திருப்பதியில் இன்று மேலும் 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால்,பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக திருப்பதி கோயில் மூடப்பட்டிருந்தது. 5 வது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் கடந்த மாதம் 8ம் தேதி திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு கொரோனா விதிமுறை முறையாக பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும், கோயலில் பணியாற்றும் அர்ச்சகர், வாத்தியக்காரர்கள், பாதுகாவலர்கள் என 80 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 14 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, வரும் பக்தர்கள் மற்றும் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைளை மாநில அரசு மற்றும் திருப்பதி தேவஸ்தானம் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் 60 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களை, பக்தர்களுக்கு தொடர்பில்லாத இடங்களில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வராக சுவாமி, ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளிட்ட இதர சன்னதிகளில் பூஜைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.