பட்டென்று கண்களை இறுக்கி மூடியபடி குணிந்து தன் இரு கைகளாலும் வயிற்றை மூடி காத்துக்கொண்டாள். அடுத்த இருக்கைக்கு செல்ல முயன்றவன், கால் தடுமாறுவதை அவள் எதிர்பார்த்திருந்தால் மட்டுமே அத்தனை வேகத்துடன் கை, வயிற்றை மூடியிருக்கக்கூடும். ரயிலின் சன்னல் இருக்கையிலிருந்து மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்தாள் மலர். ஒரு நீண்ட பயணத்தில் சன்னல் இருக்கையை விட்டுக் கொடுக்காததால் தன் தம்பியிடம் சண்டை போட்டு மூன்று நாட்களுக்கு பேசாமல் இருந்தவளுக்கு, இப்பயணத்தில் சன்னல் இருக்கை கிடைக்காததைப் பற்றி எவ்வித வருத்தமும் இல்லை.
“Sorry sorry.”- தடுமாறி விழுந்தவன், மலரிடம் சொன்னான்.
மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் விதமாக கண்களை மெதுவாக மூடி தலையை மட்டும் அசைத்தாள், மலர்.பக்கத்து இருக்கையில் இருந்த பெண், மலர் தன்னை தற்காத்துக் கொண்ட விதத்தை கவனித்ததால் கேட்டாள்.
“எத்தனை மாசம் ம்மா”
சிறிய தயக்கத்தோடு மலர் பதிலளித்தால்.
“மூனு”
“ஏம்மா வருத்தமா சொல்ற. நல்ல விசயம்தான”
பெரிதாக விளக்கங்கள் ஏதும் மலர் அளிக்க விரும்பவில்லை. புன்னகைத்தாள். பெரும்பாலான சமயங்களில் சிரிப்பை மட்டும் பதிலாக தருபவர்கள் பெரிய கஷ்டத்தை உள்ளூர தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரந்தவளாக இருந்தது அந்த புன்னகை. “Tea coffee சமோசேய்ய்ய்….” என்றபடி tea விற்பவர் கடந்து சென்றார். சமோசா வேண்டும் என்று கேட்டு அழுதது ஒரு குழந்தை. மூன்று வயது இருக்கும். “அது வேணாம்டா அச்சுலு. அது ஆயி” என்றபடி குழந்தையை சமாதானம் செய்ய பார்த்தாள் அந்த குழந்தையின் தாய். எவ்வளவு சொல்லியும் குழந்தை கேட்டபாடில்லை. ‘பட்’ என்று ஒரு அடி குழந்தையின் கையில் விழுந்தது.
அம்மா அன்று அறைந்த அந்த அறை மலருக்கு நியாபகம் வந்தது. அப்பா வேக வேகமாக சென்று கதவை மூடினார். தம்பி மலரை முறைத்து பார்த்தபடி நின்றான். அம்மா, அடிப்பதை நிறுத்தவே இல்லை. மலருக்கு உடலின் எல்லா இடங்களிலும் அடி விழுந்தது. தலை குணிந்து உட்கார்ந்து கைகளை முழங்கால்களோடு அணைத்த படி அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டாள். அடித்து முடித்து மேலும் கீழும் மூச்சு வாங்கியபடி,
“ஏன்டி இப்டி பண்ணிட்டு வந்து நிக்குற. ஒன்ன இதுக்கா பெத்து வளத்தேன்”
என்று அழுது புலம்பியபடி ஐயோ ஐயோவென்று கூச்சலிட்டு தன் நெஞ்சில் அடித்துக்கொண்டாள் மலரின் அம்மா பாக்கியம்.
அப்பா வெற்றிவேல், மலரை நோக்கி சென்று மெதுவாக அருகில் அமர்ந்தார்.
“ஏன்டா கண்ணு. அந்த பையன் வேணாம்டா. உன்ன ராணி மாரி எடத்துல நா கட்டிக்குடுக்குறேன்டா. அப்பா சொல்றத கேளுடா”
“எனக்கு அதெல்லாம் வேணாம் ப்பா. மணி கூடவே என்னை சேத்து வச்சுருங்கப்பா. Please ப்பா” என்றாள் மலர்.
வெற்றிவேலுக்கு கோபம் தலைக்கேறியது.
“முண்ட முண்ட” என்று கூறியபடி வலது காலால் மலரின் தலையில் எட்டி உதைத்தார். “கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி ரெண்டு மணி நேரமா மாரி மாரி சொல்லிட்டு இருக்கோம். திரும்ப திரும்ப அதையே சொல்ற. நல்லா கேட்டுக்க. உன்ன கொன்னாலும் கொல்லுவோமே தவுர அந்தப் பயலுக்கு கட்டிக்குடுக்கமாட்டோம்” – கைலியை சரி செய்து கொண்டார்.
