கோர்ட் அவமதிப்பு வழக்கில் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை மறு ஆய்வு செய்யுமாறு விஜய் மல்லையா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அவரை நாடு கடத்த முயற்சி செய்து வருகிறார்கள். இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டால்ஜியோ நிறுவனம் மூலம் தன்னுடைய மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோருக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை மாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளி என கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்திருந்தார்கள்.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, விஜய் மல்லையா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அமர்வு விசாரித்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இன்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது