சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை விமான நிலையத்துக்கு 2 வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.
இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழித்தட பாதை நீட்டிப்பு பணிகள் சுமார் ரூ.3 ஆயிரத்து 700 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
இந்த வழித்தடத்தில் தியாகராயர் கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஸ்ரமம், திருவொற்றியூர், விம்கோ நகர் உள்பட 8 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒருசில குறிப்பிட்ட ரெயில் நிலையங்களுக்கு பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு பெயரை தண்டையார்பேட்டை என்றும் அதேபோல், ஏற்கனவே உள்ள தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு புது வண்ணாரப்பேட்டை என்று தாங்கல் ரெயில் நிலையத்திற்கு காலடிபேட்டை என, கவுரி ஆஸ்ரமம் ரெயில் நிலையத்திற்கு திருவொற்றியூர் தேரடி என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முறையாக அரசும் அனுமதி அளித்து உள்ளது. அப்பகுதி மக்களுக்கு மிகவும் அறிமுகமான பகுதிகளாக இருப்பதற்காக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.