ஆன்லைன் கிளாஸில் பாட்டி… பட்டம் விடும் பேரன்- இந்த படம் தான் இணையத்தில் வைரல்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நம்முடன் ஒட்டி உறவாடி வரும் கொரனோவைப் பற்றிப் பேசாத நாட்களே இப்போது இல்லை. செய்தி சேனல்கள் பார்க்காதவர்கள் கூட கொரோனா அப்டேட்டில் ஒரு கண் வைக்கிறார்கள். மார்ச் மாத இறுதியிலிருந்து நாடு முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கு தொடங்கி நான்கு மாதங்களாயிற்று பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என உத்தேசமாகக் கூட ஒரு தேதியைத் தீர்மானிக்க முடியவில்லை. அந்தளவுக்கு கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆன்லைன் வகுப்புகள் குறித்து கல்வியாளர்கள் பல்வேறு பாதகங்களை விளக்குகிறார்கள். அதேநேரம் நீண்ட காலம் கற்றலை விட்டு விலகி இருந்தால் இடைநிற்றல் அதிகமாகும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் போகட்டும். ஆன்லைன் கிளாஸ் நடக்கும் வீடுகளில் நடக்கும் அலப்பறைகளே தனி. நேற்று, ஒரு குழந்தைக்கு ஹோம்வொர்க் கொடுத்ததைச் செய்ய வில்லை என்று அம்மா மிரட்டுவது, அதற்கு அக்குழந்தை அழுதுகொண்டே நாளை செய்துவிடுகிறேன் எனச் சொல்லும் வீடியோ வைரலானது.
இன்று ஒரு வீட்டில் பேரனுக்கான ஆன்லைன் கிளாஸில் பாட்டி கவனித்துக் குறிப்பு எடுக்கிறார். சரி, பேரன் எங்கே என்று கேட்கிறீர்களா? அவன் பெஞ்சின் மறுபுறம் குனிந்துகொண்டு விளையாடுகிறான் அல்லது தூங்குகிறான். இந்தப் படத்தைப் பலரும் பகிர்ந்தது கொண்டிருந்தார்கள்.
இந்த போட்டோ ஓர் ஓவியரின் கண்களில் பட்டிருக்கிறது. அந்தப் பேரன் என்ன செய்திருப்பான் என யோசித்திருக்கார் அல்லது என்ன செய்ய வேண்டும் என அந்தப் பேரன் ஆசைப்பட்டிருப்பான் என ஓவியர் சிந்திருக்கிறார். அதன் விளைவு ரொம்ப கிரியேட்டிவிட்டியான ஓர் ஓவியத்தை வரைந்திருக்கிறார். இப்போது வரை அந்த ஓவியர் யார் என்று தெரியவில்லை. ஆனால், அந்த ஓவியம் ஃபேஸ்புக், டிவிட்டர் இரண்டில் செம வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி டெபுடி கமிஷனர் அர்ஜூன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த போட்டோவையும் ஓவியத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
’ஆன்லைன் வகுப்புகள் படிக்கும் குட்டி குழந்தைகளின் கல்வி உலகவும் கனவு உலகமும் வேறு வேறாக இருப்பதை குறித்து உண்மையை விளக்கும் இந்தப் புகைப்படத்தை எடுத்தவருக்கும் வரைந்தவருக்கும் பாராட்டுகள்’ என்று புகழ்ந்துள்ளார்.
ஆம் குழந்தைகளின் உலகம் எப்போதும் வேறொன்றானதாகவே இருக்கிறது.