பீகார் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகி வருகின்றன.பிற்பகல் 3 மணி நிலவரப்படி 131 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தேஜஸ்வியின் மெகா கூட்டணி 102 இடங்களில் முன்னணியில் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மட்டும் தனிப்பெரும் கட்சியாக 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஹிந்தி பேசும் மாநிலங்களில் பீஹாரில் மட்டும் தனிப்பெரும் கட்சியாக இல்லாமல் இருந்த பா.ஜ., இன்றைக்கு நிதிஷ் கட்சியை காட்டிலும் கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்று முதல் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
பீகார் மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை தாண்டி பாஜக கூட்டணி முன்னணியில் உள்ளது.
பெருமொன்மைக்கு தேவையான பாதிக்கும் மேலான பலத்தை பாஜக பெற்று இருப்பதால், முதலமைச்சர் பதவியையும் பிடிக்க பாஜக ஆர்வம் காட்டும் எனக் கூறப்படுகிறது. இதனால் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவி கிட்டுமா அல்லது அவரே விட்டு கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, மாநில அரசியலில் இருந்து ஒரங்கட்டப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
பீகாரில் பா.ஜ.க., கூட்டணியின் முகமாக நிதிஷ் உள்ள நிலையில், அவரது ஐக்கிய ஜனதா தளத்தை காட்டிலும் பாஜக 29 இடங்களில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த தேர்தலின் போது மோடியை நிராகரித்து எதிர்கட்சியான லாலுவுடன் கூட்டணி வைத்தார் நிதிஷ். பின்னர் லாலு மகன் மீது ஊழல் குற்றம் சுமத்தி மீண்டும் மோடியை ஏற்றுக்கொண்டு பா.ஜ., கூட்டணியில் இணைந்தார். தற்போது, பாஜகவின் வளர்ச்சி காரணமாக தனது முதலமைச்சர் பதவியையே இழக்கும் நிலைக்கு நிதிஷ்குமார் தள்ளப்பட்டுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.