“ம்மா ! வலிக்குது.. ம்மா.. முடியல மா” அடிவயிற்றில் உள்ளுக்குள் ஏதோ ஒன்று சுளீரென இழுப்பது போல் ஏற்பட்ட வலியில் கட்டிலில் புரண்ட கீதாவிற்கு அதன் காரணம் புரிந்தும் கட்டிலைவிட்டு எழக்கூட முடியவில்லை.
சிறிது அசைந்தாலே வலி அதிகமாகிய போதும் வேறு வழியின்றி எழ முற்பட்டாள். எழுந்து கட்டிலைவிட்டு காலை தரையில் வைக்க, அவளின் பாதம் தரை தொடும்முன் அவளை தூக்கியிருந்தான் கார்த்திக்.
“ஏன்டி! நான் பக்கத்துல தான இருக்கேன் எழுப்ப வேண்டிதுதான? என்னடா முனங்கல் கேட்குதேனு பதறிட்டேன்டி” என்றபடியே அவளை கழிவறைக்குள் இறக்கிவிட்டவன், மீண்டும் அறைக்கு வந்து அவளுக்கு தேவையான உடைகள் மற்றும் நேப்கினை எடுத்துச்சென்று கொடுத்தான்.
“எப்பவும் போல பச்ச தண்ணில குளிக்காதடி, அஞ்சே நிமிஷம் சுடுதண்ணி போட்டுட்டு வரேன்”
சொன்னது போலவே ஐந்து நிமிடங்களில் மிதமான சூட்டுடன் போதுமான நீரை கொண்டு வந்து கொடுத்தவன் அவள் நிற்க முடியாமல் நிற்பதைக் கண்டு, “ஆனாலும் இந்த சம்பிரதாய குளியல் குளிச்சே ஆகணுமாடி?” என நொடித்துக்கொண்டான்.
“இல்ல மாமா! அம்மா எப்பவும் நம்ப பார்த்தவுடனே குளிச்சிடணும் சொல்லுவாங்க அதுமட்டுமில்லாம..” என அவள் வலியுடனே மேலே பேசப்போக,
“அதோட குளிச்சா கொஞ்சம் புத்துணர்ச்சியா இருக்கும் அதான.. சம்பிரதாயமாம் சம்பிரதாயம்.. வலியோட கதாகாலட்சேபம் செய்யுறா பாரு.. போடி போய்ட்டு சட்டுனு வா” என செல்லமாய் அலுத்தபடியே சென்றான்.
அவளும் அவன் நொடித்ததற்கு ஏற்பவே சம்பிரதாயத்திற்கு இரண்டு சொம்பு நீரைக் கொண்டு குளித்துவிட்டு வந்தவள் அப்படியே கட்டிலில் குப்புறப்படுத்துவிட ,
“அடியே! அப்படி மொத்தமா வயித்தை அழுத்திட்டு படுக்காதடி..” என அவசரமாய் அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டவன் , அவள் குளிப்பதற்குள் தான் தயாரித்து வைத்திருந்த கருப்பு திராட்சை பழரசத்தை அவளுக்கு அருந்தக் கொடுத்தான்.
“ப்ச்!! எனக்கு இந்த திராட்சையே பிடிக்காதுங்க” என முகம் சுருக்கியவளின் மூக்குடன் தன் மூக்கை உரசியவன், “என் தங்கபட்டுல! குடிச்சா தெம்பா இருக்கும்டி.. இதோட இன்னிக்கி நீ எப்போ சாப்பிடுவியோ? அதனால இப்போ கொஞ்சமா குடி” என அவனே அவளை தோள் சாய்த்து அவள் குடிப்பதற்கு ஏதுவாய் மெதுமெதுவாய் பழரசத்தை புகட்டினான்.
கண்களை மூடியபடியே அவன் தோள் சாய்ந்து குடித்தவள் அவனின் கரத்தை இறுக்கமாய் பற்றி வயிற்றில் வைத்து படுத்துவிட்டவள், சற்றுநேரத்தில் தூங்கியும் விட்டாள்.
