உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக தரப்பு புகார் செய்துள்ளது.
திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளையில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மறுத்த காவல் துறை அவரை கைது செய்தது. அடுத்தடுத்த நாட்களிலும் குத்தாலம் உள்ளிட்ட இடங்களில் இதே கைது சம்பவம் தொடர்ந்தது.
இதன்பின்னர் அரங்கக் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களை சந்தித்து வந்தார் உதயநிதி. தமிழக அரசு திறந்தவெளி கூட்டத்திற்கு அனுமதி கொடுத்ததால், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி, அதிமுக அரசையும் முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அத்துடன், இந்த ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்று பேசி வருகிறார்.
இந்த நிலையில் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல், உதயநிதிக்கு எதிராக டிஜிபியிடம் புகார் ஒன்றை அளித்தார்.
உதயநிதி ஸ்டாலின் பொது இடத்தில் வரம்பு மீறிய கடும் சொற்களால் தமிழக முதல்வரையும் அதிமுக அரசையும் மிரட்டும் தொனியில் அச்சுறுத்தியதாகவும், இது முதல்வரைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் நோக்கிலும், பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் உள்ளதெனவும் தனது புகாரில் தெரிவித்தார்.
read more: பெண்களுக்கு அமைச்சரவையில் 50 சதவிகித பங்கு: கமல்ஹாசன்
மேலும், சட்டம் – ஒழுங்கு காவல் இயக்குநருக்கு சவால் விடும் வகையில், இன்னும் ஆறு மாதங்கள்தான் இருக்கிறது. அடுத்து நாங்கள்தான் எனக் கூறி காவல் அதிகாரிகளின் பெயரைச் சொல்லியே மிரட்டல் விடுப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டினார். காவல் அதிகாரிகளை சுதந்திரமாகப் பணி செய்ய விடாத, பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாகப் பேசும் உதயநிதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனவும் பாபு முருகவேல் வலியுறுத்தியுள்ளார்.