கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க் அணிவது அவசியம் என தெரிந்தும், பெண் ஒருவர், மாஸ்க் போல முகத்தில் பெயிண்ட் அடித்து கொண்டு இந்தோனேஷியாவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் சென்று ஏமாற்றி இருக்கிறார். இந்த வீடியோ வைரலாக பரவ, அவர்களது பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; நாடு கடத்தப்படும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல், அடிக்கடி கைகளை சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். மாஸ்க் அணியாமல் உங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவாகிவிட்டது. அப்படி ஏதேனும் துணிச்சல் காரியம் செய்தால், உங்களுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். அல்லது உயிர்க்கொல்லி கொரோனாவை வீட்டிற்குள் அழைத்து வந்து விடுவீர்கள். சிலர், பீதி ஏதும் இல்லாமல், சாலைகளில், கடைகளில் மாஸ்க் அணியாமல் இருப்பதையும் காண முடிகிறது.
இந்நிலையில், பாலியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குள் மாஸ்க் அணியாமல் சென்ற ஒரு பெண்ணின் பாஸ்போர்ட் பறிக்கப்பட்டிருக்கிறது. தகவல்களின்படி, இந்தோனேஷியாவிலுள்ள பாலி நகரில், சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குள், ஜோஷ் பலேர் லின் மற்றும் லியா சே ஆகிய இருவரும் நுழைகின்றனர். லியா மாஸ்க் அணியாமல் நுழையும் போது, பாதுகாவலர் தடுத்து மாஸ்க் அணிந்து வாருங்கள் என தெரிவிக்கிறார். பின் காருக்கு திரும்பி இந்த ஜோடிக்கு புதிய ஐடியா ஒன்று தோன்றியிருக்கிறது. இதன்படி, லியாவின் முகத்தில் மாஸக் அணிந்திருப்பது போன்ற பெயிண்ட்டை ஜோஷ் அடித்து விடுகிறார்.
பார்ப்பதற்கு மாஸ்க் அணிந்திருப்பது போல தத்ரூபமாக வரைந்த ஓவியத்துடன், மீண்டும் அவர்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகிறார்கள். லியா மாஸ்க் அணிந்திருப்பதாக எண்ணிய பாதுகாவலர் அவரை சூப்பர் மார்க்கெட்டிற்குள் அனுமதி அளிக்கிறார். பின் அவர்கள் ஹாயாக உள்ளே சுற்றி வந்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாகி, நெட்டிசன்களின் கோபத்தை தூண்டிவிட்டது. பலரும் இந்த பொறுப்பற்ற ஜோடியை கமெண்ட்ஸில் வறுத்தெடுத்தனர்.
இந்நிலையில், அவர்களது பாஸ்போர்ட்டை இந்தோனேஷிய அரசு பறிமுதல் செய்திருக்கிறது. விரைவில் அவர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. லியா ரஷ்யாவையும், ஜோஷ் தைவானையும் சேர்ந்தவர் என தெரிய வந்திருக்கிறது.