மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் பங்கேற்ற விழாவில் ஆபாச படம் திரையிடப்பட்டதை அடுத்து, வீடியோ ஆப்ரேட்டரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசாம் மாநிலம் டெலி என்கிற பகுதியில் மெத்தனால் கலந்த எம் 15 ரக பெட்ரோல் தயாரிக்கும் திட்டத்தை மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் துவங்கி வைத்தார். அந்த நிகழ்வில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. சரஸ்வத், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் எஸ்.எம். வைத்தியா, மாநில அமைச்சர் சஞ்சோய் கிஷான் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
விழாவில் திட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்க திரையில் காணொலி ஒன்று ஒளிப்பரப்பட்டது. அதுதொடர்பான வீடியோ வெளியாவதற்கு முன்பு, திரையில் சில விநாடிகள் ஆபாசமான காட்சிகள் தோன்றின. இதனால் நிகழ்ச்சி அரங்கில் சலசலப்பு எழுந்தது.
உடனடியாக ஒளிப்பரப்பை வீடியோ ஆப்ரேட்டர் நிறுத்திவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் ஆபரேட்டரிடம் குற்றம் இருப்பது விசாரணையில் வெளிவந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.