அடியை வாங்கிக்கொண்டு தன் தம்பி பிரபுவை நிமிர்ந்து பார்த்தாள் மலர்.
“என்னை என்ன பாக்குற? அம்மா அப்பாவ கஷ்டப்படுத்தி நீயெல்லாம் நல்லாவே இருக்க முடியாது. அப்டி என்ன உனக்கு கூதி அரிப்பு வேண்டியதிருக்கு”- என்று திட்டியடி ஓடிவந்து மலரை உதைத்தான் பிரபு.
21 வயது தம்பியிடமிருந்து அந்த வார்த்தைகளை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது.
பாக்கியம் எழுந்து வந்து,
“சொந்தக்காரங்க மத்திலலாம் தலைகாட்ட முடியாதுடி. எங்கள அசிங்கப்படுத்திறாதடி” என்று கெஞ்சினாள்.
இவர்களின் எந்த அடியும், உதையும், கெஞ்சல் வார்த்தைகளும் மலர், மணிகண்டன் மீது வைத்திருக்கும் காதலின் உறுதியை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மலரும் மணிகண்டனும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் (software company) ஒன்றாக வேலை செய்து வந்தனர். நண்பர்களாக பழகி வந்தனர். இருவருக்குமே புரிந்தது இது வெறும் நட்பு மட்டுமே இல்லை என்று. அப்படி ஒரு கணத்தில் மணிகண்டன் தான் மலரிடம் முதலில் காதலை சொன்னான். இது ஒன்றும் மலர் எதிர்பார்க்காதது அல்ல. அதனால் மலரின் ஒரு சிறிய புன்னகையே அதற்கு பதிலாக இருந்தது. ஒரு வருட நண்பர்கள். மூன்று வருட காதலர்கள்.இருவரும் வேறு வேறு சாதிகள். பொதுபுத்தி பார்வையில் ஏறக்குறைய சமமான மதிப்பு கொண்ட சாதிகள்தான். மலருக்கு வீட்டில் திருமண பேச்சு வந்தது. அதை அவள் மணிகண்டனிடம் சொல்ல, அவன் முதலில் அவன் வீட்டில் பேசி பெற்றோரிடம் சம்மதம் பெற்றுக் கொண்டான். சாதி கௌரவமெல்லாம் பெண்கள் மீது மட்டும்தான். ஆண்பிள்ளையல்லவா? எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் மலருக்கு அப்படி இல்லை. விசயம் அவள் பெற்றோரின் காதுகளுக்கு சென்றதிலிருந்து அவளை வேலைக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டனர். பல நாட்களாக ஒரே சண்டை, அடி, உதை, கெட்ட கெட்ட வார்த்தைகளில் வசவு. அனைத்தையும் சகித்துக்கொண்டாள் மலர்.
“ நான் கூட ஆசைப்பட்ட பொண்ண கல்யாணம் பண்ணிக்கலம்மா. ஆனா இப்ப சந்தோசமாதான இருக்கேன்” என்று அப்பா அறிவுரை கூறினார்.
“அப்பா இவகிட்ட என்னப்பா பேசிட்ருக்கிங்க. அடிச்சு கை கால ஒடைச்சு போடுங்க. கல்யாணமே வேணாம். கடைசி வரை இப்டியே கெடந்து சாவட்டும்” என்றான் பிரபு.
“பாத்தியாடா. தம்பி உன் மேல எவ்ளோ பாசமா இருந்தான். அவனே இப்டிலாம் பேசுறான்னா புரிஞ்சுக்கடா. நாங்கெல்லாம் உன் மேல உயிரையே வச்சுருக்கோம்டா” என்றார் வெற்றிவேல்.
“அவ்ளோ பாசம் இருந்தா நா ஆசைப்பட்ட பையனையே கல்யாணம் பண்ணி வைங்களேன்ப்பா” என்றாள் மலர் அழுதபடி.
வெற்றிவேல் கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
“இந்த தேவுடியா முண்டை நம்ம மானத்த வாங்காம போகமாட்டாடா” என்று மலரை விடாமல் உதைத்தார் வெற்றிவேல். கால் படாத இடமே இல்லை என்னுமளவு உதை விழுந்தது. விளக்குமாறை கொண்டு வந்து மறுபுறம் பாக்கியம் அடி வெளுத்தாள். மலரின் Nighty ஒரு புறம் கிழிந்தது தான் இத்தனை அடிகளுக்கு கிடைத்த வெற்றி. பிரபுவும் அமைதியாய் இல்லை. அவன் பங்குக்கு அவனும் அடி, உதையென கடமையாற்றினான். தரையில் முழுதுமாக படுத்து கதறி அழுதாள் மலர். வெற்றிவேலின் காலை இறுக்கமாகப் பிடித்துக் கெஞ்சினாள். அவள் கையிலேயே விளக்குமாறை வைத்து அடித்தாள் பாக்கியம். மூவரும் ஒரு கட்டத்தில் சோர்வாகி மேலும் கீழும் மூச்சிரைக்க நின்றார்கள். மலர் தரையில் குப்புறப் படுத்து கதறி அழுதாள்.
