ரஹீமின் சின்னவாப்பா அப்துல் மாலிக். அவர் தான் அணியும் சட்டையின் காலரில் கைத்துண்டை மடித்து வைப்பது அவனுக்கு பிடிக்கும். அந்த மடிப்பின் முக்கோணப்பகுதி அவரணியும் சட்டைக்காலரின் பின்பக்கம் எப்போதும் வெளியேத் தெரிந்தபடி இருக்கும். எதற்காகவாவது கைகளையோ முகத்தையோ துடைப்பதற்கு அந்த கைத்துண்டு தேவைப்பட்டால் கழுத்தை சற்று முன்பக்கமாக நீட்டி கழுத்திலிருந்து அதை பழம்போல உருவியெடுத்து துடைத்துவிட்டு மறுபடியும் கழுத்தில் வைத்துவிடுவார். சைக்கிளில்தான் வரவும் போவவும் செய்வார். அடிக்கடி சைக்கிளைத் துடைத்து பளபளவென்று வைத்திருப்பார். துடைத்து மெருகேற்றி வைப்பதற்குள்ள புத்தம்புது சைக்கிளில்லை அது. சைக்கிளில் போற வழியெல்லாம் ‘புரிச்…புரிச்…’ என்று வெற்றிலைச்சாறை துப்பிக் கொண்டே செல்வார்.
இளவயதில் அவனையும் அவனுடைய தம்பி தங்கையையும் ஒரு ஆள் மட்டுமே நடந்து போகும் பெரியாற்றங்கரையோரமாக சுசீந்திரத்திற்கு திருவிழா பார்ப்பதற்கு அழைத்துச் சென்றது முதல் கன்னியாகுமரி கோவளம் மணல்தேரிக்கும் (இப்போது அங்கு மணலையும் காணாலெ…தேரியையும் காணலை) அழைத்துச் சென்றது இன்றும் ரஹீமின் நினைவில் நிற்கிறது.
மழைக்காலம்! அது அவருக்கு போதாத காலம். ஏந்தான் ஆண்டவன் இந்த மனுசன படச்சானோன்னு தோணும். அப்படியொரு அவஸ்தையை அனுபவித்துக் கிடப்பார். எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருக்கும் சின்னவாப்பாவுக்கு மழைக்காலம் வந்து விட்டால் முகமே மாறிவிடும். ஆஸ்த்துமா என்னும் ஒவ்வாமை நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் இழுக்கும் மூச்சு அவருடைய நெஞ்சுக் கூட்டினுள் புகுந்து கொண்டு கஷ்டப்பட்டு அவரிடமிருந்து தப்பித்து வெளிவருவதுமாக இருக்கும். ஆஸ்துமா இல்லாத காலங்களில் ஜன்னல் திண்டில் ஒய்யாரமாக இருக்கும் வெற்றிலைத் தட்டு சின்னவாப்பாவின் ஆஸ்துமா காலங்களில் எங்கேயோ கேட்பாரின்றி கிடக்கும். அதில் வெற்றிலைகள் காய்ந்து செத்துக் கிடக்கும். அவர் அந்த தட்டைப் பார்த்துக் கொண்டே சுவரோரமாக சாய்ந்து இருப்பார்.
‘சின்னாப்பா….’அவன் கூப்பிட்டான்.அவர் , ‘ஹ்ம்…ஹூம்…’என்ற முனகல்களுக்குப் பிறகு, ‘வாமா…ரயீம்…’ என்றார். ஆஸ்துமா காலங்களில் இவ்வளவையும் சொல்வதற்குள் அவர் படாதபாடு பட்டுவிடுவார். அவன் அவரை பரிதாபமாக பார்த்தபடி நின்றிருப்பான். அவனால் அவருக்கு எந்தவித ஆறுதலும் சொல்ல முடியாது. அவனுக்கு அவர் மரணித்து விடுவாரோ என்ற பயமும் உடனே தொற்றிக் கொள்ளும்.
