சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வரும் 14ஆம் தேதி அதிமுக அமைச்சர்கள், பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்துவிட்டது. மேலும், தேர்தலுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தலுக்காக 5 குழுக்களை அமைத்துள்ளனர். தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தோ்தல் பிரசாரக் குழு, செய்தியாளா்களை சந்திக்கும் குழு, எதிா்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் குழு ஆகியவற்றுக்கு முன்னணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அத்துடன், இரண்டு அல்லது மூன்று மாவட்டங்கள் ஒரு நிர்வாகிக்கு என மண்டலப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக டிசம்பர் 14ஆம் தேதி மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 20இல் நடைபெற்ற கூட்டத்தில் பேரவைத் தேர்தல் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளின்படி மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் இருவரும் அறிவுறுத்தியுள்ளனர். திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தற்போதே துவங்கிவிட்ட நிலையில், அதிமுக தரப்பில் பிரச்சாரம் தொடங்குவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.