“இது சரிபட்டு வராதுடி. நாம எல்லாம் உயிரோட இருக்க வேணாம். இருக்கவே வேணாம்” – ஆதங்கத்தோடு மூச்சிரைக்க சொல்லிவிட்டு அறையை திறந்து வெளியே ஓடினார் வெற்றிவேல்.
“இருந்து கேவலப்பட்றதுக்கு இதை செய்வோங்க மொதல்ல.” என்று பின்னாலேயே ஓடினாள் பாக்கியம். பின்னால் பிரபுவும், மலரும் ஓடினார்கள். வெற்றிவேலும், பாக்கியமும் வேறு ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்கள். பிரபுவும், மலரும் கதவை திறக்க சொல்லி அலறினார்கள்.
“அம்மா அம்மா.. அப்பா.. please கதவை தொறங்க”- என்று கெஞ்சினாள் மலர்.
“நீ புடிச்சவனோட இருந்துக்க. ஆனா அதை பாக்க நாங்க இருக்க மாட்டோம். உன் தம்பி அநாதை ஆகிருவான். நீ சந்தோசமா இரு” -என்று சத்தம் மட்டும் பாக்கியத்திடம் இருந்து வந்தது. உள்ளே எதையோ உருட்டுகிறார்கள். நிச்சயம் சேலையாகத்தான் இருக்க வேண்டும். மலர் பதட்டமடைந்தாள். பிரபு, மலரின் காலில் விழுந்து “அப்பா அம்மாவை காப்பாத்துக்கா. சரினு ஒரு வார்த்தை சொல்லுக்கா” என்று கதறி அழுதான். உடைந்து நின்று அழுதாள் மலர். யோசிக்க கூட நேரம் இல்லை. சில வினாடிகள் தான்,
“சரி சரி.. நீங்க சொல்றத கேக்குறேன்” என்று கத்திக் கூச்சலிட்டு அழுது தரையில் விழுந்தாள் மலர்.
அறைக்குள் இருந்த பாக்கியம் மற்றும் வெற்றிவேலின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம். கதவை திறந்து வெளியே ஓடி வந்து, மலரை ஆரத்தழுவி,
“என் குலசாமிடா நீ. எனக்கு தெரியும்டா. நீ அப்பாவ எதிர்த்து எதுவும் பண்ணமாட்டடா. வெற்றிவேல் புள்ளையாச்சே” என்று கட்டிப்படித்துக்கொண்டார்.
“பாக்கியம். போய் சூடத்த பத்த வச்சு கொண்டுவாடி.”
ஒரு வாரம் மலர் பணிக்கு வராததில் ஏற்கனவே மன உளைச்சலில் இருந்தான் மணிகண்டன். இரண்டாம் நாளே மலரின் வீடு தேடி வந்து பெற்றோருடன் சண்டையாயிற்று. அவர்கள் சம்மதம் முக்கியம் என்று கருதியதால், மலரை மட்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று கேட்டு பார்த்துவிட்டு அமைதியாய் திரும்பிவிட்டான். மலரின் மீது துளியும் அவனுக்கு சந்தேகமில்லை. இவர்கள் என்ன செய்தாலும் அவளை பிரிக்கமுடியாது என்று திடமாக நம்பினான். ஒரு வாரத்திற்கு பிறகு மலரிடம் இருந்து office emailல் இருந்து ஒரு Mail வந்தது. நடந்தவற்றை எல்லாம் விளக்கியிருந்தாள்.
“எனக்கு வேற வழி தெரியலடா. எனக்கு இந்த ஒரு chance மட்டும் குடு” என்று குறிப்பிட்டிருந்தாள். ஏதோ அவசர அலுவலக வேலை என்று பாக்கியத்திடம் பொய் சொல்லி அந்த Mail-யை அனுப்பியிருந்தாள் மலர். மணிகண்டனுக்கு தூக்கி வாரிப்போட்டது. மலர் இந்த முடிவுக்கு வருவாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இனி ஒன்று சேர முடியாதோ, மலர் இனி தனக்கில்லையோ போன்ற எண்ணிலடங்கா கேள்விகள் அவன் தலையைச் சுற்றி வந்தன. ஆனால் “ நீ எப்டி இருக்க மலர். நல்லாருக்கியா” என்பதைத்தான் அவன் கை தட்டச்சு செய்து கொண்டிருந்தது.
