானு!….அவன் நெஞ்சுல அடித்துக் கதறினாள்.
அவனோ!…அவளையே இதுவரைப் பார்க்காதவன் போல, நீ யாரு? உனக்கு என்ன? வேனும்னு கேட்டான். இந்த சத்தத்தைக் கேட்டு அன்று, அவனோடு உல்லாசமாக இருந்தவள், அறைகுறை ஆடையுடன் வெளியே வந்து என்ன? செந்தில் நடக்குது!.. யார்? இவ!.. கத்தினாள்.
இல்ல மஞ்சு, இந்தப் பொண்ண நா….பாத்ததேயில்ல!…எங்க ஊருனு சொல்றாவேற, நா….. இவள கெடுத்துப்புட்டேனாம். ஏதாவது சாட்சியிருக்கானு கேளு, என்றான் செந்தில்.
இவனின் நாடகத்தினை அறிந்தக் கயல், சற்றும் அவன் எதிர்ப்பாராத விதமாய், தன் இடுப்பில் சொருகியிருந்த கத்திய எடுத்து ஏய்!.. என்று கத்தியவளாய் ஒரேகுத்தாய் அவன் வயிற்றில், ஓங்கிக்குத்தினாள். இதனை சற்றும் எதிர்பாரதவன் வலிதாங்க முடியாமல், கீழே விழுந்தான். மஞ்சுளா பயந்து நடுங்கி!…செந்தில் என்று கத்தினாள்.
சாட்சியாடா!….வேணும்!…………..உனக்கு!……….மனசாட்சியே இல்லையாடா!… மனுசன்னா மனசாட்சி இருக்கனும். மனசாட்சி இல்லாதவன் மனிதனேயில்லடா!…. இனிமே ஓன்ஞ்சாவுக்கு அப்புறம் இந்த நாட்டுல மனசாட்சிக்குப் பயப்படாம, உன்ன மாதிரி தப்பு பண்றவனுக்கெல்லாம், இது ஒரு சவுக்கடி!…ஆவேசமாகக் கத்தினாள்…
பொழுது விடிந்தது!..வாழ்விலும் விடியல் உதயமானது!… நடந்தாள்… வழியில் ஆதரவற்றோர் இல்லம்!.. அனுமதிப்பெற்று உள்ளே நுழைந்தாள். மாதங்கள் உருண்டன. தன் பிள்ளைக்கு மட்டுமல்லாது!…..அங்குள்ள ஆதரவற்றோர் அனைவருக்கும் தாயானாள்!…
– கதைப் படிக்கலாம் – 4
இதையும் படியுங்கள் : கழிவிரக்கம்