– அ.வேளாங்கண்ணி
காற்று அதிகமில்லாத அமைதியான இரவு. கடற்கரை முழுவதையுமே வெளிச்சமாக்கியிருந்தது, அந்த பௌர்ணமி நிலா…
“பர்த்டேக்கு பார்ட்டி கொடுடானா.. நீ பாட்டுக்கு பீச்சுக்கு வரச் சொல்லிட்ட..!”
“கோவிச்சுக்காதடி.. அலைகளோட.. கடற்கரை மணலோட.. சுகமா வீசுற காத்தோட… பக்கத்துலயே ஐஸ்கிரீம் போல இருக்கற ஒன்னோட… இருக்கறதவிட பெரிசா பார்ட்டி என்னடி பார்ட்டி..”
“ஆனாலுன்டா.. செம்மையா பேசற.. இப்படி பேசிப் பேசி தானேடா.. என்னை மயக்கின..”
“எது.. நான் மயக்கினேனா.! மயங்கினேனு சொல்லு.. நீதான்டி மயக்கின.. என் ஜிலேபி.. பாரதியின் புதுமைப் பெண்ணே!”
“டே.. எதுக்கு இப்ப காக்கா பிடிக்கற?”
“பிடிக்காட்டி பறந்திடாது!”
“அப்ப காக்கானு என்னைச் சொல்ற.. நான் என்ன கருப்பாடா..!!? ஆனாலும் நான் பறந்தெல்லாம் போக மாட்டேன்.. என்னோட ரெக்கைய வெட்டினாலும் நான் உன்னை விட மாட்டேன்.. ஏன்னா எனக்கு உன்ன அவ்ளோ பிடிக்கும்”
“எவ்ளோ..பிடிக்கும்? ஒரு மூனு கிலோ!”
“மூனு கிலோவா.. ! எண்பது கிலோடா என் தங்கம்”
“பேச்சோட பேச்சா நான் “குண்டு”னு சொல்றியா!?”
“இல்லடா.. எனக்கு உன்மேல ரொம்ப காதல் “உண்டு”னு சொல்றேன்”
“பாரேன்.. எவ்ளோ அன்பா.. அட்டகாசமா பேசற.. இதுவே பார்ட்டியா இருந்திருந்தா.. இப்படியா இருந்திருக்கும்..! ஏனோ தானோனு தானே இருந்திருக்கும்…?”
“சரி சரி. அதவிடு.. டின்னர் எங்க?”
“வேற எங்க..? எங்க வீட்டுல தான்.”
“என்னது.. உங்க வீட்டுலயா? நீயே தனியா தங்கி இருக்கற ஆளு… நான் வரமாட்டேம்பா”
“எதுக்கிடி எங்கிட்டப் போயி பயப்படற! உங்கையால சமைச்சு சாப்பிட ஆசப்படறது தப்பா..! இப்பத்தான் உன்னை புதுமைப் பெண்ணுனு சொன்னேன்?”
“நான் புதுமைப்பெண்ணா இருந்தா மட்டும் போதுமா? நீ புதுமைப் பையனா இருக்க வேண்டாமா?”
“ஏதேது.. புதுமைப் பையனா? புதுப்புது வார்த்தையெல்லாம் கண்டுபிடிக்கற.. என் முகத்தப் பாரு.. பால் வடியற மாதிரியில்ல.. எனக்குப் போயி பயப்படலாமா?”
“அடப்போடா.. பால் வடியுது.. .டீ வடியுது.. காபி வடியுதுனுட்டு..”
“சரி.. சரி.. ப்ளான் சேஞ்ச்.. உங்க வீட்டுல டின்னர் வச்சுக்கலாமா?”
“டே.. என்ன விளையாடறியா? உதை விழும்.. என்னோட சேர்ந்து உனக்கும்..”