தேங்கும் கண்ணீரோடு மழைக்காலத்தில் தலையில் மஃப்ளரைக் கட்டிக் கொண்டு பெரிய பெட்சீட்டை எடுத்து உடல் முழுக்க போர்த்திக் கொண்டு சுருண்டு மடங்கி ஒரே கிடையாக மூலையில் முடங்கிக் கிடப்பார். இதெல்லாம் அவருடைய முதிய பருவத்தில்தான். நாற்பது வயதுக்கு முன்னால் இரத்தம் சூடாக இருக்கும் வேளையில் அவரை இந்த நோய் அதிகம் கஷ்டப்படுத்தவில்லை. மனுசன் குடிச்சிட்டு வரும்போது மட்டும் கொஞ்சம் குணக்கேடு காண்பிப்பார். அந்தக் குணக்கேட்டினை புள்ளைங்களிடம் காண்பிக்க மாட்டார். அவர்களை எதுவும் சொல்லமாட்டார். அதையேங் கேக்குறீங்கெ…குடிச்சிருக்கும் போது தன்னுடை மகன்களிடமும் மகள்களிடமும் முகம் கொடுத்து பேசவேமாட்டார்.
சின்னம்மாவையும் சும்மா சொல்லக் கூடாது. எப்போதும் அவருக்கு ஆஸ்த்துமாவிற்கான மருத்துவம் செய்து கொண்டேயிருப்பாள். ஆனால் குடிச்சிட்டு வந்தால் சின்னம்மா அவரிடம் தன்னுடைய எதிர்ப்பை புறச்செயல்கள் மூலம் காட்டுவாள். அது அவருக்கு பிடிக்காது. அப்போது சின்னம்மா தரை அதிர நடப்பாள். காலில் தட்டுப்படும் கிண்ணம் தட்டு செருப்பு பலவக்குத்தி போறவற்றை காலால் கோரி எட்டியுதைத்து நடப்பாள்.
‘போறாபாரு…நாறப்பேலோளி… பெரிய மத்தவ… அவ அப்பங் கோணத்துக்கு ராசா போலெ… வெறுந்துக்கெ…இவளுக்கே இவ்வளவு இருக்குன்னா…ராசாமார்க்கு எவ்வளவு இருந்திருக்கும்’ என்றார் ரஹீமிடம்.
‘லே..ரயீமு…இங்கெ போ…அவருக்கு இனி வாயாலெ எடுக்கும்…’ சின்னம்மா அடுக்களையிலிருந்து எட்டிப்பார்த்து சப்தமிட்டாள்.
‘யாம்புளா… கழிச்சுப்பட்ட மூளி… அவங் சும்மவுலா நிக்காங்… வொனக்கு யாங்… காலரா எடுக்குது?’
‘………..’ பதில்வரவில்லை சின்னம்மாவிடமிருந்து. அதற்கு பதிலாக பண்டம் பாத்திரங்களை டக்கு டக்குன்னு தூக்கி போட்டாள். விடமாட்டார் சின்ன வாப்பா தொடர்ந்து போதையில் எதையாவது சொல்லி வம்பிழுப்பார் சின்னம்மாவிடமிருந்து. தாங்க முடியாமற் போனதும் சின்னம்மா கச்சேரியைத் தொடங்கிவிடுவாள்.
சிலசமயங்களில் சின்னம்மாவும் கண்களை அகல விரித்து உருட்டிக் கொண்டு பதிலுக்கு பதில் பேசுவாள். ‘யாங் எனக்கு காலரா வரப்போவுது…குடிச்சிட்டு வாற வொமக்குதான் வரும்
காலரா… அந்தாக்குலெ கொண்டு போயிடாதா வொம்மெ… நிம்மதியா இருந்துட்டு போவேங்…’ என்பாள்.
