நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.பொதுமுடக்கம் காரணமாக தங்களது வாழ்வாதாரம் இழந்து சொல்லொணாத் துயரங்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசு நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்டணங்களை 10 மடங்கு முதல் 70 மடங்கு வரை உயர்த்தி மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகப்பிரிவினை, நில எல்லை தொடர்பான தகராறுகள், சட்டப்படி தேவையான ஆவணங்களைப் பெறுவதற்கு பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழக அரசின் இந்தச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான அபரிமிதமான கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.