லக்கிம்பூர் வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தலாம் என்ற உச்சநீதிமன்ற யோசனைக்கு முடிவை கூற உ.பி அரசுக்கு திங்கட்கிழமை வரை கூடுதல் அவகாசம்.
டெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த 2 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி என்.வி ராமணாவுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த 8ம் தேதி இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது நாங்கள் எதிர்பார்த்தபடி இந்த வழக்கின் விசாரணை நடைபெறவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி தெரிவித்தது.
மேலும் இவ்விவகாரத்தில் ஆய்வக அறிக்கையை எங்கே ? எனவும் வழக்கு விசாரணை எதிர்பார்த்த திசையில் செல்லவில்லை எனவும் உத்தரபிரதேச அரசு மீது அதிருப்தி தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஒருவரது செல்போன் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றால் மற்றவர்களின் செல்போன்கள் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? எனவும் அந்த ஒரு நபரை தவிர பிறரிடம் செல்போன் இல்லையா? எனவும் சரமாரி கேள்விகளை முன் வைத்தனர்.
மேலும், இவ்வழக்கில் உத்தரபிரதேச அரசு சரியான திசையில் செல்லவில்லை என நாங்கள் கருதுகிறோம். எனவே, வன்முறை சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்தலாம்? என்ற யோசனை எழுகிறது எனவும் இதுதொடர்பாக உ.பி அரசு 12ம் தேதிக்குள் ( அதாவது இன்று ) பதிலளிக்க கால அவகாசம் வழங்கி இருந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்றையதினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, உத்தரபிரதேச அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணையை கண்காணிக்கலாமா? என உச்சநீதிமன்றம் தெரிவித்த யோசனை தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் இது தொடர்பான முடிவை கூற கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா உத்தர பிரதேச அரசுக்கு திங்கட்கிழமை வரை கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.