தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக பட்டா மேளா நடத்துவது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாவட்டந்தோறும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்வான பட்டா மேளாவை நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால் மாவட்டந்தோறும் இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நான்கு ஆண்டுகளாக, டெண்டர் காரியங்களில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டு இருந்த முதல்வர் பழனிசாமி, திடீரென்று தேர்தல் அறிவிப்புகளையும், தேர்தல் கால அடிக்கல் நாட்டு விழாக்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார். மாவட்டங்களில் எல்லாம் பட்டா வழங்கும் மேளா நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறாராம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், இது மாதிரி ஒரு கண்துடைப்பு மேளாவை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அப்படியாவது உண்மையான ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை கிடைக்கப் போகிறதா? லஞ்ச லாவண்யம் கோரத் தாண்டவம் ஆடும் தற்போதைய நிலையில், வீட்டு மனைப் பட்டா அவர்களுக்குக் கிடைக்குமா? அதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பது போலவே எனக்கு வரும் செய்திகள் உள்ளன என்றார் ஸ்டாலின்.
read more: எடப்பாடி பழனிசாமியை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி: ஜெயக்குமார் திட்டவட்டம்!
மேலும், அதிமுகவினர் கைகாட்டும் நபர்களுக்கு மட்டும் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் பட்டியல் தயாராகிறதாம். பெயர் இலவச வீட்டு மனைப் பட்டா. ஆனால் ஒவ்வொரு தாசில்தாரையும் அதிமுகவினர் மிரட்டி, கிராம அளவில் 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் என்று வசூல் செய்து கொண்டு, இது போன்ற இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான பயனாளிகள் தேர்வு நடைபெறுகிறது என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், ஆகவே ஆட்சேபணை இல்லாத நிலங்களில் குடியிருப்போருக்கும், ஏழைகளுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் அதிமுக அரசு நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.