கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜார்கண்ட் மாநில அமைச்சர் ஹாஜி ஹுசைன் அன்சாரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு 73 வயதாகிறது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, இதுவரை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மக்கள் பிரதிநிதிகளை விட்டுவைக்கவில்லை. இதுவரை பலர் பாதிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சிலர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர்.
இதனிடையே ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த ஹாஜி ஹுசைன் அன்சாரிக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் கொரோனாவில் இருந்து மீண்டதாக கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அமைச்சரின் உடல்நிலை திடீரென கவலைக்கிடமானது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அமைச்சர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிர் இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த இவர், மாநில ஹஜ் கமிட்டி தலைவராகவும் இருந்தவர்.
ஜார்கண்ட்டின் மதுபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஹாஜி ஹுசைன் அன்சாரி தொடர்ந்து 4 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.