மலர் reply mail எதிர்பார்த்து தயாராக இருந்தாள்.
“நல்லாருக்கேன்டா. என்னை மன்னிச்சுரு. இதை விட்டா வேற வழி இல்லை” என்று பதிலனுப்பினாள்.
“எதுவா இருந்தாலும் நீ இப்ப சண்டை போட்டு ஜெயிச்சாதான் உண்டு. நீ சொல்றதுலாம் நடக்காத காரியம். வேண்டாம் மலர்” என்று பதிலனுப்பினான் மணிகண்டன்.
“இல்லடா.உன்னை நான் miss பண்ண விரும்பல.நீ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சு கூட பாக்க முடியாது. என் கல்யாணத்துக்கு அப்பறம் 2 months time மட்டும் குடு. நா எப்டியாவது சண்டை போட்டு பிரிஞ்சு வந்துட்றேன். அப்ப இவங்களையும் சமாளிச்சுற முடியும் என்னால. Please புரிஞ்சுக்கோ” என்றாள் மலர்.
“லூசா நீ. உங்க அப்பா அம்மா பண்ற தப்புக்கு இன்னொருத்தன் வாழ்க்கைய எப்டி நாசமாக்குவ. இது நடக்கவும் நடக்காது. Reality தெரிஞ்சு பேசு.இதலாம் தப்பில்லையா” என்றான் மணிகண்டன்.
“இங்க எதுவுமே நியாயம் அநியாயம் பாத்து நடக்குறது இல்லடா. அந்தந்த நேர தேவைகள்தான் நியாயம்,நல்லது,சரி எல்லாமே. எனக்கு நீ வேணும். அதுக்கு இத விட்டா வேற வழி தெரியல. Love you”-என்று மலரிடமிருந்து பதில் வந்தது.
“அழுவது போன்ற emoji யுடன் luv u. நா உன்னை நேர்ல பாக்கணும்”என்று கேட்டான் மணிகண்டன்.
மலரிடமிருந்து பதில் ஏதும் வரவேயில்லை. பாக்கியம் சுதாரித்துவிட்டாள். Message களை படிக்க தெரியாவிட்டாலும் மலர் ஏதோ ஏமாற்றுகிறாள் என்று புரிந்து கொண்டு mobile-யை பிடிங்கிக் கொண்டாள். தம்பியிடம் பாக்கியம் message களை காட்டிவிடக்கூடும் என்கிற பயத்தில் மலர் அவற்றை delete செய்துவிட்டாள். அதன்பிறகு மணிகண்டனிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மலர் கூறியவற்றை நம்பி அவனும் தொந்தரவு செய்யாமல் காத்துக்கொண்டிருந்தான். அவசர அவசரமாக அடுத்த ஒரு மாதத்திற்குள் மலருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. திருமணத்திற்கு பிறகு மலர் வேலையை விட்டுவிட வேண்டும் என்பது onsite மாப்பிள்ளை பிரசாந்தின் நிபந்தனை. திருமணம் முடிந்து 1 மாதத்திலேயே Dependent visa வில் மலரையும் கனடா கூட்டிச்செல்வதாக திட்டம். திருமணத்திற்கு முன்பு பிரசாந்திடம் பேசுவற்கு கூட சூழல் அமையவில்லை. கை நிறைய சம்பாதித்தாலும் அம்மா அப்பா சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளைதான் பிரசாந்த். திருமணமும் முடிந்தது. போலியான புன்னகையுடன் நாள் முழுக்க photos களுக்கு pose கொடுத்த கலைப்பில் இரவும் வந்தது. முதலிரவிற்கு தயாரான பிரசாந்த் அறைக்குள் நுழைந்தான். கட்டிலின் அடுத்தப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் மலர். ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர்.
“இன்னைக்கு full day நான்தான் பேசிட்டே இருந்தேன். நீங்க பெருசா பேசவே இல்லையே” என்றான் பிரசாந்த்.
பதிலேதும் சொல்லாமல் தலை திரும்பியபடி இருந்தாள் மலர்.
சிறிய புன்னகையுடன்
“ம்ம்..புரியுது. படுக்கலாமா” என்றான் பிரசாந்த்.
“ம்ம்” என்று காலை கட்டிலில் தூக்கி வைத்துப் படுத்தாள் மலர். பிரசாந்த்-ம் படுத்தான். பிறகு மெதுவாக மலரின் அருகில் நகர்ந்தான். மலர் அமைதியாக இருந்தாள். அவள் மேல் ஒரு கையை போட துணிந்தான். அவன் கை நீட்டுவது தெரியாதது போல் ஓரத்தில் இருந்த ஒரு தலையணையை எடுத்து இருவருக்கும் நடுவில் எதார்த்தமாக வைப்பது போல் வைத்தாள் மலர். கோவமாக திரும்பிப் படுத்துக் கொண்டான் பிரசாந்த். மறுநாள் காலை சாப்பிட்டு முடித்தவுடன் அறைக்குள் வந்தாள் மலர். பின்னாலிருந்து வந்து அவளை கட்டியணைத்தான். மலருக்கு திடுக்கென்றானது. பிடியில் இருந்து தப்பிக்கப் முயற்சித்தாள். பிரசாந்த் விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் கோவமாக
“Please விடுங்க” என்று சத்தமாக கூறிவிட்டாள்.
படக்கென்று கையை தளர்த்தி பின் சென்றான் பிரசாந்த். அவன் கோவம் கொண்டதை உணரந்த மலர்,
“sorry. எனக்கு கொஞ்சம் time வேணும். அதுக்குப்பறம் இதலாம்” என்று மென்மையான குரலில் இழுத்தாள்.
தலையசத்தபடி அங்கிருந்து நகர்ந்தான் பிரசாந்த்.
இருந்தாலும் அதன்பிறகும் இரண்டு மூன்று முறை அவளை நெருங்க முயற்சித்தான் பிரசாந்த். இது மேலும் மலருக்கு வெறுப்பைத் தந்தது. கூடுமான அளவு அவனுடன் தனியாக நேரம் செலவழிப்பதை தவிர்த்தாள். சிறிய விசயத்திற்கும் கோபம் கொண்டு சண்டையிட முனைந்தாள். இதையெல்லாம் பிரசாந்த் கொஞ்சம் கொஞ்சமாக கவனித்துக் கொண்டிருந்தான். நாளடைவில் சரியாகும் என்று மனதை ஆற்றுப்படுத்திக்கொண்டான். தன் குடும்ப மானம் காத்த மகிழ்ச்சியில் பாக்கியம்,வெற்றிவேல் மற்றும் பிரபுவும், அப்படி எதுவுமே நடக்காதது போல் தினமும் மலருக்கு phone செய்துவிடுவார்கள். மலரும் விருப்பமில்லாமல் கடமைக்கு பேசிவிட்டு அழைப்பை துண்டித்துவிடுவாள். பிரசாந்த் அருகில் இருக்கும்போது மட்டும் சற்று சிரித்தபடி போலிப்பேச்சு தொடரும். மணிகண்டனிடம் பேச வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்தாள் மலர். அவனிடம் வாக்குக் கொடுத்தபடி இங்கிருந்து விடுபட்டு அவனை நேரில் சந்தித்துதான் மீண்டும் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தால். அனுதினமும் மணிகண்டனைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தாள். பிரசாந்த்-ம் மலரும் கனடா செல்லும் நேரம் வந்தது. அங்கு சென்றும் இதே நிலை தொடர்ந்தது. அதே சண்டை. அதே கோபம். காரணங்கள்தான் புதிது. பிரசாந்த்-ம் சிறிய சிறிய சண்டைகளைக் கூட அம்மாவிடம் phone-ல் அழைத்து ஒப்பித்து விடுவான். “ஆரம்பத்துல அப்டிதான்ப்பா இருக்கும். போகப் போக சரியா போயிரும்ப்பா” என்று அம்மா தேற்றுவாள். கனடா சென்றும் அவனை மலர் தன்னிடம் நெருங்க விடவில்லை. ஒரு நாள் இரவு வலுக்கட்டாயமாக அவளை கட்டிப்பிடித்தான். அவள் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் பணிகிறாள் மலர். பிரசாந்த் தொடர்ந்தான். மலரை புணர்ந்தான். பிரசாந்த் புணரும்போதும் மலர், தன் காதலன் மணிகண்டனையே நினைத்துக்கொண்டாள். முடிந்ததும் ஆடையின்றி restroom சென்று தண்ணீர் குழாயை திறந்து விட்டு கதறி அழுதாள், மலர். இது ஒரு licence பெறப்பட்ட rape தானே என்று எண்ணியே அந்த அழுகை. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்தும் இந்த முடிவுக்கு மணிகண்டன் சம்மதித்திருக்கிறான் என்று நினைக்கும்போது அவன் மீதான் தன் காதல் மலருக்கு மேலும் ஒரு படி உயர்ந்தது. அதன்பிறகு ஒரு சில முறைகள் மலருக்கு கற்பழிப்பும், பிரசாந்திற்கு தாம்பத்தியமும் நடந்தது. ஆனால் அதன்பிறகும் பிரசாந்த் எண்ணியபடி மலர் மாறவில்லை. அதே முரண்பாடுகளும் சண்டைகளும் தொடர்ந்தன. சில நேரங்களில் இயற்கையாகவும், சில நேரங்களில் மலரின் திட்டங்களினாலும். இப்படியாக திருமணமாகி இரண்டு மாதங்கள் முடிந்திருந்தன. சண்டைகளைப் பற்றி தன் நெருங்கிய நண்பர்களிடம் சொல்ல தொடங்கியிருந்தான் பிரசாந்த். அவர்கள் ஆளுக்கொரு அறிவுரை வழங்குவார்கள். அதில் ஒருவன் சொன்னது உச்சித் தலையில் ஆணி அடிப்பது போல அவனுக்கு இறங்கியது.