என்னதான் சின்னவாப்பா கெட்ட வார்த்தை பேசினாலும் சின்னம்மா கோவம் பொங்க ‘சாவும்…சாவும்..செத்தொழிஞ்சு போவும்’ என்பாளே தவிர ஒரு கெட்ட வார்த்தை கூட பேசமாட்டாள். பேச்சு ஒரு வரையறை இல்லாமல் போயிக் கொண்டேயிருக்கும். சின்னவாப்பா குடிச்சிருந்தால் சின்னம்மாவூட்டுக்கு வரவேக்கூடாது என்று எண்ணிக் கொள்வான் ரஹீம். சண்டை முற்றியதும் சின்னவாப்பா சண்டையை முடித்து வைக்க அடுக்களைக்குச் சென்று உணவு இருக்கும் சட்டி பானைகளைத் தூக்கிக் கொண்டு வந்து தெருவில் போட்டு உடைப்பார். சோத்துப்பானையும் கறிவைத்திருக்கும் பானையும் அடிக்கடி உடைபடும். அதோடு வீடு அமைதியாகிவிடும். பாவம் சின்னம்மாவின் குழந்தைகள். பசி பட்டினியோடு அழுது கொண்டே உறங்கிப் போவார்கள். சின்னவாப்பாவின் இந்த செய்கைக்கு யாரும் நியாயம் கேட்டுக் கொண்டோ வக்காலத்து வாங்கிக் கொண்டோ போனால் இருவரும் நியாயம் பேச வந்தவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள். அப்படியொரு தன்மானத் தம்பதிகளாக இருந்தனர்.
ஒருமுறை ரஹீம் சின்னவாப்பா வீட்டிற்கு போயிருந்த போது ஒரு சிரட்டை நிறைய மண்புழுவை வைத்து வெற்றிலை தட்டும் முளையால் தட்டி சிதைத்துக் கொண்டிருந்தாள் சின்னம்மா.
‘சின்னம்மா…என்னத்தெ வச்சு தட்டுறீங்கெ…சின்னவாப்பாக்கு வெத்திலையா?’ என்று கேட்டான் ரஹீம்.
‘இல்லெ வாப்பா. இது வொரு பொட்டு மருந்து…அடுத்த ஆளுட்டெ சொன்னா பலிக்காது’ என்று சொல்லிவிட்டு மண்புழுக்களிருந்த சிரட்டையை அவன் பார்க்காதவாறு மறைத்தாள்.
‘என்னது சின்னம்மா…ஒரு மாதிரி புழு போல நெளியுது…’ – விடாமல் அவன் கேட்டான்.
‘அது வொண்ணுமில்லெ…நீ அங்கெ போ…சின்னம்மா இப்ப வாறேங்’
அவன் போகாமல் அங்கேயே நின்று கொண்டிருப்பதை பார்த்த அவனுடைய சின்னம்மா, ‘இது சின்னவாப்பாக்கு இழுப்பு வரும்லா கண்ணே… அதுக்கு ஒரு ஆளு சொன்ன மருந்து.. நீ அங்கெ போ… பொட்டு மருந்து அடுத்தாளுக்கு சொன்னா பலிக்காது’ என்றதும் அவன் விலகிச் சென்றான்.
‘பலிக்காதுன்னா…என்னது சின்னம்மா..’ அவன் கேட்டான்.
