எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் அளிப்பதில் உள்ள சிக்கல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கினார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இரண்டு வருடங்கள் ஆன போதிலும் இதுவரை கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்கவில்லை.
இதுதொடர்பாக தென்காசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இன்னும் இடம் தரவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், உடனடியாக நிலத்தை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
read more: துரைமுருகனுக்கு மருத்துவமனையில் பரிசோதனை!
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநில அரசு நிலம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்களே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு முதல்வர், “அதில் சில வகை மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. விரைந்து செயல்பட்டு நிலத்தை ஒப்படைத்துவிடுவார்கள்.அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நிலம் கொடுக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது” என்று உறுதியளித்தார்.
வங்கியின் மூலமாக மத்திய அரசு லோன் வாங்கும் முயற்சியில் உள்ளதால் நிதி வழங்குவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது.. நிலத்தில் எந்தவித இடர்ப்பாடும் இல்லை. அரசு உடனடியாக கொடுப்பதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதில் சில பிரச்சினைகள் உள்ளன. அதையும் சரி செய்து உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.