நமக்குத் தெரிந்த நண்பரோ அல்லது உறவினரோ யாராவது வெளிநாட்டில் இருந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துக் கொண்டு போட்டோஸ் போடுவதைப் பார்த்தால் நம் மனதில்,“கொடுத்து வச்சவம்பா அவன்.. எப்படி லைஃப்ப என்ஜாய் பண்றான்னு பாரு” அப்படினு தோணும்..
இப்படி வெளிநாட்டில் வாழ்பவர்களைப் பார்த்து நாம் பலமுறை பொறாமைப் பட்டிருப்போம்.. ஆனால் நாம் நினைப்பதுபோல் வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இனிமையானதாக இருக்குமா?? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. நாம் பார்க்கும் காட்சி வேறு, அங்கு நடந்து கொண்டிருக்கும் காட்சி வேறு என்பதே உண்மை.. எப்படி? என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்..
வெளிநாட்டை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் யாரும் வெளிநாடு செல்வதில்லை.. தன் குடும்பச் சுமையைத் தான் ஒரு ஆளாக தனியே சுமந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில்தான் வேறு வழியில்லாமல் தன் தாய்நாட்டை விட்டு செல்ல மனமில்லாமல் வேறுநாட்டிற்கு செல்கிறார்கள் பெரும்பாலோனோர்கள்..
வெளிநாடு வாழ் மக்கள் ஒவ்வொருவரின் பின்னும் ஒவ்வொரு கதை இருக்கும்..”தன் தங்கைக்கு சீர் செய்து கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமே அதற்குப் பணம் திரட்ட வேண்டுமே! “ என்ற நோக்கத்தில் வெளிநாடு செல்பவர்களும், “தன் பெற்றோரின் பொருளாதார சூழ்நிலை குறைவாக உள்ளதே, தம்பியைப் படிக்க வைக்க முடியவில்லையே ! சரி நாமாவது வெளிநாடு சென்று உழைத்துத் தன் தம்பியைப் படிக்க வைப்போம்!”என்று தன் தம்பியைப் படிக்க வைக்கவும், எனத் தன் தம்பி,தங்கைகளைக் கரையேற்றுவதற்காக வெளிநாடு செல்பவர்களே அதிகம்.. வெளிநாட்டில் இருக்கும் அவன் ஒருவனை நம்பிதான் அவன் மொத்தக் குடும்பமுமே இருக்கும்..
அதனால் தன் குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்கி குடும்பத்தை முன்னேற்ற வேண்டுமென்பதை மனதில் கொண்டு தான் உழைத்த பணம் ஒவ்வொன்றையும் தனக்காக செலவிடாமல் தன் குடும்பத்திற்காக, குடும்பத்திற்காக என்று அனுப்பிவிட்டு தனக்கென எந்த ஒரு பொருளையும் வாங்கிக் கொள்ளாமல் ஒரு தியாகியைப் போல் தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் பெரும்பாலான வெளிநாட்டுவாழ் இந்தியமக்கள்..
அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருப்பதால் வேலைவாய்ப்புக்கள் குறைவாக இருக்கும் சூழ்நிலையில் , பெரும்பாலான இளைஞர்கள் இங்கே வேலை கிடைக்காத நிலையில், வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் தன் குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நோய்வாய்ப்பட்ட தன் பெற்றோர்களின் உடல்நிலையை கவனித்துக்கொள்ள போதுமான அளவு பணவசதி இல்லாததாலும் தான் வெளிநாடு நோக்கிச் செல்லும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
இப்படித் தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுத் தன் குடும்ப பாரத்தைத் தன் தோளில் சுமப்பதற்காக வெளிநாடு செல்கிறவர்களே அதிகம் என்பதே நிதர்சனமான உண்மை!
“திரைகடலோடியும் திரவியம் தேடு!”
என்று சொல்லுவதைப் போல் இப்படிக் கடல் தாண்டிச் சென்று உழைத்துத் தன் குடும்பத்தை முன்னேற்றப் போராடும் ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியர்களும் மதிப்பிற்குரியவர்களே! இங்கிருந்து பார்ப்பதற்கு அவர்கள் பயங்கரமாக வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது போல் தெரிந்தாலும்,அவர்கள் மனதிலும் பல சொல்ல முடியாத போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கத்தான் செய்யும்..!