‘பலிக்காதுன்னா…யாராவது பாத்தா அல்லா கொணப்படுத்தமாட்டாங் சின்னவாப்பாக்கு மூச்சிழுப்பெ..’ என்று சொல்லிக் கொண்டு எழுந்து அவன் கையைப் பிடித்து தோட்டத்தில் கிடந்த பலவக்குத்தியில் இருத்திவிட்டு ‘இங்கிருந்து எத்தனெ பஸ் போவுது?அங்கெயிருந்து எத்தனெ பஸ் வருவுதுன்னு பாத்து எண்ணு பாக்குவோம்..’என்று சொல்லிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள். எதிரே கன்னியாகுமரி நெடுஞ்சாலை அதுபாட்டுக்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
வருசத்திற்கு ஒருமுறை சுசீந்திரம் திருவிழா வரும். அப்போது சாலையில் மக்கள் திரள் திரளாக சுசீந்திரம் கோயிலை நோக்கி போய்க் கொண்டிருப்பார்கள். பெரும்பாலானவர்கள் குடும்பம் குடும்பமாக நடந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு குடும்பத் தொகுப்பிலும் யாராவது ஒருவரிடம் பெரிய தூக்குவாளி ஒன்று இருக்கும். அதில் உணவு எடுத்து வந்திருப்பார்களாக இருக்கும். எப்போதெல்லாம் அந்த மண்புழுக்களும் சிரட்டையும் சின்னம்மாவின் முகமும் நினைவுக்கு வருமோ அப்போதெல்லாம் சுசீந்திரம் தேரோட்ட கோலாகலமும் அவனுடைய நினைவில் வந்து போகும். கூடவே மண்புழுவுக்களும் சின்னம்மாவும் அவற்றை சிரட்டையில் இட்டு தட்டுக்கல்முளையினால் சதைப்பதும் நினைவுக்கு வந்து விடும் அவனுக்கு. அப்போது மனத்திற்குள் வாந்தி எடுக்கணும் போல் ரஹீமுக்கு குமட்டல் உண்டாகும். சமாளிக்க முடியாமல் சில சமயம் வாந்தியும் எடுப்பான்.
உடை மாற்றிக் கொண்டு எட்டிப் பார்த்து அவனை அழைத்தன ஆறுகளும் குளங்களும். நண்பர்களும் மாடுகளும் எழுதிய வண்டித்தடத்தில் அவனுடைய மண்புழுக்களும் எத்தனைக் காலம்தான் காலச்சக்கரங்களை பதித்துச் செல்லமுடியும். ஆறுகளிலும் குளங்களிலும்தான் தம்முடைய அதிகாலை வானம் காலத்தை தேடிக் கொண்டிருப்பதாகவும் அது அவனுடைய வருகைக்காக வீட்டுச் சுற்றுச் சுவர்களில் வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும் நம்பினான். ஈரம் மாறாத ஆற்றின் படித்துறைகள் கனவுகளில் நிற்கும் செடிகளை நீராட்டிக் கொண்டிருந்தன.
அவன் தெரு நண்பர்களோடு சுய்ந்தி குளத்துக்கோ பெரியாத்துக்கோ மீன்பிடிக்கப் போவான். அப்போது நண்பர்கள் முதலில் சிரட்டையும் கம்புமாக மண்புழு தோண்டியெடுக்க ஈரநைப்புள்ள இடத்திற்குச் செல்வார்கள். அவனும் உடன் செல்வான். மற்ற நண்பர்கள் தரையைக் குத்திக்கிளறி மண்புழுவை எடுப்பதை அருவருப்புடன் பார்த்துக் கொண்டே நிற்பான். ரஹீமுக்கு குமட்டல் வந்து கொடம் கொடமா வாந்தி எடுத்து வைப்பான்.
‘யாம்புலே…எப்ப ஆத்துக்கு வந்தாலும் வொனக்கு வாந்தி வருது’ அக்பர் கேட்டான். அவனுடைய நினைவில் வந்து போகும் மண்புழுக்களுக்கான காரணகாரியங்களை பிறர் அறிய வேண்டாம் என்பதால் ரஹீம் பதிலேதும் சொல்லாமல் தவிர்த்துவிடுவான்.
‘பிடிக்கிலைன்னா யாம்புலே எங்க கூடெ வாறே…பேசாமெ வூட்லெ இரிக்க வேண்டியதுதானே..’கபீர் சொன்னான். யார் என்னத்தையாம் சொல்லிட்டு போட்டு… ஆத்துக்கு நண்பர்களோடு வருவதென்றால் அவன் ஒருபோதும் அதை தவறவிடுவதில்லை. அவர்களோடு மீன்பிடிக்க எப்போதும் மண்புழுக்களைத் தேடி சிரட்டையோடு அலைவதில் சந்தோசமடைந்தான்.
‘யாம்புலே.. ரயீமு… பேசாமெ நிக்குதே…புழுவெத் தோண்டி எடேம்புலே.. இது வெறும் புழுதானலே… பாம்புன்னு நெனச்சியோ…. ஒண்ணும் செய்யாதுலே…’ என்பார்கள் நண்பர்கள். அவன் கிறங்க மாட்டான்.
‘மக்கா…எனக்கு கொமட்டுதுலே…எனக்கெ தூண்டில்லெ எவனாவது புழுவெ குத்தி தண்ணியிலெ போடுவீங்களாலே…’ ரஹீம் பாவம் போல கேட்பான்.
‘ஆம்மா..நொட்டு… எங்க தூண்டிலுக்கே புழுகெடைக்க மாட்டேங்குது… எவ்வளவு தோண்டியாச்சு… அங்கெ போவமுடியலெ…. எல்லா எடத்துலெயும் பேண்டு வச்சிருக்கானுவோ… கொஞ்சந்தானெ கெடச்சிருக்கு.. மயிரு. அவரு தோண்டவும் மாட்டாராம்… அப்ப என்னத்துக்குலே எங்கெ கூடே வாறே…’ என்று கையை மணத்திப் பார்த்தபடி சொன்னான் மைதீன்.
‘அப்ப வாவேம்புலே.. கொஞ்சம் வந்து தோண்டியாவது தாயேம்புலே…’ –இது மைதீன்.
அவன் தோண்டி கிளறிக் கொடுப்பான். காற்றுவாக்கில் வரும் பீவாடை வயிற்றை ஒரு புரட்டு புரட்டி போடும்…நண்பர்கள் அனாயாசமாக மண்ணை கையிலெடுத்து உதிர்த்து போட்டு மண்புழுவை எடுத்து சிரட்டையில் போடுவார்கள். அவனுக்கு குமட்டிக் கொண்டு வரும். அவர்களுடன் சென்று ஆத்தங்கரையில் ஏதோவொரு கல்லின் மேல் உட்கார்ந்து கொண்டு தண்ணீரில் மிதக்கும் தூண்டில் கங்கூஸில் கட்டப்பட்டிருக்கும் ஆகாயத்தாமரையின் இலைக்காம்பு துடிப்பதையே கவனித்துக் கொண்டிருப்பது என்பது ரஹீமுக்கு அலாதி சுகம்தான். தக்கை துடிப்பது நின்றதும் மறுபடியும் தூண்டிலை வெளியே எடுத்து அதில் மண்புழுவை சொருக நண்பர்கள் யாரையாவது அழைப்பான். அவர்களின் கவனம் தூண்டிலின் தக்கையில் மட்டுமே இருக்கும். தூண்டில் முள்ளில் கோர்க்க ரஹீம் நண்பர்களை மீண்டும் மீண்டும் அழைப்பான். அவர்கள் அவனைக் கடிந்து கொண்டே வந்து புழுவை தூண்டிலில் கோர்த்துக் கொடுப்பார்கள்.
சின்னச்சின்ன மீன்கள் மட்டும்தான் அதில் பிடித்திருக்கிறான் அவன். பெரிய மீன்கள் மாட்டணும்னா பெரிய தூண்டில் முள்ளில் கசாப்புக்கடையிலிருந்து சவ்வு வாங்கிட்டு வந்து அதை தூண்டில் முள்ளில் கோர்த்தால் பெரிய மீன் அகப்படும். அவன் பெரிய தூண்டிலோடு இப்போது ஆற்றங்கரையில் ஒற்றைக்கு தனியாக பனைமர டால்டா டப்பாவில் இறைச்சி சவ்வுகளுடன் போய்க் கொண்டிருக்கிறான். அவனுக்கு இப்போது மண்புழுவிலிருந்தும் குமட்டலிலிருந்தும் விடுதலை கிடைத்திருந்தது. ஆனால் பொல்லாத பீவாடை…
இன்றும் டால்டா டப்பாவை கங்கூஸில் ஒன்றாகச் சேர்த்துக் கட்டியிழுத்துக் கொண்டு ரஹீம் மண்பாதையை வடிவமைத்துக் கொண்டு ஆற்றை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான்.
**