இத்தாலி நாட்டு உணவான பாஸ்தா இப்போது உலகமெங்கும் கிடைக்கிறது. பல்வேறு வடிவங்களில் கிடைப்பதால் குழந்தைகளும் இதை மகிழ்ந்து உண்கிறார்கள். 5-10 னிடத்தில் சாஸ் செய்து, வைத்திருக்கும் பாஸ்தாவைப் போட்டு கிளறி, இத்தாலி வகை வாசனைப் பொருட்கள் (மிக்ஸ் ஹெர்ப்ஸ் என்று கிடைக்கிறது) சேர்த்து தூவி பரிமாறினால் சூப்பர் உணவு வீட்டிலேயே ரெடி!
தேவையான பொருட்கள்:
- 1 1/4 கப் மைதா
- 1 கப் ரவை
- 1.2 ஸ்பூன் உப்பு
- 3/4 கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் எண்ணெய் (ஆலிவ் எண்ணெய் கிடைத்தால் நல்லது)
செய்முறை
- ரவை, மைதா மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பள்ளம் செய்து கொண்டு, அதில் தண்ணீரும் எண்ணையும் ஊற்றுங்கள்.
- இப்போது அனைத்தையும் நன்றாகச் சேர்த்து பிசையுங்கள். தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். 8-10 நிமிடம் வரை நன்றாகப் பிசையவும்.
- நன்றாகக் பிசைந்து ஒரு உருண்டை போல செய்து, கிளிங் ராப் கொண்டு அழுத்தி மூடி, குளிர்சாதனப் பெட்டியில் 1/2 மணி நேரம் வையுங்கள்.
- 1/2 மணி நேரத்திற்குப் பிறகு, அந்த மாவை எடுத்து இரண்டு பாகங்களாகப் பிரியுங்கள்.
- 1 பாகத்தை எடுத்து, சப்பாத்தி இடுவது போல் மெல்லிசாக உருட்டுங்கள். ஒட்டிக்கொள்ளாமல் இருக்க அவ்வப்போது மைதா மாவைத் தூவிக் கொள்ளுங்கள்.
- லேசாக ஒரு முனையிலிருந்து மறு முனை வரை உருட்டுங்கள். நல்ல கூரான கத்தி கொண்டு வெட்டுங்கள் (படத்தைப் பார்க்கவும்)
- மாவு தூவி, உங்கள் கைகளால் மெதுவாக சுருள்களைப் பிரித்து விடுங்கள்.
- இதே போல இன்னொரு பாகத்தையும் செய்து கொள்ளுங்கள்.
சமைக்க
- பெரிய பாத்திரத்தில் தாராளமாக தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு, கொதிக்க வையுங்கள்.
- நன்றாக கொதிக்கும்போது, செய்து வைத்த பாஸ்தாவைச் சேர்த்து, 3.4 நிமிடங்கள் வேகா வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- பிடித்தமான சாஸ் தயாரித்து, அதில் வெந்த பாஸ்தாவைப் போட்டு பரிமாறவும்
சாஸ்:
- சுலபமான ஒரு முறை இருக்கிறது. தக்காளி, தேவைக்கேற்ப சிவப்பு மிளகாய் இரண்டையும் நீரில் வேகவைத்து, தக்காளி தோல் நீக்கி, மிளகாயைச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, சிறிது பூண்டு, வெங்காயம் சேர்த்து சற்று வதக்கி, அரைத்த விழுது கலந்து தண்ணீர் விட்டு கொதிக்க வையுங்க.
- நன்றாக எல்லாம் வெந்தவுடன், உப்பு, மிக்ஸ் ஹெர்ப்ஸ் சேர்த்து தூவினால் சாஸ் தயார்.
வேறு வடிவம், நிறம்
வடிவங்கள்: வெவ்வேறு அச்சு/ முறுக்கு பிழியும் தட்டை உபயோகப்படுத்தி, பிடித்தமான வடிவத்தில் செய்து கொள்ளலாம்.
நிறம்: மாவு பிசையும் போது, தண்ணீர் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக அரைத்த பாலக் கீரையைச் சேர்த்து பிசைந்தால் பச்சை பாஸ்தா
அதே போல், பீட்ரூட் அரைத்து மாவு பிசைந்தால், சிகப்பு பாஸ்தா.
இதைச் செய்து கொடுத்து அசத்துங்கள்!