பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் அமைந்துள்ளது. அங்கு ரிஷிகேஷைச் சேர்ந்த மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். பாதிக்கப்பட்ட அந்த மாணவர் தனியார் விடுதி ஒன்றில் தன்னுடன் பயிலும் சக மாணவர்களுடன் சேர்ந்து தங்கியுள்ளார்.
இந்நிலையில், தனது அறையில் தங்கியுள்ள சக மாணவன் ஒருவனுடன் சேர்ந்து கல்லூரி சீனியர் மாணவர்கள் இருவர் தன்னை ஆடையைக் கழற்றச் செய்து, நிர்வாணப்படுத்தி கட்டாயப்படுத்தி மது அருந்த செய்து ராகிங் கொடுமை செய்துள்ளனர். அந்த மாணவர் மது அருந்துவதை படம்பிடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர் ரூ.60,000 செலுத்தவில்லை என்றால், வீடியோவை ஆன்லைனில் வெளியிடப் போவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். அந்த மாணவனை கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர். இதையடுத்து, பிரேம் நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழக பதிவாளர் மணீஷ் மதன் தெரிவித்தார்.