பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை :
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, யூ-டியூப் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. 9, 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது பற்றி அரசு ஆலோசித்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டு, இதற்காக பெற்றோரிடம் கருத்துகளும் கேட்கப்பட்டன. கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒரு சாரார் திறக்கலாம் என்றும், மற்றொரு சாரார் திறக்க வேண்டாம் என்று கருத்துகள் தெரிவித்ததாலும், கல்வியாளர்கள் சிலர் எதிர்ப்பு கருத்துகள் கூறி வந்ததாலும் பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு ஒத்திவைத்தது.
கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தற்போது சற்று குறைந்திருக்கும் சூழ்நிலையில், பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து பெற்றோரிடம் மீண்டும் கருத்துகள் கேட்க அரசு திட்டமிட்டது. கடந்த 6, 7-ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோரை நேரில் வரவழைத்து கருத்துகள் கேட்கப்பட்டன.
Read more – யூடியூப் சேனல்களின் ஆபாச பேட்டிகளுக்கு கடும் நடவடிக்கை : காவல் துறை எச்சரிக்கை
அந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்காக பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கி இருக்கின்றன. மரத்துக்கு அடியில் வகுப்பறைகள் நடத்தவும் பள்ளிகள் திட்டமிட்டு வருகின்றன.
பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் :
பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும்.
தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.
வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.
ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்.
பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம்.
மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.