இங்கிலாந்தில் குளிர்காலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 1.20 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அறிக்கை அளித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 45 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு கை கொடுக்காத நிலையில், பாதிப்பும் அதிகரித்து வருகிறது. அங்கு பல மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாஸ்க் அணிவது கட்டாயம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குளிர்காலம் நெருங்கி வருவதால் அதிகம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவி வந்த நிலையில், இங்கிலாந்து விஞ்ஞானிகளிடன் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வாலன்ஸ் கேட்டுக்கொண்டார். அதன்பேரில் விஞ்ஞானிகள் அறிக்கை அளித்துள்ளனர். அதில், “கொரோனா வைரஸ் குளிர்காலத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்த சமயத்தில் 25 ஆயிரம் பேர் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளது.
இந்த குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை ஏற்பட்டு இறப்பு விகிதம் பல மடங்கு அதிகரிக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியும். ” என்று கூறியுள்ளனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இப்போதே தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு யோசனை செய்து வருகிறது.
மேலும், விஞ்ஞானிகள் இது கணிப்பு மட்டும் இல்லை என்றும், நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.