சிறிதுநேரத்தில் எங்கோ மணியடிக்கும் ஓசை கேட்க, “ப்ச்! பாவா.. யாருனு பாருங்க” என தூக்கத்துடனே முனங்கியவள், மீண்டும் மீண்டும் மணியோசை கேட்டதில் கண்களை கடினப்பட்டுத் திறந்தாள்.
இன்னும் மணியோசை நிற்காமல் தொடர , அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது அடிப்பது வீட்டின் அழைப்பு மணியோசை அல்ல கைபேசியின் அழைப்போசை என்று.
இன்னும் தெளியாத தூக்கத்துடன் அலைபேசியில் வந்த காணொலி அழைப்பை ஏற்றவள் அதில் தெரிந்த முகம் கண்டு திடுக்கிட்டு கண்களை கசக்கினாள்.
மீண்டும் திரையில் அதே முகமே தெரிய சுற்றும்முற்றும் தன் அறையைப் பார்த்தவள் குனிந்து தன்னையே பார்க்க, அவள் அப்பொழுது நேற்றிரவு படுக்கைக்கு வருகையில் உடுத்தியிருந்த அதே ஆடையுடன் தான் இருந்தாள்.
‘அப்படி என்றால் இவர் வந்தது என்னை தூக்கியது பரிவாய் நடந்தது அனைத்தும் கனவா?’ என எண்ணும் வேளையிலே அவளுக்கு அடிவயிறு சுளீரென இருக்க, அவளின் முகமும் வலியில் சுளித்தது.
“கீது! என்னடி ஆச்சு? முகம் ஏன் இப்படி இருக்கு? இன்னும் பத்து நாள் தான் கண்ணம்மா! சீக்கிரமே நான் உன்கிட்ட வந்துருவேன்டி.. ஐ மிஸ் யூடி” என்றான் அவளின் காதல் கணவன். கடந்த மாதம் தான் அலுவல் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்தான்.
அவனின் பேச்சு இத்தனை நேரம் தான் கண்டது கனவு தான் என மீண்டுமொரு முறை ஊர்ஜிதப்படுத்த அவளின் கண்கள் கரித்தது.
“கீது! என்னம்மா?”
“பாவா.. ஐ நீட் யூ” என தளுதளுப்பாய் உரைத்தவளுக்கு மீண்டும் வயிறு வலிக்க தன் நிலையுணர்ந்து தள்ளாடியபடியே எழுந்தவள், “கொஞ்ச நேரம் இருங்க.. நான் குளிச்சிட்டு வந்துட்ரேன்” என்றபடி அழைப்பைத் துண்டித்தாள்.
அவளின் நிலையை ஒரே நிமிடத்தில் உணர்ந்த கார்த்திக் அடுத்தடுத்து இரண்டு மூன்று நபர்களுக்கு அழைத்தவன், தான் எண்ணியதை சொல்லி முடித்து அழைப்பைத் துண்டித்தான்.
இங்கு தள்ளாடியபடி கழிவறைக்குள் நுழைந்த கீதாவிற்கு நிற்க முடியாமல் கால்கள் துவள, தட்டுத்தடுமாறியே பச்சை தண்ணீரில் குளித்து முடித்தவள் வெளியில் வந்தவுடனே கட்டிலில் சாய்ந்துவிட்டாள்.
அந்நேரம், “அம்மாடி கீதா! வேலைக்கு நேரமாகுதேமா எழுந்திருக்கலையா?” என கதவைத் தட்டினார் அவளின் மாமியார் கோசலை.
அவருக்கு பதில் சொல்வதற்குக் கூட வாயை திறக்க முடியாதபடி வலி அவளின் ஒவ்வொரு அணுவிலும் தெரித்தது. அவருமே அவளின் பதிலுக்காக காத்திருக்கவில்லை போலும்,” அம்மாடி மீனா! எப்பவும் இந்த நேரத்துக்கு சின்னவன் அவன் பொண்டாட்டிக்கு போன் பண்ணிருவானே.. இவளும் பேசிட்டே சமைப்பா இன்னிக்கு என்னாச்சி?” என வெளியில் அவர் மூத்த மருமகளிடம் கேட்பது இவளுக்கு உள்ளே கேட்டது.
இனியும் தான் உள்ளேயே அமர்ந்திருந்தால் சரியாய் வராது என நினைத்தவள், கைபேசியை எடுத்து சிறிது நேரத்தில் அழைப்பதாய் கணவனுக்கு செய்தி அனுப்பிவிட்டு வெளியில் வந்தாள்.
அவளைப் பார்த்த கோசலை “வாடி ம்மா!” என அழைத்தவர் அவள் தலையில் துண்டை கட்டியிருப்பதைக் கண்டு, “என்ன தலைக்கு ஊத்திட்டிருக்க? ஏன்டிம்மா இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படி குளிச்சுட்டே இருக்கபோறதா உத்தேசம்? மீனாலாம் மூணா மாசத்துலயே முழுகாம இருந்தா நீ என்னனா மாசம் மாசம் குளிச்சிட்டே இருக்க. இதுல எதோ நோய் புடிச்சாப்ல படுத்தே இருக்கிறது வேற” என படபடத்த கோசலை கணவர் வரும் அரவம் கேட்டதில் கப்பென வாயை மூடிக்கொண்டார்.
அவர் பேசியதை பொருட்படுத்தாத கீதா இப்பொழுதே வயிற்றில் ஏதாவது போட்டால் தான் உண்டு என்பதால் சமையலறைக்குள் நுழையப் போக,
“நீ எங்க அங்க போற? போ.. போய் உன் ரூம்லயே இரு.. காய்லாம் மீனா கொண்டு வந்து தருவா நறுக்கி கொடு.. அப்றம் மொத்தமா எல்லார் துணியும் உங்க ரூம்லயே துவைச்சிடு இனி மூணு நாளைக்கு துணியெல்லாம் நீயே துவை அவ சமையல பாக்கனும்ல? நீ மூணு நாளப்றம் சமையகட்டுக்கு வரலாம்” என்ற கோசலை மூத்த மருமகளிடம்,
“அம்மாடி மீனா! நீ மதியதுக்கு நாலு பேருக்கு மட்டும் அரிசி போடு அவ இன்னிக்கு முழுக்க ஒன்னுத்தையும் தொடமாட்டா” என்றதில் என்ன செய்வது என தெரியாமல் முழித்த கீதா அமைதியாய் தன் அறை திரும்பினாள். தன் அறைக்குள் சத்தமில்லாமல் கண்ணீர் சிந்தியவளின் சிந்தை முழுக்க தன் கணவனிடமே.
பெற்றவர் இல்லாமல் மாமனின் ஆதரவில் வளர்ந்த கீதாவை பெற்றோரின் ஏற்பாட்டில் மூன்று வருடங்கள் முன் மணந்திருந்தான் கார்த்திக். பெற்றோர் பார்த்து செய்த திருமணம் என்ற போதும் பரிவாய் அவளை தாங்குபவனின் காதலில் ஆசையுடனே திளைத்திருந்தவளுக்கு இம்மூன்று வருடங்களில் குறை என்று ஒன்று உண்டென்றால் அது குழந்தை இல்லாதது மட்டும் தான்.
மற்றபடி அவளுக்கு பெருங்கவலையாய் இருக்கும் மாதவிடாய் வலியில் கூட அவளவனே அவளின் அருகே இருந்து பக்குவமாய் அவளைப் பார்த்துக்கொள்வான். இம்மூன்று வருடங்களாய் அம்மூன்று நாட்களில் ஒரு சேயாய் அவளை தாங்குபவனின் காதலில் உருகிக் கொண்டிருந்தவளுக்கு முதல் முறையாய் தன்னவனின் பிரிவு உயிரை உருக்கியது என்றால், அவனின் உடனிருப்பில்லா மாதவிடாய் அவளை தவிக்கச் செய்தது.
ஒவ்வொரு மாதமும் பிள்ளை இல்லை என வசைபாடும் அன்னையின் பேச்சுகள் எல்லாம் அவளின் செவியை எட்டிவிடாமல் தூணாய் தடுத்திருந்தவனின் இன்றைய இல்லாதிருப்பு கோசலையின் வாய்க்கு கீதாவை பலியாக்கிவிட்டது.
ஒரு வாய் நீர் அருந்தக்கூட சமையலறைக்கு செல்ல வேண்டிய நிலையில், மூன்று நாட்களுக்கு சமையலறைக்குள் நுழையக் கூடாது என்றால் அவள் என்ன செய்வாள்? உடல், சோர்விலும் கோசலையின் பேச்சிலும் கணவனுக்கு அழைக்கக்கூட முடியாமல் அமர்ந்திருந்தவளுக்கு அழுகை மட்டுமே துணையாய்.
இவள் அழுகையுடன் வெளியில் நடந்த செயல்களின் அரவங்களைக் கூட கவனிக்காமல் படுத்திருக்க, சற்று நேரத்தில் இவளின் அறைக்கதவு தட்டப்பட்டது.
‘யாரு? அத்தை தான் மூணு நாளைக்கு நம்ப ரூம் பக்கமே வரமாட்டாங்களே’ என சிந்தனை ஓடியபோதும், எழ முடியாதபோதும் கதவைத் திறக்காமல் இருந்தால் இன்னும் பேச்சு வாங்க வேண்டுமென எழுந்துசென்று திறந்தாள்.
அவள் நினைத்தபடி அங்கு நின்றிருந்தது கோசலை அல்ல மீனா தான். அவளைப் பார்த்தவுடன் கோசலை செய்யச் சொல்லிய வேலைகள் நினைவிற்கு வர கீதாவிற்கு ‘அய்யோ’ என்றானது.
ஆனால் மீனாவோ, “மாமா உன்ன கூப்புட்றாங்க கீதா” என்றவள், அவளைத் தாண்டி அறைக்குள் சென்று இரு நைட்டிகளையும் இன்ன பிற தேவையான உடைகளையும், சில பொருட்களையும் ஒரு கவரில் கட்ட அதை புரியாமல் பார்த்தபடியே கூடத்தில் இருந்த மாமனாரிடம் வந்தாள்.
இவளை பார்த்தவர், “அம்மாடி! இத்தனைநாள் நான் இத கவனிக்காம விட்டதுக்கு மன்னிச்சுடுடா” என்றவர்,
“கோசலை.. கோசலை!” என சத்தமாய் மனைவியை அழைத்தார்.
கணவரின் குரலில் கோசலை அங்கு வர, “ஏன் கோசலை! இது எந்த மாசம்னு உனக்கு தெரியாதா? பெருமாள கும்புட்றப்போ எப்படி மருமகளை இந்த நிலமையில வீட்ல இருக்க சொல்றது? போ.. அந்த புள்ளைய கொல்லையில இருக்க அறையில் தங்கிக்க சொல்லு.. எல்லாம் முடியுறவரைக்கு அங்கேயே தங்கிக்கட்டும்.. அப்றம் இனி மாசம்மாசம் அங்கயே இருக்கட்டும். மீனா புள்ளையையும் தான் சொல்றேன். தீட்டாகிட கூடாதுல” என ஆணையிடும் குரலில் சொல்லியவரின் பேச்சில் மண்டையை மண்டையை ஆட்டிய கோசலை,
“மீனா! மீனா!இவளுக்கு தேவையானதெல்லாம் கொடுத்து கொல்லயில இருக்கு ரூம்ல விட்டுட்டு வா” என பெரிய மருமகளுக்கு குரல் கொடுக்க,
அவளும் அப்பொழுது தான் கேட்டதை போல்,”உங்க குரல் கேட்டவுடனே அதான் அத்த பண்ணேன்.. வா கீதா போலாம்” என தன் கரங்களை பிடித்த மீனாவை வியப்பாய் பார்த்தாள் கீதா.
மீனா, கோசலை சொல்லும் முன்னே அதற்கு தயாராய் இருந்ததை அவள் தான் பார்த்தாளே! என்ன நடக்கிறது? என புரியாமலே கொல்லையில் இருந்த அறைக்குள் நுழைந்தவள் அங்கு அழகாய் விரித்திருந்த படுக்கையில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
அந்நேரம் அவ்வறை வாசல் அருகில் வந்த மீனாவின் கணவன் ராஜ், “கீதாமா! கெஸ்ட் ரூம்ல இருந்த பெட்டை இப்போ கொஞ்சமுன்ன தான் கொண்டு வந்து போட்டேன். எதாவது வேணும்னா உங்க அண்ணிக்கிட்ட சொல்லு சரியா..” என பரிவாய் சொன்னவன் மனைவியிடம் தன் கைகளில் இருந்த பைகளை எல்லாம் கொடுத்து,
“பார்த்துக்க மீனா! கீதாக்கு தனியா இருக்க தான் பிடிக்கும்னு தம்பி சொன்னான் அதனால நீ அப்பப்போ அவளுக்கு என்ன வேணும்னு மட்டும் பார்த்துக்க.. இங்கயே இருக்காத.. இதுல தம்பி சொன்ன எல்லாமே இருக்கு” என்றபடி மனைவியை பார்த்தவனின் கண்களில் என்றையும்விட இன்று அதிகமாய் ஓர் அலசல்.
அதற்கான காரணம் தன் கொலுந்தன் என புரிந்த மீனா தன் கணவன் கொடுத்த பைகளை சிரித்தபடி கீதாவிடம் கொடுக்க, அவளோ கேள்வியாய் பார்த்திருந்தாள்.
“என்ன கீதா இப்படி பார்க்குற? இதுலாம் என்னனு தான?” என கண்சிமிட்டியவள் தன் கைகளில் இருந்த பைகளை கீழே வைத்து ஒவ்வொன்றாய் பிரித்தாள்.
ஒன்றில் கருப்பு திராட்சை பழரசம் ஒரு பெரிய தம்ளரிலும், அடுத்ததில் தின்பண்டங்கள் சிலவும் இருக்க கீதா அதை ஆச்சர்யமாய் பார்க்கும் பொழுதே கடைசியாய் இருந்த பெரிய பையை எடுத்தாள் மீனா.
மீனா எடுத்து வந்திருந்த கீதாவின் உடை பை அது. அதற்குள் இருந்த கைபேசி ஒலியெலுப்ப, எட்டி அதை எடுத்தாள். அழைப்பது கார்த்திக் என தெரிந்தவுடன் சிரித்தபடியே கீதாவிடம் தந்தவள், “ஒன்னும் புரியாம முழிச்சிட்டிருக்காம இதையெல்லாம் ஏற்பாடு பண்ணவர்கிட்டயே என்னனு கேட்டுக்கோடிமா.. எப்படியோ உன் புண்ணியத்துல இனி மாசம்மாசம் எனக்கும் மூணு நாள் ரெஸ்ட் தான்” என கண்சிமிட்டியபடி சென்றாள்.
நடப்பதெல்லாம் புரிந்தும் புரியாமலும் அழைப்பை ஏற்ற கீதா வலியில் மௌனமாகவே இருக்க அவளின் வார்த்தைகளே தேவையில்லை என்பதுபோல், “அடியே! இவ்வளவு நேரமாடி.. இப்போ தான் உன்னை தனியா விட்டாங்களா? இந்த அப்பாக்கு நான் எப்போ போன் போட்டேன் எவ்வளவு பொறுமையா பண்ணிருக்காரு பாரு? சரி சரி நீ முதல்ல அந்த ஜூசை எடுத்து குடிடி” என்றான்.
அவள் இன்னும் மௌனமாய் இருக்க அழைப்பைத் துண்டித்து காணொலி அழைப்பில் வந்தவன் படுத்திருந்தவளை பார்த்தபடி,”என் தங்கம்ல! என் பட்டுல குடிடி.. கொஞ்சம் தெளிவாக இருக்கும்”
அவனின் குரலில் தெரிந்த நேசமும், பரிவும் அவளுக்கு கண்கலங்க செய்ய கலங்கும் கண்கள் அவனை மறைத்துவிடாதவாறு வேகமாய் சிமிட்டியவள் அவனைப் பார்த்தபடியே சற்று நகர்ந்து அருகே இருந்த ஜூசை எடுத்து மெல்ல மெல்லப் பருகினாள்.
அவள் இப்படி படுத்துக்கொண்டே குடிப்பாள் என அவனுக்கு தான் தெரியுமே அதான் முன்பே மீனாவிடம் அனைத்தையும் அவள் கை எட்டும் தொலைவில் வைக்க சொல்லியிருந்தான்.
