குடியாத்தம் அருகே சோதனை சாவடியில் ஒரு மூட்டை வெங்காயம் தரமறுத்த லாரி கிளீனரை தாக்கிய எஸ்ஐ அவர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி உத்தரவு.
ஆந்திர எல்லை, குடியாத்தம் அடுத்த சைனாகொண்டா சோதனைச்சாவடியில் நேற்று மதியம், தாலுகா காவல் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வெங்காயம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு குடியாத்தம் நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தினார்.
பின்னர், அவர், ஒரு மூட்டை வெங்காயத்தை கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறினாராம். ஆனால், லாரி டிரைவர் இஸ்மாயில், கிளீனர் பைரோஸ் தர மறுத்தனர். இதையடுத்து, எஸ்ஐ செல்வம், அவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, பைரோஸ் தட்டிக்கேட்டதால் எஸ்ஐ அவரை லத்தியால் தாக்கியுள்ளார். இதில் அவர் முகத்தில் ரத்தம் கொட்டியது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் கவனித்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, டிஎஸ்பி ஸ்ரீதரன் வந்து சமரசம் செய்து அனுப்பினார்.பின்னர், பைரோசை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவில், கிளீனரை தாக்கிய சிறப்பு எஸ்ஐ செல்வத்தை ஆயுதப்படைக்கு மாற்றி வேலூர் எஸ்பி செல்வக்குமார் உத்தரவிட்டுள்ளார்.