காலையில் சாப்பிடுவதற்கு பிரசாந்த் dining hall வந்தான். மலர் சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு எதிரில் அமர்ந்திருந்தாள். அமைதியாக முதல் இட்லியை உண்ட பிரசாந்த்,
“நீ pads use பண்றதில்லையா” என்று மலரிடம் கேட்டான்.
இதை மலர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டாள். பின் அமைதியாக இருந்தாள்.
“உன்னை தான் கேக்குறேன்”-அதட்டும் தொணியில் கேட்டான் பிரசாந்த்.
“இல்லை”- சற்று திடமான குரலில் மலர்.
“எவ்ளோ நாளா?”
“நாலு மாசமா”
“அப்டினா”- எந்த தாமதமுமின்றி பிரசாந்த்
அமைதி காத்தாள் மலர்.
“4 months ஆ pads use பண்றதில்லனா அதுக்கு என்ன அர்த்தம்” – சத்தமாக கத்தினான் பிரசாந்த்.
அங்கிருந்து எழுந்து நடந்தாள் மலர். அறையை நோக்கி சென்றாள். வேகமாக பின்னால் ஓடிவந்து மலரின் முழங்கைக்கு மேலே இறுக்கமாக பிடித்தான் பிரசாந்த்.
“என்னை பாத்தா எப்டிடி இருக்கு உனக்கு”- உச்சகட்ட கோவத்தில் கத்தினான்.
மலர் பதில் ஏதும் சொல்லவில்லை.
“என்ன அர்த்தம் சொல்லுடி”- மீண்டும் அதே அளவு சத்தத்தில் கேட்டான்.
பதிலேதும் வராத கோவத்தில் உச்சமாக அலறினான்.
“இப்ப சொல்லப்போறியா இல்லயாடி”
இதுவரை அடக்கி வைத்த மொத்த மன அழுத்தம், கோவம், அழுகை மொத்தமும் வெளிப்படும் அளவு கோவத்தில் மலர் கத்த ஆரம்பித்தாள்.
“ஆமா. நா மாசமா இருக்கேன். ஆனா சத்தியமா நீ காரணம் இல்லை. போதுமா”
திடுக்கிட்டு மலரை பிடித்திருந்த கையை தளர்த்தினான் பிரசாந்த்.
“யாரு”
“என் கூட work பண்ண பையன். பேரு மணி. மணிகண்டன். Love பண்ணோம். Blackmail பண்ணி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. எனக்கு சுத்தமா இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. என்னை விட்ரு. நா போயிட்றேன்”
“எது விட்றவா? உங்க அப்பா அம்மா பண்ண தப்புக்கும், உன் சுயநலத்துக்கும் என் வாழ்க்கை தான் கிடைச்சுதா. நா என்னடி தப்பு பண்ணேன்”- ஏமாற்றப்பட்ட வலியில் அழத் தொடங்கினான் பிரசாந்த்.
“புடிச்சுருக்கா இல்லையானு கூட கேக்காம அந்த காலத்து ஆளுங்க மாதிரி தாலி கட்டுனது தப்பு. முன்ன பின்ன தெரியாதவள தொட்டது தப்பு. புடிக்கலனு சொன்னப்பறமும் அதையே பண்ணது அத விட பெரிய தப்பு. விருப்பம் இல்லனு தெரிஞ்சும் u raped me. அது கேவலமான தப்பு”- ஆத்திரமாக மலர் சொன்னாள்.
“ச்சீ. உத்தமி மாதிரி பேசாதடி தேவிடியா முண்டை. எவன் கூடயோ படுத்துட்டு வந்து என் வாழ்க்கைய அழிச்சியே அது தப்பில்லையா”-அழுகையுடன் கலந்த கோபத்தில் பிரசாந்த்.
