கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் ஆகஸ்டு 18ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது கர்நாடக மாநிலம், ஷிவமோகா, அமீர் அகமது நகரில் உள்ள பள்ளிவாசலை ஒட்டிய மாலில் சாவர்க்கர் புகைப்பட பேனரை வைத்துள்ளனர். அதற்கு சில இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து திப்புசுல்தான் படத்தை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில், ராஜஸ்தானை சேர்ந்த பிரேம் சிங் என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டார். இதையடுத்து ஆகஸ்டு 18ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷிவமோகா மற்றும் பத்ராவதியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதம் தாங்கிய காவல்துறை அந்த பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.
மேலும், கத்தியால் குத்தப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் இருக்கிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, ஷிவமோகா பகுதி பதற்றமான பகுதியாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.