இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முக்கு தீட்டு கழித்ததாக கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திரவுபதி முர்மு 64% வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்கு செலுத்திய எம்எல்ஏக்களில் தமிழகத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் செலுத்திய வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. அந்த எம்எல்ஏ யார் என விவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நாட்டின் 15வது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில், திரவுபதி முர்முவுக்கு, பிராமணிய முறைப்படி சுத்தம் செய்யும் சடங்கு (தீட்டு கழிக்கும் நிகழ்வு) நடைபெற்றதாக கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சமஸ்கிருத மந்திரம் ஓதி அவர் தலையில் அட்சதைகளை போடுகின்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள், இதற்குமேல் ஒரு மனிதரை இழிவுபடுத்த முடியாது. நாம் இழிவுப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கும் இவர்களைதான் இந்த நாடு நம்பி இருக்கிறது என கண்டங்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
-பா.ஈ.பரசுராமன்.