முன் விரோதம் காரணமாக சென்னை எண்ணூரில் A+ கேட்டகிரி பிரபல ரவுடியை கொலை செய்த வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 23வது பிளாக்கை சேர்ந்த 32வயதுடைய உமர் பாஷா இந்திய தேசிய லீக் கட்சியின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருந்து வருகிறார். சென்னை அரும்பாக்கத்தில் பீரோ கம்பெனி வைத்து தொழில் செய்து வரும் உமர் பாஷா, எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சுபாஷினி என்ற பெண்ணுடன் கடந்த 3வருடமாக திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். மேலும், சென்னையை கலக்கிக் கொண்டிருக்கும் தாதாவான டி.பி சத்திரம் ராதா என்பவரின் வலது கரமாக செயல்பட்டு வந்த உமர்பாஷா மீது 10க்கும் மேற்பட்ட கொலை கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், உமர் பாஷா நேற்றிரவு பாரதியார் நகர் 5வது தெருவில் உள்ள மசூதியில் தொழுகை செய்துவிட்டு பின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வரும் போது மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடியது. இதில் மூளை சிதறி வெளியே வந்த நிலையில் நிலைகுலைந்து சரிந்த உமர்பாஷா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து, எண்ணூர் உதவி ஆணையர் பிரம்மானந்தம், எண்ணூர் காவல் ஆய்வாளர் கிளாஸ்டின் டேவிட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர் .இதில், மோப்ப நாய் டோனி வரவழைக்கப்பட்டு அது எண்ணூர் காவல் நிலையம் அருகே உள்ள பாரதியார் நகர் மெயின் ரோடு வரை சென்று நின்றுவிட்டது.
பின், எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த உமர்பாஷாவின் உடலை கைப்பற்றி, பிரேத சோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்குன்றம் துணை ஆணையர் முன் கொலையாளிகள், அமைந்த கரையை சேர்ந்த பிரபல ரவுடி சேது என்கிற மணிகண்டன் அரும்பாக்கத்தை சேர்ந்த பாரத் குமார், அஜித் குமார், ஏசாபிரவின், சூளைமேடட்டை சேர்ந்த திப்பு சுல்தான் வடபழனியைச் சேர்ந்த உதிந்திரன், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அவினாஷ் ஆகிய 7பேர் சரணடைந்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது கடந்த 2016 ஆம் ஆண்டு அமிஞ்சிக்கரையை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டனை உமர் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து 65 இடங்களில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி விட்டனர். பலத்த காயமடைந்த மணிகண்டன் தீவிர சிகிச்சை பிறகு உயிர் பிழைத்தார்.
இதனால் தன்னை வெட்டிய உமர் பாஷாவை தீர்த்து கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த மணிகண்டன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து உமர் பாஷாவை வெட்டி கொண்றதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து ஏழு பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.