– மதுரை முரளி
திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் பஸ்கள் எல்லாம் பல்வேறு திசைகளை நோக்கி நின்றுக் கொண்டிருக்க,
விசாரணை பூத் அருகில் நின்றுக்கொண்டிருந்த சுந்தரம்,
“என்ன இது? மோகன் சரியா நாலு மணிக்கெல்லாம் வந்திடறேன்… சேர்ந்து போகலாம்னு சொன்னான். இதுவரை வரலியே?” உள்ளுக்குள் கவலைப்பட்டான்.
மோகன், சுந்தரம் இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனி ஒன்றில் நாலு மாதம் முன்பு சேர்ந்தவர்கள்.
தற்போது பயிற்சிக்காக தலைமை அலுவலகமான திருவனந்தபுரத்தில் உள்ளனர்.
“டேய் சுந்தரம், கமான்.. க்விக்” என்று வரும்போதே அவசரப்பட்ட மோகன்,
புறப்பட இருந்த கோவளம் பஸ்ஸில் தொற்றிக் கொள்ள,
அதனைத் தொடர்ந்து சுந்தரமும் ஏறிக்கொண்டான்.
“டேய், கொஞ்சம் லேட் ஆனவுடனே சின்ன கவலை. ஏன்னா உனக்கு தான் மலையாளம் தெரியும். அதான் கோவளம் கூப்பிட்டேன்”
“அதுனா கண்டுக்காதம்மா. திஸ் இஸ் மை பஞ்சுவாலிட்டி” என்றான்.
வண்டியில் ஏறிய கண்டக்டர் கயிற்றை இழுத்து மணி அடித்து டிரைவரை அழைக்க,
சுந்தரத்தின் மனதில் மனுநீதிசோழன் வந்துப்போனான்.
கிட்டத்தட்ட முக்கால் மணிநேரப் பயணத்திற்குப் பின், பஸ் கோவளம் அடைந்தது.
கீழே இறங்கிய மோகன், அருகில் இருந்தவரைச் சோதித்து அவர் பறஞ்சதை மனசிலாக்கி,
சுந்தரத்தை விளித்தவாறு வேக நடைப்போட,
வழியில்…
“சார் மலையாளம் அறியும்?” சுந்தரத்திடம் கைடு வினவ,
“நல்லா மலையாளம் அரியும்” என்று சுந்தரத்தைப் பார்த்து நக்கலாய் மோகன் சிரிக்க.. தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தான் சுந்தரம்.
பீச்சில் ஆங்காங்கே அரைகுறை ஆடைகளுடன் மேலைநாட்டினர் ஒருபுறம்,
மறுபுறம்.. கேரளத்திற்கு உரிய அடர்த்தியான தென்னை மரங்கள் கொத்துக் கொத்தாய்த் தொங்கிய தேங்காய்களுடன்.
கிளுகிளுப்படைந்த மோகன்,
“டேய் சுந்தரம், என்னதான் இருந்தாலும் வெளிநாட்டுக்காரங்க கலாச்சாரமே தனிடா. எவ்வளவு சுதந்திரமா இருக்காங்க. அவங்க லேடிஸ் கூட, எப்படிப் பாரு? நம்ம நாட்டுப் பெண்களையும் பாரு. ஒரு எட்டு முழப் புடவையை சுத்திக்கிட்டு..” என ஆரம்பிக்க,
“டேய் மோகன், ஒரு சந்தேகம். இதே மாதிரி உன் மனைவி கூட நீ இங்கே இப்படி இருப்பியா?”
சுந்தரத்தின் கேள்வியால் தடுமாறிப்போனான் மோகன்.
“டேய்.. நாகரீகங்கிறது நாக்கிலிருந்து வெளிப்படுகிறது மட்டுமில்ல, மனசில் இருந்தும் தான். ஓ.கே. நீ அந்த மனப்பக்குவத்தை அடைய நாளாகும்.
என்ன சொன்னே? நம்ம நாட்டுல ஒரு பொண்ணுக்கு சுதந்திரமா தன் உள்ளத்து ஆசையை வெளிக்காட்ட வாய்ப்பு கொடுக்கிறோமா? முழுமையாக இல்லையே. ஆனால், உடலை மட்டும் சுதந்திரமா வெளில காட்டணும் அப்படின்னு நீ நினைக்கிற இல்ல?”
சுந்தரத்தின் வார்த்தைகள் மோகனை திக்குமுக்காட வைத்து வாயடைக்க வைத்தன.
“புரிஞ்சுக்கடா. எது கலாச்சாரம்னு? நாம முதல்ல மாறணும். கூடவே, நம்ம எண்ணங்களும் மாறணும். அதோட நாம பெண்களைத் தெய்வமா, உயர்வா மதிக்கிறோம்… வணங்கறோம்… புரியுதா?”
உண்மை உறைக்கவே, தலையைத் தொங்கப்போட்டான் மோகன்.
– கதைப் படிக்கலாம் – 110
இதையும் படியுங்கள் : அஸ்திவாரம்