“உதை தானேடி.. சேர்ந்தே வாங்கிக்கலாம்…”
“உதை வாங்கிய உத்தம காதலர்கள்”னு அடுத்த நாள் நியூஸ்பேப்பர்ல நம்ம பேர் வரனும்னு ஆசைப்படுறியா என்ன?
“உத்தம காதலர்கள்..”.. செம.. ரொம்ப நல்லா இருக்கு”
“சரி.. இந்தா லாலிபாப்.. உன் பர்த்டேக்கு என்னோட கிப்ட்”
“சூப்பர்டி… இது.. இதுக்குத்தான் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்..”
“ஆனாலும்.. உனக்கு இது அவ்ளோ ஈஸியா கிடைக்காது.. முடிஞ்சா துரத்திப் பிடிச்சுக்கோ.. ஒகே”, எனச் சொன்னவள் எழுந்து ஓட ஆரம்பித்தாள்..
இவனும் எழுந்து… ” நில்லு.. நில்லு… நில்லுடி”, என துரத்திக் கொண்டே ஓட.. ”’பொலிச்…”’ என ஒரு பயங்கர அடி முதுகில் விழ அப்படியே சுருண்டுவிழுந்தான்..
“சார்.. சார்.. சார்.. ஏன் சார் இவன அடிச்சீங்க?”
“யாருமே இல்லாத கடற்கரையில “நில்லு நில்லு”னு சொல்லிட்டு யாரத் தொரத்தி விளையாண்டுட்டு இருக்கான் இந்த படவா….!”
“சார்.. நீங்க ஊருக்கு புதுசு.. அதான் உங்களுக்குத் தெரியல.. இவனோட காதலி, இதே கடல்ல போன மாசம் தற்கொலை பண்ணிக்கிட்டா.. அப்ப இருந்து தினமும் இவன் இங்க வருவான்.. ஏதேதோ பேசிக்குவான்.. திடீர்னு ஓடுவான்.. மூளை குழம்பி கெடக்கான் சார்.. ஆனாலும் யாருக்கும் எந்தக் கெடுதலும் தர்றதில்ல.. அவனா வருவான்.. அவனா போயிருவான்.. இவனொரு காதல் பைத்தியம் சார்..”
“அச்சச்சோ.. தெரியாம அடிச்சிட்டேனே.. ம்.. சரி எதுக்காக இவனோட காதலி தற்கொலை பண்ணிக்கிட்டா..?”
“வீட்டுல வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.. கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி டார்ச்சர் கொடுத்திருக்காங்க.. அப்பறம் ரெண்டு பேரும் பேசி தான் இந்த முடிவ எடுத்திருக்காங்க.. அவ செத்துட்டா.. இவன் பிழைச்சிட்டான்.. ஆனாலும் இப்ப நடைபிணமா இருக்கான்”
“சோ…. சேட்.. காதலுக்கு இந்த காலத்திலேயும் எவ்வளவு எதிர்ப்பு..?”, என்று சொன்ன இன்ஸ்பெக்டர், சாதி மறுப்பு காதல் செய்த தனது சொந்த மகளை, இரண்டு வருடங்களுக்கு முன்பு அடியாட்களை வைத்து ஆணவப் படுகொலை செய்தவர் என்பதை அந்த கடலலை அறிந்திருந்ததோ என்னவோ.. ஆவேசமாய் வந்து அவரை ஆக்கிரமித்து.. நிலை தடுமாறி விழச்செய்தது..
பௌர்ணமி நிலா இந்தக் காட்சிகளைக் கண்டு, தனது நேரத்தை கடத்திக் கொண்டிருந்தது… கீழே விழுந்திருந்தவன் மெல்ல எழுந்து வந்து, அவரைக் கைப்பிடித்து எழுந்து நிற்க உதவினான்..
இனி அடுத்த நாள் அவன் பேசப்போகும் காதல் மொழிகளுக்காய் காத்திருக்க ஆரம்பித்தது, நிலா..
– கதைப் படிக்கலாம் – 7
இதையும் படியுங்கள் : மனமாற்றம்