உத்தரகாண்டில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்து இருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால், பனி உருகி பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உத்தரகாண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள தேசிய அனல்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால், தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் எனத் தெரிகிறது.
இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் வரை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்களும் டேராடூன் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமம் அருகே சென்று நிலைமையை கண்காணித்து வருகிறார். இதேபோன்று இந்தோ-திபெத் எல்லை போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை 9 உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன