தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் அண்மையில் நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து பஞ்சாப் சென்ற அவர் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தொடர்ச்சியாக அவரை மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் சந்தித்துப்பேசினார். இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லி வந்த ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நியமித்தமாக சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்த நிலையில் இன்று காலை டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை குடியரசுத்தலைவர் மாளிகையில் மரியாதை நியமித்தமாக சந்தித்து பேசினார். பிரதமர் மற்றும் குடியரசு தலைவரை சந்தித்த நிலையில் தமிழக ஆளுநர் இன்று மாலை அல்லது நாளை காலை தமிழகம் திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.