அழத்தொடங்கினாள் மலர். அழுகையோடு பேச ஆரம்பித்தாள்.
“நா பண்ணது சரினு சொல்லல. இங்க சரி தப்புனு எதுவுமே இல்ல. என்னை பெத்தவங்க அவங்க நியாயத்துக்கு என் வாழ்க்கைய அழிச்சாங்க. என் நியாயத்துக்கு எனக்கு இதுதான் சரியா பட்டுச்சு. என்னை மன்னிச்சுரு”
“உன்னை பாக்கவே அசிங்கமா அருவருப்பா இருக்குடி. இவ்ளோ கேவலமான மனுசங்களும் இருப்பாங்கனு உன்ன பாத்துதான் தெரிஞ்சுக்குறேன். ச்சய்”
உடனே அவனுடைய mobile-யை எடுத்து மலரின் அப்பாவிற்கு call செய்தான். நடந்த எல்லாவற்றையும் கூறினான். இருவர் வீட்டிலும் இடிந்து விழுந்தது.
“ஏன்டி இப்டி பண்ண முண்டை. போச்சோடி போச்சேடி. என் மானம் போச்சோடி. இனி ஊர்ல எப்டிடி தலைகாட்டுவேன். இதுக்கு அன்னைக்கே எங்கள குழி தோண்டி பொதைச்சுருக்கலாமேடி” – கொட்டித் தீர்த்தார் வெற்றிவேல்.
வெற்றிவேல் பிரசாந்திற்கு அழைத்து சமாதானம் செய்ய முயற்சித்தார்.
“இதுக்கு மேல எதுவும் பேசாதிங்க. நீங்களும் உங்க குடும்பமும் என் வாழ்க்கைய அழிச்சதுக்கு நேர்ல வந்து கண்டம் துண்டமா வெட்டி போட்றலாம்னு இருக்கு. அடுத்த flight-ல அந்த ஊர் மேஞ்ச முண்டைக்கு ticket போட்றேன். ஒழுங்கா போக சொல்லிருங்க”- பேச வேண்டிய அனைத்தையும் பேசி விட்டதாக நினைத்தான் பிரசாந்த். ஆனால் இதையும் சுயமாக பேசவில்லை. தன் அம்மா அலைபேசியில் சொன்னதை ஒப்பித்தான். ஓரமாக அமர்ந்து மலர் அழுது கொண்டிருந்தாள்.
சட்டென்று குழந்தை அழும் சத்தம் கேட்டு நினைவிற்கு திரும்பினால் மலர். இப்போது சென்னையிலிருந்து தேனிக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கிறாள். இத்தனை சங்கடங்களுக்கு மத்தியிலும் தன் காதலன் மணிகண்டனை அவன் வாரிசுடன் சந்திக்கப் போவதில் பெரும் மகிழ்ச்சி கொண்டிருந்தாள். தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். நேரில் பார்க்கும்போது இந்த விசயத்தை கேள்விப்பட்டு மணிகண்டன் எப்படி சந்தோசம் கொள்வான், எப்படி நடந்து கொள்வான் என விதவிதமாக நினைத்துக்கொண்டாள்.
“உன் மலர் வந்துட்டேன்டா” என்று கூறி கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். இவ்வளவு நேரம் ‘உர்’ என்று இருந்தவள் , தற்போது தனக்குத் தானே சிரிப்பதை விசித்திரமாக பார்த்து தானும் புன்முறுவல் செய்தாள் மலருக்கு அருகில் இருந்தவள். மலர் இருக்கும் இடத்தில் இருந்து ரயிலின் கதவருகில் ஒரு இளைஞன் நிற்பதை அவளால் காண முடிந்தது. படியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவன் சிலை போல் நிற்க அவன் கண்களிலிருந்து நீர் மட்டும் வழிந்து கொண்டே இருப்பதை கவனித்தாள். கண்ணிலிருந்து வெளிவந்த கணத்திலேயே, படார் என கடந்து செல்லும் எதிர் ரயிலின் வேகத்தில்,அந்த கண்ணீர்த் துளிகள் காற்றில் பறந்து சன்னல் ஓரத்தில் இருந்தவர்களுக்கு தீர்த்தமாக தெளித்தது. இளைஞனாக இருக்கிறான். எப்படியும் காதல் தோல்வியாக இருக்கும். காதலினால் கண்ட சுகங்கள் என்னவென்று உடனடியாக நினைவுக்கு வருவதில்லை. மாறாக வழி எங்கும் வலிகள் மட்டுமே நிறைந்து கிடக்கின்றன. இவ்வளவு கொடூரமான காதல் ராட்சனுக்கு பின்னால் ஏன் உலகமே ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள். கஷ்டங்கள் ரயில் பெட்டிகள் போல. ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இப்படி பல்வேறு சிந்தனை முத்துக்களை தனக்குள்ளே உதிர்த்துக் கொண்டிருந்தாள். ரயில் தேனியை வந்தடைந்தது. உத்தமபாளையம் தான் மணிகண்டனின் ஊர். கனடாவில் இருந்து தேனிக்கு வந்த மலருக்கு, பேருந்தில் உத்தமபாளையம் செல்லும் அளவு பொறுமை இல்லை. வேகமாக ரயில் சந்திப்பின் அருகில் இருந்த கடைக்குச் சென்று தன் மணி-க்கு பிடித்த தேன்மிட்டாய் pocket ஒன்றை வாங்கினாள். விறுவிறுவென auto வில் ஏறி “உத்தமபாளையம் போங்க ண்ணா” என்றாள். பொதுவாக யாரும் இவ்வளவு தூரம் auto-வில் செல்லமாட்டார்களே என்பதாக ஒரு பார்வை பார்த்தார் auto ஓட்டுனர். உத்தமபாளையம் வந்து சேர்ந்தாள் மலர். காதலர்களாக இருந்தபொழுதே நண்பர்கள் என்று கூறி மணிகண்டனின் வீட்டிற்கு மலர் வந்திருந்தாள். உத்தமபாளையம் பேருந்து நிறுத்தத்திலேயே இறங்கிக்கொண்டாள். அங்கிருந்து நடந்து செல்லும் தூரம் தான் அவன் வீடு. நடந்து செல்ல விரும்பினாள். ஒரு கையில் travel bag உடன் நடக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே இரண்டு முறை இங்கு வந்திருந்தபோது கிடைத்த நினைவுப்பக்கங்களை மீள்வாசிப்பு செய்தபடி சிரித்த முகத்தோடு நடந்து சென்றாள். மணியின் வீட்டை நெருங்க நெருங்க திருவிழா முடிந்த மூன்றாம் நாள் காட்சிகள் போல கண்ணில் பட்டன. மாரியம்மன் கோவில் திருவிழாவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள். அந்த திருவிழாவின்போதுதான் முறைப்பெண்ணுக்கு ஊற்றும் மஞ்சள் தண்ணீரை மலர் மீது மணிகண்டன் ஊற்றினான். சற்று தாழ்வான ஓடு அமைப்புடன் முற்றம் வைத்த அதுதான் அவன் வீடு. முற்றத்தில் கும்பலாக சிலர் நிற்பதை வாசலில் இருந்தே மலர் பார்த்தாள். வீட்டு திண்ணையில் இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். மெதுவாக உள்ளே சென்றாள். வலது கால் எடுத்து வைக்க மறக்கவில்லை. கும்பல் சற்றே விலகுகிறது. நடுவில் மணி ஒரு பெண்ணின் பக்கத்தில் அமர்ந்திருந்தான். ஏதோ கயிற்றை அவள் கழுத்தில் இருந்து கலட்டினான். சுற்றியிருந்த அனைவரும் ஏதேதோ சொல்லி பகடி செய்து கொண்டிருந்தனர். அதற்கு பதில் அளித்தபடி சிரித்துக்கொண்டே தங்கச் சங்கிலியில் கோர்த்த மஞ்சள் தாலியை அருகில் இருந்த பெண்ணின் கழுத்தில் மாட்டினான். திருமணம் முடிந்து தாலி கோர்க்கும் நாள் போல. மலர் வாசற்படி நிலைக்குப் பக்கத்தில் உயிருள்ள இன்னொரு நிலை போல நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களை இருள் சூழ்ந்தது. மணிகண்டனின் சிரிப்புச் சத்தம் மட்டும் காதுகளுக்குக் கேட்டது. அவளை யாரும் பார்க்கவில்லை. மணிகண்டனும் அவளை பார்க்க வாய்ப்பில்லை. விளக்கம் எதுவும் கேட்க அவள் தயாராக இல்லை. விளக்கத்தைக் கேட்டு வெடித்துப் போவதற்கு வேறு இதயம் இல்லை மலரிடம். இருந்த ஒன்றும் சற்று முன்பு நொருங்கிப் போனதால். பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். திருவிழா முடிந்ததைப் போல் இருந்த காட்சிகள், இப்போது சவத்தின் இறுதி ஊர்வலம் முடிந்த காட்சிகள் போல் தெரிந்தது. வாழ்க்கையில் நியாயம் அநியாயம் பார்த்து எதுவும் நடப்பதில்லை என்று தனக்குள் மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொண்டாள்.