மத்தியபிரதேசத்தில் கழிப்பறையை தானே முன்வந்து அமைச்சர் ஒருவர் சுத்தம் செய்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் நோய்த்தொற்று உறுதி செயகப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து, அங்கிருந்தவாறே வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக அமைச்சரவை கூட்டத்தை நடத்தியவர், கொரோனா தடுப்பு பணிகளை தடையின்றி மேற்கொள்ள வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், குவாலியரில் உள்ள நகராட்சி கமிஷனர் அலுவலகத்தில், அம்மாநில எரிசக்தி துறை அமைச்சர், பிரதியுமான் சிங் தோமர், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சில பெண் ஊழியர்கள், அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருப்பதாகவும், முறையாக பராமரிப்பது இல்லை என்றும் அமைச்சரிடம் புகார் கூறியுள்ளனர். தொடர்ந்து, கழிப்பறையை பார்வையிட்ட அமைச்சர் பிரதியுமான் சிங், அதை சுத்தம் செய்வதற்கான பொருட்களை தரும்படி, அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுள்ளார். திடீரென யாரும் எதிர்பாராத விதமாக,பொருட்களாக கொண்டு அமைச்சரே கழிப்பறையை சுத்தம் செய்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கழிப்பைறைகளை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தி சென்றுள்ளார். இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாஜகவிற்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.