அவள் முழுதாய் அருந்திமுடிக்கும் வரை பார்த்திருந்தவன், “அவ்வளவுதான் தங்கம்! இப்போ நீ படுத்துக்கோ.. தூக்கம் வந்தா தூங்கு.. இல்லனா அங்க பக்கத்துல பிரிக்காம இருக்கு பாரு ஒரு பை அது ஃபுல்லா புக்ஸ் தான் தூக்கம் வராதப்போ அதைப் படி.. இந்த மூணு நாள் உனக்கு இது மட்டும் தான் வேலை. சாப்புடுறது, தூங்குறது, புக் படிக்குறது சரியா?” என்றவனிடம்,
“நீங்க தான் மாமாவ அப்படி பேச சொன்னீங்களா பாவா? எனக்காகவா? ஆனா நான் ஒருநிமிஷம் மாமா கூட இப்படியானு யோசிச்சிட்டேன்” தொலைதூரத்தில் இருந்தும் கிட்டிய கணவனின் கரிசனத்திலோ என்னவோ தற்பொழுது அவளுக்கு வலி கூட பெரியதாய் தெரியவில்லை.
“நான் தானானா? ஆமாடி நான் தான்.. காலையில உன் முகத்தை பார்த்தப்பவே எனக்கு தெரிஞ்சிடுச்சி உனக்கு வயிறு வலினு.. சும்மாவே அம்மா உன்ன பேசுவாங்க, இதுல நான் வேற இல்லனா முடியாதப்பவும், நாங்களாம் இத பார்க்காமையா வந்தோம்னு உன்னை போட்டு படுத்துவாங்க அதான் அப்பாவ அப்படி பேச சொன்னேன்.
அப்றம் உனக்காகவானு கேட்டனா.. ஆமா உனக்காக தான். நான் உன் பக்கத்தில் இருந்தாலும் இல்லனாலும் நீ எப்பவும் என்னுடையவ. உன் பாதுகாப்பும், நிம்மதியும் என்னோட பொறுப்பு. ஆனா இப்போ உனக்காக நான் செஞ்ச விஷயத்தால இனி அண்ணிக்கும் மாசத்துல மூணு நாளாவது ஓய்வு கிடைக்கும். யோசிச்சி பாரு எந்த வேலையும் இல்லாம பசிச்ச நேரம் சாப்பிட்டு, பிடிச்சதை செஞ்சிட்டு, அமைதியா பொழுதை கழிக்கிறதெல்லாம் நீயும் அண்ணியும் ஏன் உன்ன மாதிரி பொண்ணுங்க எல்லாரும் எப்போ அனுபவிச்சிருப்பீங்க சொல்லு?
எங்களுக்கான நேரத்தை கொடுங்கனு நீங்க கேட்டாலும் அது தப்பாதான் போகும், நான் உனக்காக அம்மாகிட்ட பேசினாலும் சண்டையில தான் முடியும்.. அதனால மூடநம்பிக்கையா தீட்டுன்ற ஒன்னு இருக்குறத நான் என் பொண்டாட்டிக்காக யூஸ் பண்ணிக்கலாமேனு தோணுச்சி அதான் அப்பாவ வச்சி இந்த ட்ராமாலாம்” என வசிகரமாய் சிரித்தவனின் சிரிப்பு அவளின் உதடுகளிலும் புன்னகையை தவழச் செய்தது.
அப்புன்னகை தனக்கே தனக்காய் ஓர் ஓய்வு அதுவும் தன்னவனின் நேசத்தின் பரிசாய்! என்ற நிம்மதியில் தோன்றிய புன்னகை. பெண்ணே பெண்ணின் வலியை சரியாய் புரிந்து கொள்ள இயலா இக்காலத்தில் இப்புன்னகையை உலகில் இருக்கும் அத்தனை பெண்களின் உதடுகளிலும் மலர செய்யும் பொறுப்பு உலகின் அத்தனை ஆண்களிடத்திலும் தான் உள்ளது.
ஆண்மை பெண்மையை பாதுகாக்க மட்டுமின்றி பெண்மையே பெண்மையை மதிக்கச் செய்யவும் தான்.
-நன்றி