பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு நபர் சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி 5 வயது சிறுமியை அருகிலுள்ள கோழிப்பண்ணைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது வெளியில் தெரியவரவே, உள்ளூர்வாசிகள் சிலர் அந்த நபரை, கிராம சபை முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினர். ஆனால் அங்கிருந்த பெரியவர்கள் சிலர் அந்த நபர் மீதான குற்றச்சாட்டை கண்டுகொள்ளாமல், தாங்களாகவே ஒரு முடிவெடுத்தனர். அதாவது சிறுமியை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்றது தவறு என கூறி அந்த நபரை 5 தோப்புக்கரணம் போடுமாறு தீர்ப்பளித்திருக்கின்றனர். அந்த நபரும் அவ்வாறே தோப்புக்கரணம் போட்டிருக்கின்றார்.
பின்னர் அங்கிருந்தவர்களில் யாரோ இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் பரவலாக வெளிச்சத்துக்கு வர, இதனை `கிராமப்புற இந்தியாவில் ஆணாதிக்கம்’ எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். தண்டனை வீடியோ வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
சிலர், முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரைக் குறிப்பிட்டு இந்த குற்றம் தண்டிக்கப்படாமல் இருக்க மாநில அரசு அனுமதிக்கப்போகிறதா எனவும் கூறிவருகின்றனர்.
பின்னர் இதுகுறித்து பேசிய போலீஸ் இன்ஸ்பெக்ட் கவுரவ் மங்லா, “இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை மறைக்க முயன்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.