5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால், அவர்களுக்கென்று தனி இருக்கையோ, படுக்கையோ வழங்கப்படமாட்டாது. குழந்தைகளுக்கு தனி இருக்கை மற்றும் படுக்கை தேவையெனில், பெரியவர்களை போன்று முழு கட்டணமும் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தற்போதுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரயிலில் பயணம் செய்ய குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து ரயில்வே அமைச்சகம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், “5 வயதிற்குட்ப குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று பரவும் செய்தி பொய்யானது. அதை யாரும் நம்ப வேண்டாம். ரெயில்வேயில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, 5வயதிற்குட்பட்ட குழந்தைகள் ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களுக்கு தனி படுக்கை வசதியோ, இருக்கையோ தேவையெனில் டிக்கெட் பெற வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளது.